எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் -கடைசி பாகம்மூன்று -கவிஜி
மழை.... மழை.....
கண் படும் இடமெல்லாம் கண் பட்ட மழைத் துளிகள் இல்லை இப்போது.... கண்ணீர் பட்ட துளிகளாய் செந்நீர் கொதிக்கும் விழிகளாய்... எட்டு திசைக்கும் கத்திப் பொசுக்கும்.. கோஷங்களில்
தோட்டாக்களாய் மழை, துளைக்க துளைக்க........."கோழையே சுடு..... நீ சுடுவது வெறும் "சே" வைத்தான்.... சே விதைத்த தோட்டாக்களை அல்ல....."என்ற வாசகம் தாங்கிய உடை அணிந்த ராம்வசந்த் அந்த போராட்ட கூட்டத்திற்கு தலைமை வகித்து நின்று கொண்டிருந்தார்.....
அவரின் கண்கள் மழைக்குள் தவறிய மீன்களாய் துள்ளின.... பெரு மூச்சு விடும் கோபம்.... அவர் மேல் படும் துளிகளை சூடாக்கிக் கொண்டு இருந்தது....... பத்து விரல்களிலும் பத்து ஆயுதங்கள்..... பத்தாது ஆயுதங்கள்..... என்றது ஆழ் மனக் கதறலின் பெரு வெடிப்பு... அவன் இவன்.. அவரு இவரு... அந்தாளு இந்தாளுனு எல்லாரும் சேர்த்து சேர்த்து அடக்கி அடக்கி வைச்ச எரிமலை இன்னைக்கு கொதிச்சு குமுறிக் கொண்டு திமிருகிறது.... என்ன தான் பண்ண... ஏதாவது பண்ணணும்ல....
"இயற்கையால பார்த்து பார்த்து... பரிணாம வளர்ச்சில தன்னை செதுக்கி செதுக்கி தன்னை காத்துக்கிட்டு, நாகரீகத்துக்குள்ள நுழையற அளவுக்கு வளர்ந்து நின்னு .. பக்குவப்பட்ட இன்பங்களுக்கான வாழ்க்கையும், சிந்தனைகளும் கிடைக்க கோடி வருசத்த தாண்டி வந்துருக்கு மனித குலம்....... ஆனா இந்த மாதிரி சில கேவலமான மனித ஜந்துக்கள்....இன்னும் பின்னோக்கி மூளைக்குள்ள டோபாமைன் சுரக்காத காலத்துக்கும் பயத்த தூண்டாத அமிக்டாலா பகுதியே இல்லாத மூளை இருந்த காலத்துக்கும் போறாங்களே...?! என்ன பண்ண.... ஏதாவது பண்ணித்தானே ஆகணும்.....
பயம் இல்லாத வாழ்க்கை கை மீறின வாழ்க்கை தான ?....யார வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் என்ன வேணா பண்ணலாங்கறது சரியான வாழ்க்கை முறையா....? ஆனா அது தான நடக்குது இங்க.....அப்போ, தப்பு இருக்குனு தான அர்த்தம்.. தப்ப சரி பண்ணத்தான எல்லாரும் சேர்ந்து உக்காந்து வட்டம் போட்டு.. பேசி... இது இப்டி தான்... அது அப்டி தான்னு, சட்டம், ஒழுங்கு.. காவல், உழைப்பு... ஒட்டு... வரி... உரிமம், ரேசன் அட்டை .. இப்டி எல்லாமே பண்ணினோம்... ஆனா இது எல்லாம் சரியா வேலை செய்தான்னு பார்க்கறோமா...? 1947 ல போட்ட சட்டத்தையே இன்னும் பாலோ பண்ணிட்டு இருக்கோமே.... இப்ப புதுசு புது தப்பு வந்துருச்சே.. அத குறைக்க என்ன பண்ணினோம்....
எங்கள ஆட்சி பண்றதா உங்க வேலை....எங்களுக்கு ஆட்சி பண்றதுதான உங்கள் வேலை...அரசியல் கெட்டுக் கிடக்கு... கெட்டு, புழு புழுத்து... மக்கி மண்ணா கிடக்கு...இவன் அவன நொன்னைங்கறான்.... அவன் இவன மொன்னைங்கறான்... நொன்னைக்கும் மொன்னைக்கும் இடையல சாகவா ஒட்டு போடறோம்... அதான்.... அங்க போகல.... இங்க வந்த்ருக்கோம்..... மாவட்டத்த ஆட்சி பண்ற ஆட்சியர்.. நீங்க தான் இதுக்கு பொறுப்பு....
