நட்பின் சான்று - கவிதைப் போட்டி
அன்பின் அடைமொழி நட்பு.
பண்பின் நடைமொழி நட்பு.
இனம் பாராமல் குணமறிந்து
தினமும் வளர்வது நட்பு.
ஈனம் இல்லாமல் ஈகையுடன்
ஈர்த்தல் தொடர்வதும் நட்பு.
ஊனம் இல்லாமல் உறவாய்
உருக்கொண்டேழுவது நட்பு.
நிஜத்தின் நிழலாய்
நிலைத்திருப்பதும் நட்பு.
வேரூன்றி வளர்ந்த
விழுதாய் விளைவதும் நட்பு.
கோலூன்றிப் படர்ந்தக்
கொடியாய் படர்வதும் நட்பு.
உடலுக்கு உயிராய்
உணர்வறிந்து வாழ்வதும் நட்பு.
கடலுக்கு அலையாய்
காலமெல்லாம் நிலைப்பதும் நட்பு.
கண்ணுக்கு இமையாய்
காத்திருப்பது நேசத்தின் நட்பு.
சோகத்தின் போது
சுகமாய் தோள் தங்குவதும் நட்பு.
பிரதிபலன் பாராமல்
உறுதிபலம் கொண்டதும் நட்பு.
உடன் பிறவா உறவினை
உண்டாக்குவதும் நட்பு.
வானுக்கு ஒரு நிலவாய்
வாழ்வுக்கு மறுதுணை நட்பு.
தேய்ப்பிறை வளர்பிறை
தடுமாறலாம் அந்த நிலவு - ஆனால்
தேயாமல் வளர்பிறையாய்
தொடர்வதுதான் நட்பு.
நீபாதி நான்பாதி என்ற உணர்வினை
நாளெல்லாம் உணரவைப்பதும் நட்பு.
உயிரெழுத்தும்,மெய்யெழுத்தும்
உயிர்ப் பெறுதல் போல்
உயிர்மெய் எழுத்தாய் பதிவதும் நட்பு.
நாரும் பூவும் தொகுப்பாய்
தொடுத்தல் போல் இருப்பதும் நட்பு.
நல்ல உள்ளங்கள் நண்பனாகுதல் நன்று.
நல்ல நட்புக்கே இதுவே சான்று.

