பொம்மை மிட்டாய்
பாப்பா இங்கே வந்து பாரு
பம்பாய் மிட்டாய் வருது பாரு
டோப்பா அணிந்த பொம்மை பாரு
டோலக்கு போட்ட அழகைப் பாரு !
தங்கச் சங்கிலி அணிந்த பொம்மை
தங்கச்சி உன்னை அணைக்கும் பொம்மை
மூங்கில் கம்பில் மூடிய மிட்டாய்
வாங்கிக் கொள்ள அழைக்கும் பொம்மை !
பட்டாம்பூச்சி மிட்டாய் வேணுமா ?
பதக்கம் மோதிரம் செஞ்சு தரணுமா ?
வட்ட வடிவ வாட்சு வேணுமா ?
கப்பல் பிளேன் இன்னும் கேளம்மா !
சீனிப் பாகில் செய்த மிட்டாய்
சிவப்பு மஞ்சள் ஜவ்வு மிட்டாய்
போணி பண்ண ஓடு பாப்பா
போட்டால் உருகும் வாயில் சிவப்பா !
ஓசி மிட்டாய் தருவார் மாமா
ஒட்டி வைக்க கன்னம் கொடும்மா
காசு கொடுத்து பாப்பா வாங்க
கையைத் தட்டும் பொம்மை தாங்க !