எதற்கு வந்தாய்

கொடைக்கானலின் குளிர் மேகம் ஒன்று இலவம் பஞ்சாய் அவனையும் அவளையும் தழுவிக் கொண்டு கடக்க, ரமேஷ் மாதவியின் கைகளை சுற்றி வளைத்து அணைத்தவாறே மேடான சாலையில் நடந்து கொண்டிருந்தான்..

"ரமேஷ்! "
"சொல்லு மாதவி "
"நீங்க இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கீங்களா"
"பல தடவை..ஆனா ஒன்ன மாதிரி ஒரு அழகு பெண்ணோட வரது இப்பதான் "
" ஒ! அதான் ஐயாவுக்கு ஒரே குஷி போலருக்கு!"
தங்களை மறந்து இப்படியே பேசிக் கொண்டு ஏரியை சுற்றி நடந்து முடித்து ரூமுக்கு திரும்பும் போது இரவு மணி ஏழாகி விட்டது.

கைகளை இறுக்கமாகக் கட்டி கொண்ட மாதவி "ரமேஷ்..எனக்கு பசிக்கல்ல.. நீங்க மட்டும் போய் சாப்பிட்டு விட்டு வந்துடறீங்களா?" என்றாள்.

"எனக்கும்தான்.." என்ற ரமேஷ் கட்டிலின் மூலையில் அமர்ந்த படி டி.வி. யை ஆன் செய்தான். பழைய தமிழ் படம் ஒன்று ஒரு சேனலில் வர, சாய்ந்து அமர்ந்து பார்க்கத் தொடங்கினான்.

கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்ட மாதவியை எழுப்பி விடாமல் கவனமாக எழுந்து சென்று ஜன்னல் திரையை ஒதுக்கி விட்டு வெளியே இருட்டில் மலை முகடுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் மினுக்கும் விளக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையில் கொடைக்கானல் வந்து இறங்கியதில் இருந்து அவளிடம் இனம் புரியாத சோகம் ஒன்று இருப்பதை போல் பட்டது அவனுக்கு.
சிரிக்கிறாள்..அவன் சிரிக்கும் போது!.
மெலிதான புன்னகை மட்டுமே பல நேரம்..!
ஆவலுடன் பழக ஆரம்பித்த இந்த நான்கு மாதங்களில் அவன் காணாதது இது..

அன்று மாலை தனியாக படகு ஒன்றை பிடித்து அவளோடு படகு சவாரி செல்லும் போது கடைசியாகக் கேட்டான்.

"என்ன மாதவி .. உடம்புக்கு ஏதாவது .." என்று அவன் முடிக்கும் முன் "ஹையோ..என்ன ரமேஷ்.. இதோட எத்தன தடவ சொல்லிட்டேன் ..ஒண்ணுமில்லன்னு..!" என்று சிணுங்கினாள்..

சரி.. நாளைக்கு பார்ப்போம் என்று எண்ணிய படி அப்போதைக்கு இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தான்.

மணி பதினொன்று இருக்கும்.

சன்னல் திரையை இழுத்து மூடி விட்டு வந்து கட்டிலில் படுத்ததும்..மாதவியின் கைகள் அவன் கழுத்தை பிடித்தது..!

" ஏய்..மாதவி.."

"ரமேஷ்.. "
- என்ற படி விசும்பினாள் மாதவி.

"சொல்லு மாதவி.. " என்ற ரமேஷை அழுத்திய படி எழுந்து உட்கார்ந்தவள், திடீரென அவன் சட்டையை பிடித்து உலுக்கி எழுப்பினாள்..ஒரே இழுப்பில் அவனை எழுப்பி உட்கார வைத்து விட்டு, கட்டிலை விட்டு இறங்கியபடி சிரித்தாள்..அதுவும் ஏளனமாக..!

"ரமேஷ்.. என்ன சொன்னே .. இது தான் நீ மொத தடவையா ஒரு பெண்ணோட கொடைக்கானலுக்கு வரே ..ம்.."

"மாதவி.. " -வெளிறினான் ரமேஷ்!

"எங்க சொல்லு.. இது மொத தடவைன்னு..!"

"ஆமாம் ..நா.. சொன்னது ..."

" ஹாஹ் ..ஹ்.. ஹா ... என்னோட ... இல்லையா..!"

" இல்ல.. வந்து.. ஏய்.. மாதவி..என்ன இப்படியெல்லாம் பேசற..அதுவும் பிசாசு மாதிரி அர்த்த ராத்ரில எழுப்பி.."

" ஆமாண்டா.. அர்த்த ராத்ரில தானே நீயும் ஒன் ப்ரண்ட்சும் சேர்ந்து அழிச்சீங்க ஒரு அபலயோட வாழ்க்கைய..மறந்துடுச்சா..."

" ஏய்..நீ என்னென்னவோ சொல்ற.."- கிட்டத்தட்ட குழறினான் இதை சொல்வதற்குள்..

" என்னென்னவோ சொல்றனா.." -என்று சொல்லியபடி பேய் சிரிப்பு சிரித்தவளை பின்னாலிருந்து நெருங்கினான் ரமேஷ்.

சடாரெனத் திரும்பி அவன் கழுத்தை ஒரு கையால் பிடித்து சுவற்றின் மீது தள்ளி அப்படியே நெருக்கினாள் மாதவி..கையா அது.. இப்படி ஒரு முரட்டு தனத்தை அவன் வாழ் நாளில் பார்த்ததேயில்லை.

" டெல்லியில்தான் நடக்கணும்னு என்ன சட்டமான்னு கேட்டுகிட்டே .. அந்த இரவில் நீங்க அழிச்ச அபலைப் பெண்தாண்டா நான்..இந்த மாதவி ஒடம்புல ஏறிட்டு ஒன்ன கடைசியா அழிக்க வந்திருக்கேன்.."

" இல்ல..இல்ல.. எனக்கும் அதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல.. நீ.. நீ..நான் .. எவ்வளவோ தடுத்தும் அவனுக தான் ... அதாலே என்னக் கூட வெரட்டிடானுக .."

மறு நாள் காலை.. முதலமைச்சரின் சிறப்பு தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்த மாதவி I.P.S. முதல்வரின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.

"மிஸ்.மாதவி.. மாநிலத்தையே கலங்க வைத்த ஒரு கேசை தனியாக துப்பு துலக்கி சம்மந்தப் பட்ட கும்பலை அட்டகாசமாக மடக்கி கைது செய்திருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள்.. ஆனாலும் இந்த தைரியம் நானே எதிர்பார்க்காதது .. கங்கிராட்ஸ் .." - என்ற முதல்வருக்கு நன்றி சொல்லி மேலே உள்ள படத்தில் இருந்த அவளது அம்மாவின் படத்தை பார்த்தாள்..

அவள் கண்கள் பனித்தன..!

எழுதியவர் : கருணா (29-Sep-14, 5:38 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : etharkku vanthai
பார்வை : 178

மேலே