மாத பிதா குரு தெய்வம்..... அதெல்லாம் அந்த காலம்... இப்பெல்லாம்.... குரு பிதா மாதானு மாறிப் போய்டுச்சு.. படிப்பு தான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு.... முதல்ல சொல்லித் தர்ரவன். அப்புறம் அதுக்கு காசு தர்ரவன்.. அப்புறம் வீட்ல வீட்டுப் பாடம் சொல்லித் தரவ... அப்புறம் தெய்வத்துக்கெல்லாம் நேரமில்ல... இங்க தான் பள்ளி கூடம் போகும் போதே மூட்ட தூக்குற காட்சி, அசிங்கமா அரங்கேறுது... அதுக்கு ஒரு சிஸ்டம் பண்ண துப்பு இல்ல.. 3 வயசு குழந்தைய நாசமாக்கிட்டு வேடிக்கை பாக்க மட்டும் முடியுது......" -என்று பொரிந்து தள்ளிய ராம் வசந்த்,
"இது நியாமா.... ?"-என்று சத்தமாக கத்தி மௌனமானார்....கூட்டம் மழைக்குள்.... மின்னலாய் விழித்துக் கொண்டு பின்னால் நின்றது....
கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்...
"உங்கள மாதிரி ஆட்சியாளர்கள.... வாத்தியார்கள.. காவல்துறைய நம்பித்தான நாங்க இருக்கோம்.. அந்த நம்பிக்கைல தான எங்க பிள்ளைங்கள பள்ளிக் கூடத்துக்கு அனுப்பறோம்.. வேலியே பயிர மேஞ்சா எப்டி சார்........ அப்டி என்ன சார் உடல் பசி... அந்த பசியைத் தீர்க்கத்தான் இப்போ ஆயிரம் வழி இருக்கே.. பொம்மை எல்லாம் கூட வந்த்ருச்சே........ வாங்கி உபயோகப் படுத்திக்க வேண்டியது தான... 3 வயசு குழந்தைக்கு என்ன தெரியும்... உச்சா போகக் கூட தெரியாதெ..... அத போய் எப்டியா.... எப்டி....?"
அந்த குழந்தையின் தாய் கதறும் சத்தம்.... பெருங்கோபமாக ஆங்காரமாய் தெரித்தது.....தகப்பன்.... பல்லைக் கடித்துக் கொண்டு தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்....
"இப்டியே மாசத்துக்கு ஒரு குழந்தைய நாசம் பண்ணுவானுங்க.... ஊடகமும், பெயர் மாற்றப் பட்டுள்ளதுன்னு ஒரு கட்டுரையைப் போடும்.. காவல் துறையும்... கண்காணிக்கும்... அப்புறம் ஒண்ணும் பெருசா நடக்கறது இல்லையே.... திரும்பவும் ஒரு மாசம் கழிச்சு . வேற ஊர்ல வேற குழந்தை இதே மாதிரி பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்து ஏன்னு தெரியாம அழுத்துட்டே இருக்கும்.....ஏதாவது பண்ணுங்க சார்..... இது தப்பு... கிழவிய கற்பழிச்சு.. குமரியா கற்பழிச்சு.. இப்போ குழந்தை கற்பழிக்க துணிஞ்சுட்டாங்க..... ஏதாவது பண்ணனும்..... சார்....இனி ஜவுளிக் கடை பொம்மைய கூட வன் புணர்ச்சி பண்ணுவானுங்க சார்.... ஏதாவது பண்ணனும்...."- ராம் வசந்த் இப்போது பெரு மூச்சு வாங்கினார்.... அவரின் இதயம் இன்னும் வேகமாய் அடிக்க ஆரம்பித்தது.....
நீங்க கலைஞ்சு போங்க.... காவல் துறை தன் கடமையை செய்யும்....- என்றார் ஆட்சியர்...
"செய்யட்டும் .. சார்.... தப்பு பண்ணினது உறுதி ஆனா இங்க இதே இடத்துல எங்க எல்லார் முன்னாலயும் தூக்குல போடணும்.... செய்யுமா உங்க சட்டம்....?"- ராம் வசந்த் தீர்க்கமாக கேட்டார்....தீர்வாகவே கேட்டார்.
