சொல்லாதே யாரும் கேட்டால்

பண்டைக் காலத்தில் வயதில் இளைஞனான ஓர் அரசன் இருந்தான். அவன் எப்போதும் இன்ப வாழ்விலேயே மூழ்கி இருந்தான். இதனால் அரசியல் வாழ்வில் பல தொல்லைகள் ஏற்பட்டன. அரசன் எதிர்பார்த்தபடி கவலையில்லாமல் இன்பம் துய்க்க முடியவில்லை. இன்பம் நாடிய இடமெல்லாம் துன்பமும், கவலையும் பெருகின.
-
ஒருநாள்-
அரசன் தலைநகரிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள காட்டில் வேட்டையாடச் சென்றான். வழியில் ஒரு விறகு வெட்டி, விறகு வெட்டிக் கொண்டிருந்தான்.
-
அருகே அவன் மனைவி, வெட்டிய விறகை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி நடமாடிற்று. கவலையின் சிறு தூசு கூட இருவர் முகத்திலும் இல்லை.
-
“எவ்வளவோ செல்வமும், வாய்ப்பு நலங்களும் இருந்தும் நமக்குக் கவலை இல்லா இன்பம் கிட்டவில்லை. இந்த ஏழை விறகு வெட்டிக்கு அது எப்படி எளிதாகக் கிட்டிற்று. இதைக் கேட்டறிய வேண்டும்’ என்று அரசன் எண்ணினான். அவனை அணுகி அரசன் பேச்சுக் கொடுத்தான்.
-
“”அன்பனே, நீ எப்படி இவ்வளவு இன்பமாகக் கவலையில்லாமல் வாழ முடிகிறது?” என்று கேட்டார் அரசர்.
“”நானும், என் மனைவியும் விறகு வெட்டி விற்கிறோம். இதில் வருகிற வருவாய் எங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆகவே, நாங்கள் இன்பமாக இருக்கிறோம்,” என்றான் விறகுவெட்டி.
-
“”அப்படியா? இந்தச் சிறு வருவாய் உங்கள் செலவுகள் எல்லாவற்றுக்கும் முழுவதும் போதுமானதாய் இருக்கிறதா?” என்று கேட்டார் அரசர்.
-
“”ஆம்… செலவுக்கு மட்டுமல்ல, என்னால் அதில் சிறிது சேமித்தும் வைக்க முடிகிறது!” என்றான்.
“”சேமித்து வைக்கிற தொகையை நீ என்ன செய்வாய்?” என்றார் அரசர்.
-
“”அதை நான்கு கூறாகப் பிரிக்கிறேன். முதற் கூற்றை நான் மண்ணில் புதைக்கிறேன். இரண்டாம் கூற்றைக் கொண்டு என் பழங் கடன் அடைக்கிறேன். மூன்றாவது கூற்றை நான் ஆற்றில் எறிகிறேன். நான்காவது கூறு என் எதிரிக்குச் செல்கிறது,” என்றான்.
-
அரசனுக்கு விறகுவெட்டி கூறியது ஒன்றும் புரியவில்லை.
-
“”இது என்ன? புதிர் போடுகிறாய் போலிருக்கிறதே! சேமித்து வைக்கும் உனக்குக் கடன் ஏது? பணத்தை யாராவது புதைத்து வைக்கவோ ஆற்றில் போடவோ, எதிரிக்குக் கொடுக்கவோ செய்வார்களா?” என்றார் அரசர்.
-
“”ஆம். நான் புதிர்தான் போடுகிறேன். உங்களிடம் தனியாகப் புதிரை விளக்கிக் கூறத் தடையில்லை?” என்றான்.
அரசன் தன் ஊழியர்களையும், விறகு வெட்டியின் மனைவியையும் விட்டு, விறகுவெட்டியைச் சற்று அப்பால் கூட்டிக் கொண்டு சென்றான். விறகுவெட்டி தன் புதிருக்குத் தானே விளக்கம் தந்தான்.
