நெஞ்சுக்கு நிம்மதி
அந்த அரசு அலுவலகத்தின் சன்னல் கதவுகள் சாத்தப் பட்டுக் கொண்டிருந்த நேரம்..மாலை மணி ஆறு. பியூன் பொன்னுசாமியின் சிறு கனைப்பைக் கேட்டு நிமிர்ந்தார் சண்முகம்.
" சார்.. கெளம்பலையா?" என்ற அவன் குரலில் அவசரம் தெரியவே, தனது மேஜையை இழுத்து மூடி விட்டு எழுந்தார்.
"ஆமா..பொன்னுசாமி..இன்னைக்கி என் மகளை பெண் பார்க்க வராங்க.. வரேன்"னு சொல்லியபடி தனது ஜோல்னா பையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தவர் எதிரில் உள்ள கடற்கரையை ஒரு கணம் பார்த்தார்.
ஓயாத அலைகளை பார்க்கையில் அவரது பதினெட்டாம் வயதில் இருந்து ஓயாமல் அவரை துரத்தி வரும் கஷ்டங்களும் கடன் தொல்லைகளும் நினைவுக்கு வரவே , அங்கிருந்து மெதுவாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ஒன்றிரண்டு மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததும் அண்ணாந்து வானத்தை பார்த்தார். தெளிவாக இருந்த வானத்தையும் ஒன்றிண்டு மழை துளிகள் விழுவதை பற்றி யோசிக்கையில் வறண்ட தனது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த அன்பு மனைவியும் மகளையும்
போன்ற சில ஈரத் துளிகள் என்பது போல் பட்டது..
வீட்டை நெருங்கியவர் தனது வீட்டின் முன் நிற்கும் கப்பல் போன்ற காரை பார்த்ததும் சற்று திகைத்து நின்றார். மாப்பிள்ளை வீடு கொஞ்சம் வசதிதான் என்று சொன்ன தரகரின் வார்த்தைகள் நினைவுக்கு வர, வாசலில் செருப்பை கழற்றி விட்டு வீட்டினுள் நுழைந்தார்.
" வாங்க..வணக்கம்.. " என்ற படி வந்திருந்தவர்களை புன்னகையோடு வரவேற்றவர் மனைவி பாக்கியத்தை ஏறிட்டு பார்த்தார்.
வைர மோதிரங்கள் மின்ன பணக்காரர் என்று பார்த்தவுடன் யாரும் சொல்லிவிடும் வகையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையின் தகப்பனார் தான் முதலில் பேசினார்.
"மிஸ்டர் சண்முகம்..என் பேர் வையாபுரி. இது என் சம்சாரம் ஜானகி. பையன் டாக்டர் சரவணன்.M.D... அப்புறம்.. என்னை உங்களுக்கு தெரியாது.. ஆனா உங்கள எனக்கு நல்லாத் தெரியும்" என்று சொல்லி மெலிதாக சிரித்தார்.
" சாரி..நாங்க கொஞ்சம் முன்னாடியே வந்திட்டோம்.. ஏதோ கட்சி ஊர்வலம் காரணமாக லேட்டாகிடும்னு டிரைவர் சொன்னதாலே...தப்பா எதுவும் நெனச்சிக்காதீங்க ." என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசிய அவரை மறித்து " அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. " என்று சொல்லியபடி அமர்ந்தார் சண்முகம்.
" உங்க பெண்ணுக்கு போன மாசம் நடக்க வேண்டிய நிச்சயதார்த்தம் கூட நின்னு போச்சின்னு கேள்விப்பட்டேன்.. தரகர் ஒங்க பெண்ணோட ஜாதகத்த கொடுக்கும் பொது நீங்க இத என்னிடம் அவசியம் சொல்லச்சொன்னதாகவும் சொன்னார்."
சற்றே நெளிந்த சண்முகம் " அது வந்துங்க.." என்று சொல்லி விட்டு மனைவியை மீண்டும் பார்த்தார்.
"பெரிய காண்ட்ராக்டர் வீட்டு சம்மந்தம்.. தானாக தேடி வந்தது.. நகரத்தின் முக்கிய புள்ளிகளில் முதன்மையானவர்..சம்மந்தியாக வந்திருக்க வேண்டியவர்..இல்லீங்களா.." என்று அடுக்கினார் வையாபுரி.