"சினிமால பேசற மாதிரி பேசாதீங்க மிஸ்டர்... இது ஜனநாய நாடு...."- ஆட்சியர்.. வழக்கமாக கண்ணாடியைக் கழற்றியபடியே பேசினார்...
"அப்டியா.... அப்போ உங்க பேத்திக்கும் இதே மாதிரி நடந்தா அப்பவும் இது ஜனநாய நாடுன்னு சொல்வீங்களா ஆட்சியர் சார்......"-கேள்வி... தோட்டாவாய் பாய்ந்தது.....
அடுத்த நொடி.....
லத்தி சார்ஜ்.....
கூட்டம் அங்கும் இங்கும் அலைய.... எங்கிருந்தோ வந்த ஆம்னி வேன்.... ராம் வசனத்தை அள்ளி போட்டுக் கொண்டு மறந்திருந்தது.....
சற்று நேரத்துக்கு முன்,......
அப்ளிக்கேஷன் புள்லா பில் பண்ணி குடுங்கம்மா....
திருப்பி வாங்கிய அப்ளிக்கேஷசனை மீண்டும் ஒரு முறை நன்றாக மேலிருந்து கீழே வரை பார்த்தாள் ரம்யா.....
"எல்லாமே பில் பண்ணிதான இருக்கு...."- மனசுக்குள் சொல்லிக் கொண்டவள்.. "சார்.. எல்லாமே பில் பண்ணிருக்கு சார்.." என்று மீண்டும் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தாள்....
அவர் மீண்டும் திருப்பிக் கொடுத்து விட்டு அடுத்த அப்ளிகேஷனைப் பார்க்க தொடங்கினார்....
இம்முறை.. சற்று குரல் உயர்த்தியே கேட்டாள் ரம்யா.. " என்ன சார், பில் பண்ணும்.. சொல்லுங்க..."
ம்ம்.. அங்க பாருங்க சாதிங்கற இடத்துல ஏதும் போடாம விட்ருக்கீங்க... என்றார்......எப்பவும் போல
இதயத்தின் மூளைக்குள் ஒரு மூலையில் சிறு கீறல் விழுந்தார் போல உணர்ந்தாள்......
ஆமா சார்.... தெரிஞ்சு தான் பில் பன்னல...சாதி இல்ல சார்..
இல்லமா.. அப்டி சொன்னா எப்டி.. சாதி கண்டிப்பா இருக்கும்.. ஒண்ணு அப்பா சாதி போடணும்.. இல்ல, அம்மா சாதி போடணும்....
இல்ல சார்.. சாதியே வேண்டான்னு போடணும்.. அதுக்கு என்ன போடணும்னு சொல்லுங்க அத பில் பண்றேன்...
இல்லமா.. உலகம் தெரியாம பேசறே... நம்ம கல்வி முறைத் திட்டத்துல சாதி காலத்துல என்ன சாதின்னு போடணும்.. போட்டாதான் சேத்துக்குவாங்க...
இல்லையே சார்.. அப்டி ஏதும் சட்டம் இருக்கற மாதிரி தெரியலையே ..அப்டி ஏதும் இருந்தா அதுக்கான ஜி ஓ காட்டுங்க.... எனக்கு தெரிஞ்சு நடிகர் கமல் அவர்கள் அவுங்க பொண்ணுங்கள பள்ளி கூடத்துல சேர்க்கும் போது சாதி போடாமத்தான் சேத்துருக்காங்க.. அவருக்கு ஒரு நியாயம்.. எங்களுக்கு ஒரு நியாயமா ?....
"என்னம்மா வம்பா போச்சு உன்னோட.... ஆமா இந்த குழந்தைக்கு யார் அம்மா...?" என்று பொதுவாக, ரம்யாவையும் அவளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணையும் பார்த்துக் கேட்க... பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்.. "சார்.. இது என் பொண்ணுதான்.. இவ என் தங்கச்சி... என்று ஆசிரியரைப் பார்த்து சொல்லி விட்டு, தன் தங்கையைப் பார்த்து -"ரம்யா கொஞ்சம் பேசாம இரேன்... இந்த ஸ்கூல்ல இடம் கிடைக்கனும்னு தான் நைட்ல இருந்து மாத்தி மாத்தி ரோட்ல உக்காந்து கிடக்கறோம்....கெடுத்து விட்றாத..." என்று கெஞ்சினாள்..
