உணர்வலைகள் - வாழ்த்துப்பா
சமுதாயச் சீர்கேட்டைச் சாடிடுவார்; நெஞ்சங்
குமுறியே தீயாய்க் கொதிப்பார்; - அமுதாம்
தமிழை மதித்திடுவார்; தாயை வணங்கி
நிமிர்வா யுரைப்பார் நயந்து .
அயர்வின்றிப் பாபுனைவார்; அன்பாய்ப் பகிர்வார்;
தயவாய்க் கருத்துரைப்பார் தாயாய் ! -நயமாய்ப்
பலகவிகள் பாங்காய்ப் படைப்பா ரவரை
நலம்வாழ வாழ்த்துவோம் நாம் .
பழமையைப் போற்றுவார்; பண்பாய் நடப்பார்;
அழகியலும் பாடுவார்,நம் அன்பர் ! -பழகும்
குணத்திற் சிறந்தவர் கொள்கையில் கோமான்
வணங்கிடும் வண்ணம் வியப்பு .
பொதுநலமே தன்னலமாய்ப் போற்றுங் குணாளா
புதுமையாய்ப் பாக்கள் படைத்தாய் - விதுலனே !
கற்கண்டு சொற்கொண்டு காதலையும் பாடினாய்
நற்கவி நாயகன் நீ !
எழுத்துதளம் சுற்றித்தான் எண்ண மிருக்கும்
பொழுதும் எழுத்தாலே போகும் - முழுமனதாய்
நேசித்தாய் நட்புகளை நீயும் தளத்தினில்
ஆசிகள் கிட்டு முமக்கு.
நாளும் கவிபடைத்து நட்புகளை ஈர்த்திடுவார்
தோளுங் கொடுத்திடுவார் தோழனாய் - ஆளுகை
செய்திடுவார் அன்பினால், சிந்தனைச் சிற்பியவர்
மெய்யுரை கேட்பது மாண்பு .
எண்ணங்கள் பாக்களாகி ஏற்றமிகு நூலாகி
வண்ணங்கள் கூடிவரும் வைபோகம் -விண்ணவரும்
வாழ்த்திடக் காத்திருப்பார் வந்தவரும் போற்றிடுவார்
வாழ்க பழனிகுமார் மாண்பு .
உள்ளத்தின் தாக்கம் உணர்வலைகள் ஆனதே
அள்ளிப் பருகுவோர்க்கு ஆனந்தம் - துள்ளிவரும்
வாசிப்போர் நெஞ்சம் வசிக்கத் துடித்திடும்
மாசில்லாப் புத்தக மே !
(12 :10:2014 - அன்று "உணர்வலைகள் " என்னும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடும்
கவிமுரசு ,கவி ஞானக்கடல் திரு . பழனி குமார் அவர்களுக்கு வெண்பாக்களால் ஒரு வாழ்த்து )
நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!!