நீதி மூலம் -சந்தோஷ்

சில தவறுகள்
பல குற்றங்களுக்கு விடயங்கள்.
சில தப்புகள்
பல குற்றங்களின் தடயங்கள்.
-----------
சில சரிகளின் சூத்திரங்கள்
பல தவறுகளின் ஆதாரம்.
சில தவறுகளின் மூலங்கள்
பல சரிகளின் அவதாரம்.
-----------
உண்மையென்று நம்பும் மாயைகள்
பொய்மை கண்ணாடிகளின் பிம்பங்கள்.
வெறு’மையில் எழுதும் வழக்குகள்
மெய்’மையில் எழுதமுடியா தீர்ப்புகள்.
-----------
பிறப்பால் எவரும் குற்றவாளியில்லை
வளர்ப்பாலும் யாரும் குற்றவாளியில்லை
வெறுப்பால் கூடா நட்பால் -சூழ்நிலை
நெருப்பால் வார்க்கப்படுகிறாள்(ன்) குற்றவாளியாக.!
-----------

பிழைகள் பெற்றெடுக்கும்
குற்றவாளியெனும் பிள்ளைகளை.
அனுபவங்கள் சொல்லிக்கொடுக்கும்
வாழ்க்கையெனும் நீதியினை.

வாழ்க்கையின் அனுபவம் என்பதே
நமக்கு நாமே மறைக்கப்பட்டு
நமக்கு நாமே ஏமாற்றிக்கொள்ளப்பட்ட
பிழைகளின் மொத்த சுயரூபமே.

யோக்கியர்களே...!

உங்கள் மனசாட்சியின் நீதிமன்றத்தில்
புலன்விசாரணை செய்து பாருங்கள்.
பல தவறுகள் உங்களை விசாரிக்கும்
பல குற்றங்கள் உங்களை கைதுசெய்யும்.

ஆம் நாமும் குற்றவாளிகளே..!

தீர்ப்பு எழுதிய நீதிபதியும்- இந்த
கவிதை எழுதிய நானும் -இதை
படித்துக்கொண்டிருக்கும் நீங்களும்
மனசாட்சி மன்றத்தில் எப்போதும்
வாய்தா வாங்கியே தினம்தினம்
தப்பித்துக்கொண்டிருக்கும் குற்றவாளிகளே..!


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (8-Oct-14, 8:29 am)
பார்வை : 428

மேலே