"இப்டியே .... தான், தன் குழந்தை.. தன் வீடுன்னே பேசி நாசமா போங்க.." என்று முணுமுணு விட்டு... "சார்... அவள் விவரம் தெரியாம பேசறா...சாதி கண்டிப்பா போட முடியாது.... அப்புறம் எதுக்கு சார்... சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாரதி படத்த வரைஞ்சு பள்ளி வளாகத்தில எழுதி வைச்சிருக்கீங்க... சாதிய ஒழிப்போம் சாதியை ஒழிப்போம்னு வாய் கிழிய பேசினா மட்டும் ஒழிஞ்சிருமா..? இப்டிதான்.. இந்த மாதிரி எல்லாம் பண்ணி தான் கொஞ்ச கொஞ்சமா சாதிய ஒழிக்க முடியும்.. எவன் ஆரம்பிச்சு வைச்ச திட்டமோ இந்த சாதி திட்டம், அது எனக்கு தெரியாது.. ஆனா அது ஒழிக்கற திட்டத்துல இதும் ஒண்ணு... இப்போ நீங்க சாதி போட்டாதான் இடம் குடுப்பேன்னு சொன்னீங்கன்னா நான் பிரஸ்க்கு போவேன்.... போலிச கூப்டுவேன்...... இங்கய உக்காந்து உண்ணாவிரதம் இருப்பேன்.." என்றவள் பார்வையை பொது மக்களிடம் திருப்பி...."ஏங்க.. அப்பா அம்மாக்களே...., தயவு செஞ்சு அப்ளிக்கேஷசன்ல சாதிங்கற இடத்துல மனித சாதின்னு போடுங்க...இனியாது வேர்ல இருந்து இந்த சாதிய உண்மையா அழிப்போம்...."-என்ற ரம்யா... ஒரு காளியைப் போல... கண்களை சுழல விட்டாள்
"யாரும்மா அது... சின்ன புள்ளத்தனமா பேசறது.. சாதிங்கறது வேற விஷயம்.. அது பொருளாதாரம் சம்பத்தப்பட்டது... உனக்கு விவரம் பத்தல.. கிளம்பு கிளம்பு.. வேலையக் கெடுக்காத..." என்றபடியே ஒரு ஆசிரியர் குரல் உயர்த்தினார்..
"எந்த தாரப் பிரச்சினையா இருந்தாலும்... அதுக்கும் ஒரு தீர்வு இருக்கு.. உக்காந்து பேசுங்க சார்... தீர்வு கிடைக்கும்.. ஊரெல்லாம் அடிச்சுட்டு சாகராங்ககல்ல.. ரெண்டு வேற வேற சாதிக்காரங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா தேடி பிடிச்சு கொன்னுட்டு தான் மறு வேலை பாக்கராங்ககளே ... இதுக்கா மனுஷ பொறப்பு....?..... பள்ளிக் கூடத்துல ஆரம்பிச்சு மண்ணுக்குள போற வரை எல்லாத்துலயும் சாதி.. சாதி... சாதி.... விளையாட்டுல கூட சாதி பாத்து தான் ஆள் சேக்கறாங்க...எங்க பாரு, என்ன சாதி என்ன சாதி என்ன சாதி என்ன சாதி.... சரி.. ஏதாவது ஒரு சாதிக்கு மூணு கண்ணு இருந்தா சொல்லுங்க.. நான் சாதி இருக்குனு ஒத்துக்கறேன்... இல்லல.. அப்டி மூணு கண்ணோட பொறந்தா அது பிறப்புல இருக்குற அறிவியல் பிரச்சினை .. பொருளாதார பிரச்சினை இல்ல..."-என்றவள் சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்...