-
“”என் மீட்புப் பொருளில் முதற்கூற்றை நான் மண்ணில் புதைக்கிறேன் என்று சொன்னேன். அது நான் ஏழை எளியவர்களுக்காக உதவும் சிறு பொருள். மண்ணுக்குள் புதைத்து வைத்த நெல் முதலிய கூலமணிகள் வீணாய்ப் போவது போலத் தோற்றுகின்றன. ஆனால், நிலம் நமக்கு அவற்றைப் பன்மடங்காக வளர்த்துத் தருகிறது. ஏழை எளியவருக்குச் செய்த உதவியும் உடனடியாகப் பயன்தரா விட்டாலும், நம் இனத்தை வளர்த்து நமக்குப் பன்மடங்காகப் பயனைத் தருகிறது.
-
“”இரண்டாவது கூற்றை, நான் பழங் கடனுக்குப் பயன்படுத்துகிறேன். நாம் எவ்வளவு கொடுத்தாலும் என்ன செய்தாலும் தீராத கடன், நம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையே. இவ்வகையில் இரண்டாம் கூறு செலவிடப்படுகிறது.
-
“”மூன்றாவது கூற்றை, நான் ஆற்றில் எறிந்து விடுகிறேன். நம் இன்பங்களுக்காக நாம் செலவு செய்யும் பணம் ஆற்றில் எறியும் பணம்போல நம் கையை விட்டு வீணாகப் போய்விடுகிறது. இது ஆற்றில் எறிவது போலத்தான்.
நான்காவது கூறு, என் எதிரிகளுக்குச் செல்கிறது. நம் நெஞ்சிலுள்ள மறை மெய்மைகளை வாங்கி அவற்றை அடக்கிக் கொள்ள முடியாமல் தூற்றும் பெண்களே நம் எதிரிகளாவர். அவர்கள் வீணான இன்பப் பகட்டுவாழ்வு நாடுபவர்கள். நம்மையும், இன்பம் நாடவைத்துப் பின் துன்பத்துக்கு ஆளாக்குபவர்கள். அவர்கள் இன்பப் பகட்டுகளுக்காகச் செலவு செய்யும் பணந்தான் நம் எதிரிகளுக்கு நாம் கொடுக்கும் பணம் ஆகும்.”
-
அரசன் விறகுவெட்டியின் கூர் அறிவை வியந்து பாராட்டினான். ஆனால், அவன் விளக்கங்களில் முதல் மூன்றைமட்டுமே அவன் ஒத்துக்கொண்டான். பெண்களைப் பற்றிய கடைசி விளக்கம் தவறானது என்று கருதினான்.
-
“”அரசே, செயலறிவு மூலம் இதன் உண்மையை நீங்களே உணரலாம்,” என்றான் விறகுவெட்டி.
-
அரசன் சிறிதுநேரம் சிந்தித்தான். பின் விறகு வெட்டியைக் கூட்டிக்கொண்டு அவன் மனைவியும், தன் ஊழியரும் நின்ற இடத்துக்கு வந்தான். யாவரும் அறிய விறகு வெட்டியிடம், “”இந்த நான்கு புதிர்களின் விளக்கத்தையும் வேறு யாரிடமும் கூறாதே, கூறினால், உன் தலையை வாங்கி விடுவேன்,” என்று எச்சரித்துச் சென்றான்.
-
அரசன் அரண்மனைக்குச் சென்றதும் விறகுவெட்டி சொன்ன நான்கு புதிர்களையும் பெரிய தாள் அட்டைகளில் எழுதுவித்தான். நாட்டின் பல பகுதிகளிலும் அவை பொதுமக்கள் காண வைக்கப்பட்டன.
-
இப்புதிர்களுக்கு விளக்கம் தருகிறவர்களுக்கு அவர்கள் தலையளவு பெரிய தங்கப்பிழம்பைப் பரிசளிப்பதாகப் பறை சாற்றுவித்தான். மாதங்கள் பல சென்றன. யாராலும் புதிர்களுக்கு விடையளிக்க முடியவில்லை.
