மனிதன் இல்லை புரிஞ்சிக்கோ

கொள்கை மாறும் கொள்கை வளர்க்க
==குரங்கு வளர்க்கப் பழகிக்கோ
கொள்ளை அடித்து மாட்டா திருக்கக்
==குள்ள நரியை வளர்த்துக்கோ
முள்ளாய்க் குத்தும் மூர்க்கத் தனமா..!
==முள்ளம் பன்றி வளர்த்துக்கோ
கள்ளக் கூட்டத் தலைவ னாக
==கடுவன் பூனை வளர்த்துக்கோ

நன்றி மறந்து வாழும் நீயும்
==நன்கே அரணை வளர்த்துக்கோ
அன்றேல் நாயை நீயுன் பக்கம்
==அண்ட விடாமல் பார்த்துக்கோ
கொன்று குவிக்கும் எண்ணம் ஓங்க
==காட்டுப் புலியோ டுரங்கிக்கோ
என்றும் தலைவன் என்றே இருக்க
==எளிதாய் சிங்கம் வளர்த்துக்கோ

பள்ளம் பறிக்கும் கலைகள் கற்க
==பன்றிக் கூடம் சென்றுக்கோ
உள்ளம் என்பதை மறந்து விடவே
==ஓநாய்ப் பாடம் படிச்சுக்கோ
துள்ளத் துடிக்க துண்டித் திடவே
==தோளில் கழுகை சுமந்துக்கோ
புல்லு ருவியா யிருப்ப தற்கோ
==பறவை மலவிதை யாகிக்கோ

விலங்கு இனமாய் வாழும் வகையை
==விருத்தி செய்யும் மானுடனே
கலங்கும் இனமாய் மனிதம் இருக்க
==கனவு காணும் வீணினமே
விலங்கு குணங்கள் எல்லாம் எடுத்து
==வெற்றி வாகை சூடிக்கோ
மலரும் அந்நாள் தன்னில் நீயும்
==மனிதன் இல்லை புரிஞ்சுக்கோ!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-Oct-14, 2:50 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 93

மேலே