"புரியுது... பொருளாதாரத்ல வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்கள மேல தூக்கி விட, ஆரம்பிச்ச சிஸ்டம் தான் இந்த சாதி சிஸ்டம்.. நான் கேக்கறேன்.. அப்படின்னா வறுமைக் கோட்டுக்கு கீழ,மேல் சாதின்னு சொல்லப் படரவங்க ஒருத்தர் கூட இல்லையா... ஆரம்பமே தப்பா இருக்கு சார்.. வறுமைக் கோட்டை பத்திக் கணக்கு எடுக்கணும்னா, போய் நிக்கணும்.. அவனவன் என்ன வேலை செய்யறான்.. எவ்ளோ சம்பாதிக்கறான்.. ஒரு நாள் வருமானம் எவ்ளோ.. வருஷ வருமானம் எவ்ளோ போய் கணக்கெடுக்கணும் சார்...... அத விட்டு சாதின்னு சொல்லி பிரிச்சு விட்டா.. இன்னைக்கும் ரெண்டு டம்ளர முட்டாப் பயலுக டி குடிச்சிட்டு கிடக்கரானுங்க.. என்ன பண்ண.. சரி நம்ம தலைமுறை தான் வீணா போய் குட்டி சுவர் ஆகிடுச்சு.. இனி வர்ற தலைமுறையாது சாதிங்கற சாக்கடைய தெரியாமயே வளரணும்னு தான் சாதி போட மாட்டேனு சொல்றேன்.... சரி நீ மட்டும் போடலநீ போடலன்னா சாதி ஒழிஞ்சிடுமான்னு யாராவது கேட்டீங்கன்னா செருப்பால அடிப்பேன்... இப்போ நான் சாதி போடாம விடுவேன்... என்னப் பார்த்து இன்னொருத்தி போடாம விடுவ.... அவளப் பார்த்து இன்னொருத்தர்...... மாற்றம் இப்படி தான் வரும்...பொறந்ததுமேவா ட்ரெஸ் போட்டுடோம்... மெல்ல மெல்ல தான.... அப்டி தான்..."- கோர தாண்டம் வார்த்தைகளில் ஆடிக் கொண்டிருந்த ரம்யாவை காவல் துறை வந்து அள்ளிக் கொண்டு போனது....
ஆனால் மழைக்குள் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தது முகமூடி மனிதன்....
சற்று நேரத்துக்கு முன்....
மழை...
மழை ரசிப்பது வேறு.... மழையில் ரசிப்பது வேறு.... புனிதா மழையில் ரசித்துக் கொண்டிருந்தார்...மழையை ரசித்துக் கொண்டிருந்தார்..... மொட்டை மாடியில் நின்று.... மொத்த வானத்தை பார்க்கும் நிமிடங்களில்... பூவான மழைச் சாரல் சத்தம் கத்தும் துளியோசை என்று கவி பாட தோன்றுவதாய் புன் முறுவல்....வெற்றிடம் வாங்கிய குதூகலத்தில் சட்டென பூத்ததோ .......சங்கீத வானவில்....மழை சொல்லும் தத்துவத்தில் மனம் குளிர்கிறது...... மனம் சொல்லும் தத்துவத்தில் மழை விளைகிறது...... காற்றடிக்கும் திசையெங்கும்... உடல் வளைக்கும் மழை, குறு குறு பார்வையில் பிழை அழித்துப் போகிறது..... மழை நாளில் மட்டும்.... இன்னும் திசைகள் நான்கு விரிகின்றன.... மழையில் நனையும் நாளில் மட்டும் இன்னும் ஒரு மனம் சிறகடிக்கின்றது....
நினைவு பட்டாம் பூச்சியை நினைத்த இடமெல்லாம் பறக்க விடும் கலையில் மழை, குடை பிடித்துக் கொண்டே செல்கிறது..... குடை பிடித்த மழையில் குளிர் விரட்டும் கதையை யார் சொல்லும் போதும், அது பார் சொல்லும் யாதும்.....உள்ளுக்குள் சிறகடித்துக் கொண்டே இருக்க..... ஆனந்த தாண்டவம், ஆழ் மன வேண்டுதலாய்.... சின்னஞ்சிறு வயதை, சின்னஞ்சிறு வயதிற்கே அழைத்துச் செல்லும் நினைவுகளை எட்டி நின்றே கிட்ட உணர்த்தார்.....உணர்வது போல ஒரு மழையை யார் தந்து விட முடியும்....வந்து விழும் மழையெல்லாம்... வந்து விட்ட மழையா....? வந்து, விட்ட மழையா...?
நினைக்க நினைக்க ஒவ்வொரு துளியும் கவியாகிறது.... ஆகும் கவியெல்லாம் இறகாகிறது......யோசித்த மனதில் மலரைப் போல் புது மழை சிந்துகிறது ..சிந்திய மழையெல்லாம் விந்திய மலைத் தேடலோ..... ஒரு தொடக்கம் இல்லாத மழை மட்டுமே, முடிவும் இல்லாத விடை சொல்கிறது.....