-
விறகு வெட்டியின் மனைவியின் காதுக்கு இச்செய்தி தெரியவந்தது. புதிர்கள் கணவன் அரசனிடம் சொன்ன புதிர்களே என்பதை அவள் அறிந்தாள். கணவன் அவற்றைத் தனியாகச் சென்று அரசனுக்கு விளக்கி யதையும், அவற்றை யாருக்கும் வெளியிடக் கூடாது என்று அரசன் கண்டிப்பாகக் கூறியதையும் அவள் நேரடியாகக் கேட்டிருந்தாள்.
அரசன் பரிசுச்செய்தி தெளிவதற்கு முன்பே அவள் கணவனிடம் பசப்பிப்பேசி, தான் யாரிடமும் கூறுவதில்லை என்ற உறுதியுடன் அந்த விளக்கங்களைக் கேட்டறிந்திருந்தாள்.
-
விளக்கங்களை இப்போது அரசனிடம் கூறி அந்தப் பரிசைப் பெறலாம் என்ற ஆவல் ஒருபுறம் அவளை வாட்டிற்று. அதைக் கணவன் தன்னிடம் சொல்லி விட்டால், அவன் தலை போய் விடுமே என்றும் அவள் தனக்குள்ளாகக் கவலைப்பட்டாள். ஆயினும் இறுதியில் பண ஆவல் கணவன் உயிர் பற்றிய எண்ணத்தை வென்றது.
-
அவள் அரசனிடம் சென்று புதிர்களுக்குச் சரியான விளக்கங்கள் தந்தாள்.
-
அரசன் தான் பறைசாற்றியிருந்தபடி அவளுக்குப் பரிசுகள் தந்தான்.
அவள் போகுமுன் அரசன் அவளைக் கூர்ந்து கவனித்தார்.
“”உன்னை எங்கோ இதற்குமுன் பார்த்திருக்கிறேனல்லவா?” என்று கேட்டார் அரசர்.
-
“”ஆம், அரசே! நீங்கள் காட்டில் சந்தித்த விறகு வெட்டியின் மனைவிதான் நான்,” என்றாள்.
“”புதிர்களுக்கான விளக்கம் உனக்கு எப்படித் தெரிந்தது?”
“”என் கணவரிடமிருந்து அறிந்தேன் அரசே!” என்றாள் விறகு வெட்டியின் மனைவி.
மன்னன் உடனே விறகு வெட்டியை வரவழைத்தான்.
-
“”என் கட்டளையை மீறிப் புதிர்களின் விளக்கங்களை உன் மனைவியிடம் ஏன் தெரிவித்தாய்?” என்று கேட்டார்.
“”என் மனைவியிடம் கொண்ட பாசத்தால் அறிவிழந்து தவறாகக் கூறிவிட்டேன். மன்னிக்க வேண்டும்,” என்றான் விறகுவெட்டி.
-
“”மனைவியின் பாசத்தால் என்னை மீறினாய். மனைவியின் பாசத்துக்காகவே உயிர் இழக்கக் கடவாய்!” என்றான் மன்னன்.
-
காவலர் விறகுவெட்டியை நெக்கித் தள்ளிக் கொண்டு போயினர். போகும் சமயம் அவன் அரசனைப் பார்த்து, “”நான் தவறு செய்தது உண்மை அரசே! அதற்காகத் தண்டனையும் பெறுகிறேன். ஆனால், என் நான்காவது புதிர் உண்மை என்பதை என் தண்டனை மெய்ப்பிக்கிறது. இன்பப் பகட்டு விரும்பும் பெண்மையை நம்பித்தான் நான் கூறினேன். அது உண்மையாகி விட்டது பார்த்தீர்களா?
-
அரசன் விறகு வெட்டியின் ஆழ்ந்த உலகியல் அறிவை மதித்து, அவனை விடுவித்துப் பரிசுகள் பல கொடுத்து அனுப்பினான்.
அதிர்ச்சி*

சிறுவர் மலர்

எழுதியவர் : சிறுவர் மலர் (13-Oct-14, 3:54 pm)
பார்வை : 166

மேலே