"ம்..ஆமாங்க.. அது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு தோணுச்சு.. விட்டு போச்சு..இப்ப எதுக்கு அத பத்தி.. அவங்க உயரத்துக்கு நாங்க ஏணி வச்சாலும் எட்ட முடியாதவங்க..என்னால அவங்களுக்கு ஈடு கொடுக்க முடியாதுன்னு பட்டதால் கடைசியில நிச்சயத்தையே நிறுத்த வேண்டியதா போயிடுச்சு.." என்று அமைதியாக சொன்னார் சண்முகம்.
சீட்டின் நுனி வரை வந்து அவரை அன்புடன் பார்த்த "இது தாங்க..இந்த பண்பு தாங்க என்ன உங்களிடம் கொண்டு வந்துச்சுன்னு நெனக்கிறேன்..அந்த கான்ட்ராக்டர் ஒங்க பெண்ணை பார்த்துட்டு போனதும், ஒங்க பதவிய வச்சி அவருக்கு சாதகமா அவர் பல கோடிகளை தவறான முறையில் சம்பாதிக்க, சில வேலைகளை செய்யச் சொல்லி ஒங்களுக்கு தூது அனுப்பினதும்.. அதற்கு ஈடாக..தம்பிடி செலவில்லாம..ஒங்க பெண்ணை தன் பிள்ளைக்கு மணம் முடித்து கொள்ளவும் ஆசைப்பட்டு உங்களுக்கு ஆசை காட்டினதும் கூட எனக்கு தெரியும்..அவரது பிள்ளையின் குணம் பற்றி தெரியா விட்டாலும் வாழ்க்கையில் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் முப்பது வருஷமா ஒரு நேர்மையான அரசு அதிகாரியாய் வாழ்ந்து விட்ட ஒங்களால இப்படி விலை போக முடியாது என்பதால் நேர்மையான முறையில டெண்டர் விட்டு ..நேர்மையின் பிள்ளையாக நின்று விட்டீங்கன்னும் தெரிஞ்சிகிட்டேன்..ஆனா எதுவுமே நடக்காதது போல மென்மையா ...இப்ப நீங்க பேசினது வரைக்கும்...என்னால நம்பக் கூட முடியல.."
பிரமிப்போடு பார்த்த சண்முகம், " வந்து..இதெல்லாம்..எப்படி" என்று இழுத்தார்.
"அது ஒண்ணுமில்லீங்க.. அந்த டெண்டர எடுத்தது நான்தான்.. கடைசி வரையிலும் நம்பிக்கையே இல்லீங்க எனக்கு.. என்னென்னவோ சொன்னாங்க.. யார் யாரையோ பார்க்கணும்னு எல்லாம் சொன்னங்க.. எனக்கு அப்படி பிசினஸ் பண்ண விருப்பம் இல்லாததால ஆண்டவன் விட்ட வழின்னு பேசாம கிடந்தேன்..என் மேனேஜர் வந்து சொன்னப்புறம் தான் இவ்வளவும் தெரிஞ்சது.." என்று முறுவலித்த வையாபுரி மேலும் தொடர்ந்தார்..
" அப்புறந்தான் யோசிச்சேன்.. இப்படி ஒரு மனிதர் வீட்டு சம்மந்தம் எங்களுக்கு கிடைக்க வேணும்னு..ஒங்க வளர்ப்பும் அப்படிதானே இருக்கும்.."
கண்களை துடைத்த படி சண்முகம், "சார்.. எங்கப்பா கங்காதரம் பிள்ளை எனக்கு வேலைக்கு ஆர்டர் வந்து சேரப் போகும் போது சொன்ன திருக்குறள் தான் என்னை இன்னக்கி வர நடத்திகிட்டிருக்கு ..அது ..
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்...
அதோட அர்த்தம் ...
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார். - என்கிறதுதான்.
மத்தபடி இதுக்கு மேல நான் எதுவும் பெரிசா செஞ்சிடல..இது தான் என் நெஞ்சுக்கு நிம்மதி " என்றார்.
மாபிள்ளையின் அம்மா அதுவரை பொறுத்திருந்து விட்டு அவசரமாக " பெண்ணை வரச் சொல்லுங்க" ன்னு சந்தோஷமாக கூற அங்கே கல்யாண களை கட்ட ஆரம்பித்தது.
மாப்பிள்ளை சரவணன் முகத்தில் பெரும் நிறைவுடன் புன்னகைத்தான்.