நெஞ்சக் கீறல்கள்

மழை வரும்போதெல்லாம்
குடை தேட
மறுக்கிறது என் மனசு
ஈரமாய் விழும் தூறல்கள்
உன் நினைவுகளில்
தகிக்கும் மனசை சற்று
ஆற்று படுத்திவிட்டு போகிறது.

தொலைந்து போன என்
ராகங்களை
எந்த புல்லாங்குழல்
கண்டெடுத்து தரும்.

காற்று வாங்க
கடற்கரைக்கு போகும் போதெலாம்
கனவுகள் வாங்கி வருகிறேன்

கண்களால் பேசி சிரித்து
காதல் வளர்த்தோம்
இன்று
கண்கள் கசிந்து
விலகி வாழ்கிறோம்

வாழ்க்கை
நம் வழக்கை
ஏனோ
வாய்தா கேட்காமலேயே
ஒத்தி வைத்து வருகிறது
ஒருவேளை
பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு
விசாரணைக்கு அழைத்து
நம்மை
வேறு வேறு கிரகத்து சிறைக்கு அனுப்புமோ?

அது இருக்கட்டும்
எப்படி இருக்கிறாய்?
உன் பிறை நிலா நெற்றியில்
குங்குமமும்
பிள்ளை நிலா உதட்டில்
புன்னகையும்
பஞ்சுப் பாதங்களில்
மெட்டியும்
பனிப் பார்வைகளில்
வசீகரமும்
என்றும் நிலைத்து இருக்க வேண்டி
அனு தினமும்
அர்ச்சனை மலர்களை
சமர்பிக்கிறேன்

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (21-Oct-14, 5:40 pm)
Tanglish : nenjak keeralkal
பார்வை : 76

மேலே