நிலா

எனக்கு நேர் பின் சீட்டில் அவள் அமர்ந்திருந்தாள். கோயம்பேட்டில் ஏறிய போதே கவனித்து விட்டு கவனிக்காதது போல வண்ணதாசனின் மணல் ஆற்றுக்குள் மூழ்கி இருந்தேன். வெள்ளை நிற சுடிதாரில் நீல நிற எம்ராய்டரி பூக்கள் எவ்வளவு வசீகரமாயிருக்கின்றன என்று யோசித்தபடியே புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்பும் முன் அனிச்சையாய் அவளைத் திரும்பி பார்த்தேன். திருத்தமான முகம், அழுத்தமில்லாத ஒப்பனை, படிய வாரி தூக்கிக் கட்டி குதிரைவால் போட்டிருந்தாள். அப்போதுதான் தோலை உரித்து விட்டு நகர்ந்து செல்லும் பாம்பின் உடல் போன்று பளபளவென்ற கண்கள், வளைந்த புருவம், உறுத்தல் இல்லாத சிறிய பொட்டு....பார்த்த உடனேயே படக்கென்று திரும்பிக் கொண்டேன்.

பெண் என்றால் இப்படித்தான் உறுத்தலில்லாமல் இருக்க வேண்டும். அடிக்கின்ற கலரும், ஜிகினா உடைகளும், தடிமனான மேக்அப்போடு ஆளை அடிக்கிற மாதிரி லிப்ஸ்டிக்கும், அடர்த்தியான பெர்ஃபூயூமும் போட்டுக் கொள்கிற பெண்களை எனக்குப் பிடிப்பதில்லை. கழுத்து நிறைய சங்கிலையைப் போட்டுக் கொண்டு, நகைக் கடை ஸ்டாண்டாக தங்களை மாற்றிக் கொள்ளும் பெண்கள் கூட செல்லும் ஆண்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஆண்களைப் பார்த்து ஏன் வியக்க வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள்...? அது போகட்டும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். பிடிப்பதற்கு என்று ஏதேனும் பொது விதி இருக்கிறதா என்ன..? செவ்வரி ஓடிய கண்களும், வளைந்த புருவமும் அகலமான நெற்றியும் மேலேறிய கன்னமும் உதட்டின் மீது மச்சமும், லேசாய் படர்ந்திருக்கும் பூனை முடி மீசையும், நீண்ட கழுத்தும், கூரான நாசியும் எப்போதோ படித்திருந்த சாமுத்ரிகா லட்சணத்தைப் புத்திகுள் புரட்டிக் கொண்டிருந்தது. பெண்ணை புறத்தோற்றத்தை வைத்து எடை போட்டு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்று வகைப்படுத்தி விட முடியுமா என்ன? அழகாய் இருக்கும் ஒரு கொடூர புத்தி கொண்டவள் தோழியாகவோ அல்லது துணையாகவோ ஆகிவிட முடியுமா...என்ன...? அவளின் அதிரடியான அழகினை மறக்க மீண்டும் கையிலிருந்த புத்தகத்திற்குள் ஒரு பெரும் இரையை அப்போதுதான் விழுங்கிய அரவத்தினைப் போல நெளிந்து நகர முயன்று கொண்டிருந்தேன்.

எந்த புத்தகமாய் இருந்தாலும் சரி எடுத்தோம் முடித்தோம் என்று அசுர வேகத்தில் படிப்பவர்களை பார்த்தால் எனக்கு எப்போதும் பொறாமைதான். எடுத்த புத்தகத்தை படித்து முடித்தே ஆகவேண்டும் என்ற சுவாரஸ்யத்தில் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு படிக்கும் நண்பர்களை எல்லாம் நான் ஆச்சர்யமாத்தான் பார்ப்பேன். எந்த புத்தகத்தை எடுத்தாலும் தொடர்ச்சியாய் அரைமணி நேரத்திற்கு மேல் படிக்க முடியாது என்னால். வாசிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் கண்களை சுழற்றிக் கொண்டு வர, புத்தகத்தை நெஞ்சின் மேல் வைத்தபடி அதுவரையில் வாசித்த பக்கங்களுக்குள் மெதுவாய் நடந்து கொண்டிருப்பேன். ஒரு சோம்பலான பகல் வேளையில் அதுவரையில் பார்த்திராத ஒரு நகரத்து வீதிகளுக்குள் நடந்து செல்வது போன்று இருக்கும். திடீரென நகரத்து நெரிசல் கடந்து ஒரு வனாந்திரத்திற்குள் நுழைவதும் கூட உண்டு. எதைப் பற்றிய அக்கறைகளுமின்றி மெதுவாய் உச்சி வேளையில் கிராமத்து கோயில் மாடு ஆடி அசைந்து நகர்ந்து செல்லும் ஒரு அக்கறையில்லாத ஆனால் நிதானமான நடை அது....

