ராஷ்மி
பரபரவென்று சுற்றிக் கொண்டிருந்தாள் ராஷ்மி. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கணவன் அர்ஜூனுடைய உறவினர்கள் வந்து விடுவார்கள். ராஷ்மியின் சின்ன மாமனார் அதாவது அர்ஜூனின் சித்தப்பா, சித்தி அவர்களின் இருபது வயது மகன் ஜீவா, கொழுந்தனார் விஜய், அவன் மனைவி அகிலா, அவர்கள் மகள் மூன்று வயது சோபனா, நாத்தனார் கமலி, அவள் கணவன் ராகேஷ், அவர்களின் குழந்தைகள் ஆறு வயதுக்கு உட்பட்ட சங்கரி, புனித், தவிர ராகேஷின் அண்ணன் தாமோதரன்...
ராஷ்மி மணி பார்த்தாள். மணி மதியம் ஒன்று பத்து. பன்னெண்டு மணிக்கு ஏழு வயது மகன் வியாசிடம் “சாம்பார் புவ்வா வேணுமா, இல்ல தயிர் புவ்வா வேணுமா” என்று கேட்டிருந்தாள். “இரும்மா, யோசிக்கிறேன்,” என்று சொன்னவன் இன்னும் யோசிக்கிறான்- ஒரு மணி நேரமாக.. ! விருந்தினர்கள் வந்து விட்டால் அவனை கவனிக்க முடியாது. அதற்கு முன்னால் அவன் வயிற்றுக்கு எதையாவது போட்டு விடலாம் என்றால் ஏரோப்ளேன் பைலட்டோ ரயில் எஞ்சின் டிரைவரோ எவனாகவோ விளையாடிக்கொண்டே இருக்கிறான். அவளாக எடுத்துப் போட்டுக்கொண்டு போனால் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பான்; ஒரு பருக்கை வாய்க்குள் போவதற்குள் தாவு தீர்ந்து விடும்!
லட்டு, ரவா கேசரி, கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார், சுண்டைக்காய் காரக்குழம்பு, வெண்டை பொரியல், வாழைத்தண்டு கூட்டு, நெய், ரசம், தயிர், மோர், அப்பளம், வடை, ஊறுகாய், வாழைப்பழம், பீடா, ஐஸ் க்ரீம்- எல்லாவற்றையும் டேபிளில் ரெடியாக வைத்தாயிற்று!
வாழையிலையை நறுக்கி கழுவி வைத்தாயிற்று. சமையலறை கசகசப்பு போக, முகத்தைக் கழுவி, கூந்தலை ஒதுக்கி, சேலையா சுரிதாரா என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தி சேலையை தேர்ந்தெடுத்து அணிந்தாள்.
வாசலில் சத்தம் கேட்டது. அர்ஜூன் விருந்தினர்களோடு உள்ளே நுழைந்தான். “வாங்க வாங்க” என்று அழைத்த தாயோடு வியாசும் சேர்ந்து கொண்டான். சின்ன மாமனார் ஒரு பந்தை வியாஸ் கையில் கொடுத்து விட்டு திராட்சைப் பழங்களை ராஷ்மியிடம் கொடுத்தார். குழந்தைகள் வீட்டுக்குள் வட்டமடிக்க ஆரம்பித்தனர்.
நலம் விசாரித்தல்கள் முடிந்து கை கால் அலம்பச் சொல்லி சாப்பிட அழைத்தாள் ராஷ்மி.
அனைவரும் டிவி இருந்த முன்னறையைத் தேர்ந்தெடுத்தனர். டிவியை பார்க்க வசதியாக பெட்ஷீட் விரித்து அரை வட்டமாக அமர்ந்து கொண்டனர். வியாஸ் ஓரம் கட்டினான்.
சாப்பாடு பரிமாறி பதார்த்தங்களை வைத்தாள் ராஷ்மி. “அண்ணி, சைட் டிஷ் வேணும்” என்றான் விஜய். ராஷ்மி விழிக்க, “அவன் டிவியைச் சொல்றான்” என்று விளக்கினான் அர்ஜூன்.
நகைச்சுவை சானலை பார்த்துக்கொண்டே சாப்பிடத் தொடங்கினர். அர்ஜூன் அவர்களோடு ஒன்றி விட்டான். ராஷ்மி கூட்டத்திலும் தனிமையை உணர்ந்தாள். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது அவளுக்குப் பிடிக்காது. அடுத்தாற் போல மெகா சீரியலுக்கு சானல் மாறியது. ’கங்கை வரும்‘ கதாநாயகி பிழியப் பிழிய அழுதாள். சின்னம்மா, அகிலாவின் கண்களில் கண்ணீர்; காரணம் சீரியலா சமையலா என்பது தெரியாமல் திகைத்தாள் ராஷ்மி. கமலி டிவி பார்த்தபடி புனீத்தின் மூக்கில் சாதம் வைக்கப் போனாள்!