பின்னோக்கிய சிந்தனைகளில் கைப் பிடித்து அழைத்து செல்வதில் மழை போல் ஒரு மந்திரம் இல்லை... இதே போலொரு மழை நாளில் தான் அவன் வந்தான்.... பிசு பிசுத்த தலை முடியில்....நடுங்கிய உடல் மொழியில் மேலாடை இல்லாமல் வெறும் பாவாடை சுற்றிய சிறுவனாய்.... பசித்த கண்களில் காய்ந்திருந்த கண்ணீர் குளத்துடன்.... தயங்கி தயங்கி கதவைத் தட்டினான்.....அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது......... உள்ளம் செத்துக் கொண்டிருக்க வேண்டும்.... வெள்ளம் கத்திக் கொண்டிருந்த இரவது........
கதவு திறந்த புனிதாவுக்கு உலகம் அடைத்த கதவின் வலிமை முகத்தில் அறைந்தது....எப்படி ஆரம்பிக்க...... பார்வையைக் கூட ஆரம்பிக்கும் மன நிலையை அந்த சிறுவனின் தோற்றம் திகைக்க வைத்தது....... தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிக்க சொன்ன பாரதி நினைவுக்கு வந்தான்.... இந்த சட்டைய போடாலாமா.. அந்த சட்டை போடலாமா.. மேட்சா இருக்கனுமே எந்த சட்டை போடறதுன்னு யோசிக்கும் நிமிடங்கள் எல்லாம்... வாந்தி எடுக்கும் தோற்றத்தில் அவன், உதடு நடுங்க சுவரோரம் ஒட்டி நின்றான்....
சுவரே... உறையத் தொடங்கியதோ...? இன்னும் இன்னும் ஆழமாய் பார்த்தான்... கண்டிப்பாக அவன் இனி அழ போவதில்லை போலொரு முகம் அவனுக்கு...... பெரிய பெரிய அர்த்தங்கள் எல்லாம்... சீக்கிரமே விளங்கி விடும்..... விளங்கிக் கொண்ட புனிதா அவனை உள்ளே அழைத்து... வாய் நிறைய வயிர் நிறைத்தார்....வயிர் நிறைய அவன் முகத்தில் புன்னகை நிறைந்தது.... புனிதா பார்த்துக் கொண்டே இருந்தார்..... வசீகர தாய்மை.... அன்பின் நிறைவு.... ஆதரவின் தோழமை.... அனாதையல்ல யாரும் என்ற சிந்தனையில்.... அந்த சிறுவன் தூங்கிப் போனான்... விடியலில் தன் பிள்ளைகள் அவனைத் "தம்பி இங்கயே இருக்கட்டும்" என்றார்கள்...
இன்று புனிதாவுக்கு மூன்று குழந்தைகள்.....
அம்மா......
நினைவைக் கலைத்த மூன்று குழந்தைகளும் குடை கொண்டு ஓடி வந்தார்கள்....
"ஏம்மா.... நனையறீங்க....." என்றார்கள்.....
ம்ம்ம்.... என்ன சொல்வது..... என்று ஒரு கணம் யோசித்த புனிதா.. தன் குழந்தைகளை அள்ளிக் கொண்டு.... "மழை நீர் உயிர் நீர் தான..... அதான்.... நனைஞ்சா தப்பில்ல...." என்றார்.......சிரித்துக் கொண்டே
குடையை தலை கீழாக பிடித்தான்..... மகன்.....
பெரியவள் அர்த்தமாய் கூறினாள்.... "மழையை சேமிக்கனும்ல அம்மா...."
மூவரையும் பெருமிதத்துடன்....அனைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்த புனிதா.....
வாசலில் இருந்து யாரோ அழைப்பது போல சத்தம் வர... யாரு என்ன என்று யோசித்துக் கொண்டே, பார்க்க வெளியே வந்தார்...
"இந்த அட்ரெஸ் இந்த வீடுங்களா" என்று ஆம்னி வண்டிக்குள் இருந்து குரல் கேட்க கொஞ்சம் வண்டிக்கு அருகில் வந்த புனிதாவை சட்டென பிடித்து இழுத்து உள்ளே போட்டுக் கொண்டு வண்டி விரைந்தது.........
முகமூடி மனிதன்.... திரும்பி புன்னகைத்தான்....
சற்று நேரத்திற்கு முன்....
கவிஜி