ஹலோ எக்ஸ் க்யூஸ் மீ... என்ற குரல் கேட்டு மெல்ல கண்களைத் திறந்த பொழுது, என் முன்னால் பின்னிருக்கையில் இருந்த பெண் நின்று கொண்டிருந்தாள். அந்தப் புத்தகத்தை நீங்க படிக்கலேன்னா என்கிட்ட கொடுக்குறீங்களா....நான் படிச்சுட்டு தர்றேன். வண்ணதாசனை என் நெஞ்சினில் இருந்து எடுத்து அவளிடம்.. ஓ....கண்டிப்பா என்றபடி கொடுத்தேன். தேங்க்யூவோடு புத்தகத்தை வாங்கிக் கொண்டவள் எனக்கு நேர் எதிரே பக்கவாட்டில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். பகல் நேரப் பேருந்துகளில் அதுவும் விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக இல்லாதிருக்கும் போது பயணிப்பது ரொம்பவே சுகமானது. இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஹாயாக கையைக் காலை நீட்டிக் கொண்டு கொண்டு கோணாலாய் சாய்ந்து அமர்ந்த படியே ஜன்னல் வழியே பிராக்குப் பார்த்துக் கொண்டே பிரயாணம் செய்யலாம். அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுனரும் நடத்துனரும் பயணிகளை அவ்வளவாக தொந்தரவு செய்வதில்லை...அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்றிருப்பார்கள். கூட்டமில்லாத அந்தப் பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மெல்ல என்னை இம்சிக்க ஆரம்பித்திருந்தாள். யார் என்ன என்று கேட்கும் ஆவலை எல்லாம் ரிவர்ஸ் கியர் போட்டு மீண்டும் எனக்குள் தள்ளிவிட்டு விட்டு.....கண்களை மூடிய உடன் உள்ளுக்குள் பாரதி உருக்க ஆரம்பித்தான்....

"ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்..."

யார் யாரையோ பிடிக்கிறது. யார் யாரையோ பிடிப்பதில்லை. பிடிக்கும் அத்தனை முகத்திலும் உள்ளுக்குள் இருக்கும் ஒருத்தியாய் இவள் இருப்பாளோ என்ற ஆசையில் மனதிலிருந்து அவளை வெளிக் கொண்டு வந்து இவள் உன்னை ஒத்தவளா என்று பார் என்று கேட்கும் போதெல்லாம். இவள் இல்லை, அவள் இல்லை, என்று உதட்டைச் சுழித்தபடியே மீண்டும் எனக்குள் சென்று விடுவாள் என்னுள் எப்போதும் இருப்பவள். பிரக்ஞை நிறைந்தவளாய் இருக்க வேண்டும். வாழ்தலை தட்டு நிறையப் போட்டுக் கொண்டு, பொருளைத் தொட்டுக் கொண்டு சாப்பிடும் சுகமறிந்தவளாய் இருக்க வேண்டும். கடவுள் தேடலைக் காதலைப் போன்றும், காதலை கடவுள் தேடலைப் போன்றும் உணர்ந்து செய்யத் தகுந்தவளாய் இருத்தல் வேண்டும். மனிதர்களைப் பற்றி அதிகம் பேசாதவளாய் மானுடம் பற்றி பேசுபவளாய் இருக்க வேண்டும். இரண்டு கோப்பைகளில் கனவுகளை நிறைத்துக் கொண்டு அதற்கு காஃபி என்று பெயரிட்டபடியே வெட்டவெளியில் விழிகளால் நடந்து கொண்டே பேசுபவளாய் இருக்க வேண்டும். பெண் என்றால் என்ன வெறுமனே ஒரு பெண்ணா...என்ன...? பிரபஞ்சத்தின் ஆதி சாயல் அல்லவா அது...?

கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!”

