பெண்சிசுவைக் காப்போம்

பெண்சிசுவைக் காப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

இருட்டினிலே வாழ்கின்றார் பெண்கள்1 இங்கே
எழுச்சியான முற்போக்கு வளர்ந்த பின்பும்
மருள்நீங்க வழியின்றி அடிமை யாக
மண்டியிடும் கீழ்மைநிலை அகல வில்லை
பெருகிவரும் அறிவியலின் புதுமை யாலே
பெறுகின்ற அறிவினிலே வளர்ச்சி பெற்றும்
குறுகியுள்ள மனத்தாலே பெண்கள் தம்மைக்
கூன்நிமிர விட்டிடாமல் குட்டு கின்றார் !

பெற்றவரோ பெண்சிந்தும் கண்ணீர் கண்டு
பெருந்துயரில் நோவதன்றி வேறென் செய்வார்
புற்றுநோயாய்ப் புரையோடிச் சமுதா யத்தில்
புகுந்திருக்கும் அவலத்தைப் பார்த்தி ருந்தும்
கற்றவரும் கல்லாராய்த் தீமை தன்னைக்
களைதற்கே என்சேய்தார் ! சட்டத் தாலே
குற்றங்கள் புரிவதினைத் தடுக்க ஒல்லும்?
கூடியொன்றாய்ச் செயல்செய்தால் முடிந்தி டாதோ !

வாய்வீரம் பேசுகின்றார் மேடை தோறும்
வார்த்தையிலே சமத்துவத்தை வழங்கு கின்றார்
தாய்க்குலமே இந்நாட்டைத் தாங்கு கின்ற
தெய்வமென உதட்டாலே வணங்கு கின்றார்
வாய்ப்பளித்தோம் சரிசமமாய் ஆக்கி விட்டோம்
வளருகின்ற சமுதாயத்தில் ஆணும் பெண்ணும்
தோய்ந்தொன்றாய் ஏற்றத்தாழ் வகன்று வாழ
தொல்லைகளை நீக்கிவிட்டோம் என்றே சொன்னார் !




பெண்சிசுவின் முகம்பார்க்கும் மனமு மின்றி
பிறந்தவுடன் கழுத்துதனை நெரித்து வீட்டின்
அண்டையிலே இருப்போரும் அறியா வண்ணம்
அழகுடலைப் புதைக்கின்றார் கிராமந் தன்னில்
கண்ணெதிரில் நடக்கின்ற கயமை தன்னைக்
காணுகின்ற நாமெல்லாம் செய்த தென்ன
விண்ணதிரப் பெண்கள்தம் பெருமை பேசி
விளைகின்ற கொடுமையினைத் தடுத்தோ மில்லை !

மடமையிலே வாழ்கின்ற கிராம மக்கள்
மனத்தினிலே பெண்ணச்சம் மடியச் செய்வோம்
தடம்மாறிச் செய்கின்ற செயல்க ளைய
தகுமுறையில் மனத்தெளிவைத் தளிர்க்கச் செய்வோம்
திடமாகப் பெண்ணடிமை நீங்கு தற்கே
திமிரான ஆண்வர்க்கம் திருந்தச் செய்வோம்
கடமையிது நமக்கின்று கயமை போக்கி
கனிவோடு பெண்ஆணும் ஒன்றே என்போம் !

அரசிந்த கொடுமையினை அகற்று தற்கே
தொட்டிலொன்றை அமைத்துளது தொட்டி லுக்குள்
வரவாக வருகின்ற பெண்கு ழந்தை
வளர்தற்கே காப்பகமும் அமைத்து வாழ
இரக்கத்தைக் காட்டுதல்போல் கருணை உள்ளம்
இருப்போர்கள் தத்தெடுத்துக் காக்க வந்தால்
அரவணைப்பில் தளிர்கரங்கள் வளர்ந்து நாளை
அறிஞராகி நாடுதனைக் காப்பார் அன்றோ !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (30-Oct-14, 5:05 am)
பார்வை : 182

மேலே