ஜீவா தன் பங்குக்கு ஸ்போட்ஸ் சானலை மாற்றினான். கிரிக்கெட். இந்தியா தன் விக்கெட்டை பறி கொடுக்க “ச்சீ” என்றபடி தட்டில் சாதத்தை தூக்கிப் போட்டான்!
ஒரு வழியாக சாப்பிட்டவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் புறப்பட்டார்கள். வீட்டில் இருந்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் ராஷ்மியின் முகம் பார்த்துப் பேசியது பதினைந்து நிமிடங்கள்தான். அவள் சமையல் எப்படி இருந்தது? அவள் சாப்பிட்டாளா இல்லையா- அர்ஜூன் உட்பட யாரும் விசாரிக்கவில்லை. ராஷ்மி இதையெல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை. கணவர் அழைத்து வருபவர்களை உபசரித்து அனுப்புவது இல்லத்தரசியின் கடமை. இதற்காக விழா எடுக்கவா செய்வார்கள்?
அர்ஜூன்-ராஷ்மி ஜாதகப் பொருத்தம் நன்றாயிருந்தது. மற்றபடி அர்ஜூனின் நிறம், படிப்பு, வேலை இவற்றோடு ஒப்பிடும் போது ராஷ்மி ஒரு மாற்றுக் கம்மிதான். அதனால் அர்ஜூனின் உறவினர்கள் வியாஸ் பிறந்த பிறகும் அர்ஜூன் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம் என்ற ரீதியில் பேசுவார்கள். ராஷ்மிக்கு ஆரம்பத்தில் அவர்கள் பேச்சு கஷ்டமாய் இருந்தது; பிறகு பழகி விட்டது.
ராஷ்மிக்கு பசி உயிர் போனது. ஒரு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விடுபவள் அவள். இப்போது மணி மூன்றாகப் போகிறது. சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள். பாத்திரங்களை சிங்க்கில் போட்டு ஊற வைத்தாள். சாப்பிட தட்டை எடுக்கும் போது வியாசின் ஞாபகம் வந்தது.
குழந்தை இன்னும் சாப்பிடவே இல்லையே?
எல்லா பதார்த்தங்களும் காலியாகி விட்டிருந்தன. கொஞ்சம் சாம்பாரும் ரசமும் தயிரும்தான் மிச்சமிருந்தது. அவளாக ஒரு கிண்ணத்தில் தயிர் சாதமும், இன்னொரு கிண்ணத்தில் நெய் ஊற்றி சாம்பார் சாதமும் பிசைந்து கொண்டாள். வியாசிடம் போனாள்.
“நான்தான் யோசிக்கறேன்னு சொன்னேனில்ல,” வியாஸ் சிணுங்கினான். “என்ன புவ்வா கொண்டுட்டு வந்தே?”
“டபிள் புவ்வா ராஜா” - கிண்ணங்களைக் காட்டினாள்.
“எனக்கு வெஜிடபிள் பிரியாணி வேணுமே”
ராஷ்மி கபகபக்கும் வயிற்றை அழுத்திக் கொண்டாள். இவன் வேறு படுத்துகிறானே. வெஜிடபிள் பிரியாணி அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்தான். இப்போது எங்கே போவது?
“அம்மா நாளைக்கு செஞ்சு தாரேனே?”
வியாஸ் ஓடிப்போய் ஹாட்பேக்கை எடுத்து வந்தான். மூடியைத்
திறந்தால்.. மூன்று பேர் சாப்பிடும் அளவு கமகம பிரியாணி, பன்னீர் மசாலா, தயிர் பச்சடி!
“பிரபு அதான் எதிர் வீட்டுப் பையன்..அவன் மார்க்கெட்டுல காணாம போயிருந்த போது நீ கண்டு பிடிச்சி கொடுத்தேயில்லே, அதுக்காக ஆன்ட்டி உனக்கு கிப்ட்டா என்ன கொடுக்கிறதுன்னு என்னை கேட்டாங்க. நான்தான் எங்கம்மா நல்லா சமைப்பாங்க; ஆனா அப்பாவுக்கும் எனக்கும் பிடிச்சதை மாத்திரம்தான் சமைக்கிறாங்க. ஒரே ஒரு தரம் அவங்களுக்குப் பிடிச்சதை சமைச்சு தர்றீங்களான்னு கேட்டேன்... கொடுத்தாங்க. நானும் உள்ளே வந்திருந்தா இது உனக்கு கிடைச்சிருக்காது!” கையை விரித்தான்.
ஸ்பூனில் பிரியாணியை அள்ளியெடுத்து இரண்டு மூன்று முறை ஊதி தாயின் வாயில் ஊட்டினான்.
“ஏம்மா, நான் சின்னப் பையன்தானே? உனக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சுதானே சொல்ல முடியும்? அதுக்குள்ள அவசரப்படுறே?”
ராஷ்மி மகனின் உருவில் தாயைக் கண்டாள்.