நீங்க புத்தகம் எல்லாம் நிறைய படிப்பீங்களா சார் என்று என்னைக் கலைத்தவளை திரும்பிப் பார்த்து முதல் வேலையாய் சார் என்று கூப்பிட வேண்டாம் என்று சொல்லி என் பெயரைச் சொல்லி உங்கள் பெயர் என்னவென்று அவசரகதியில் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். சிலர் பார்ப்பதற்கு அழகாயிருப்பார்கள், சிலரை அழைப்பது அழகாயிருக்கும். பெயரையே கவிதையாய் வைத்திருப்பவர்களின் பெற்றோர்களுக்கு எப்போதும் மனதிற்குள் நான் நன்றி சொல்வேன். அழைப்பதற்கே சுகமான பெயரை வைத்திருக்கும் அவர்களின் ரசனையைக் கண்டு வியப்பேன். " நிலா " என்று அவள் சொல்லி முடித்த பொழுது அந்த பெயர் செய்த மெஸ்மரிசத்தின் இரசவாதம் என்னவென்றெல்லாம் விளக்க முடியாது. எழுதி எல்லாவற்றையும் தெரிவித்துவிடமுடியும் அல்லது அந்த உணர்வுகளை அப்படியே விழுங்கிக் கொள்ள முடியும் என்றால் என்றோ நான் பாரதியைப் படித்த அன்றே செத்துப் போயிருந்திருப்பேன்.

நிலா என்னிடம் முதலில் விஞ்ஞானம் பேசியது, பிறகு உலகத் திரைப்படங்களைப் பேசியது, பெண்ணியம் பேசியது, ருஷ்யப் புரட்சியைப் பற்றி பேசி முடித்து தமிழ் இலக்கிய மரபுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தது, கலைந்து கிடக்கும் ஒழுங்கின்மைக்குள் வாழ நினைக்கும் அதன் ஆசைகளை சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்குள் இருந்தவள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு அவளுக்குள் சென்றுவிட்டதை மெளனமாய் நான் அனுமதித்தபடியே நிலாவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழர் வாழ்வும், மொழியோடு அது தன்னைப் பிணைத்துக் கொண்டு தாயின் இடுப்பிலேறி பயணிக்கும் பாங்கினையும் அவள் சொல்லிக் கொண்டே போனாள்...

நிலாவை எப்படி எதிர்கொள்வது...? என்ன மறுபடி சொல்வது என்று யோசித்து யோசித்து ஒரு சதுரங்க ஆட்டத்தில் தேர்ந்த எதிராளியை எதிர் கொள்ளும் ஒரு பெரும் பிராயத்தனத்துடன் நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். பகல் நேரப் பேருந்திற்குள் நிலா ஜொலித்துக் கொண்டிருந்தது. மருது பாண்டியர்களை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நான் சொன்னதை ஆமோதித்தாள். சோழர்களின் நாகரீகத்தை அவர்களின் கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிந்த நம்மால் பாண்டியர்களின் நாகரீகத்தைப் பற்றி அவ்வளவு விபரமாக அறிந்து கொள்ள முடியவில்லைதான் என்றாள். அதுவும் 1800களில் தென் தமிழக்த்தில் நடைபெற்ற ஒரு சுதந்திரப் போராட்டத்தின் விரிவுகளை அப்போதைய மக்களின் வாழ்க்கையினை, கலாச்சாரத்தினை அந்த பூமில் படிந்து கிடந்த சோகத்தினை, மகிழ்ச்சியினை, வீரத்தினை, வறட்சியினை, செழிப்பினைப் பற்றி எல்லாம் ஆழமாயும் சுவாரஸ்யமாயும் ஒரு வெகுஜன எழுத்து இதுவரை வந்திருக்கவில்லை என்று நான் சொன்னதை அவளும் ஒத்துக் கொண்டாள்.

ஜனரஞ்சகமாய் பாண்டியர்களின் கலாசாரத்தை அதுவும் சிவகங்கைச் சீமையின் செம்மண்ணில் படிந்து கிடக்கும் சோகத்தை நீ எழுது என்று அவள் சொன்ன அந்த " நீ " உரிமையின் வெளிப்பாடா இல்லை சராசரியான ஒரு சுட்டுச் சொல்லா என்ற ஒரு குழப்பம் எனக்கு வந்து போனது. காதலைப் பற்றி பேச ஆரம்பித்த போது நேரம் மொத்தமாய் நின்று போயிருந்தது. நெடுந்தொலைவு பயணத்தினூடே ஒரு சிற்றுண்டிச் சாலையில் பகல் உணவிற்காய் பேருந்து நின்ற போது....எனக்கு வெளியில் உணவருந்தும் பழக்கமில்லை என்று கையிலிருந்த பிஸ்கெட் பாக்கட்டைப் பிரித்து எனக்குக் கொடுத்தாள். சாப்ட தானே மாட்டீங்க....ஏதாச்சும் குடிக்கலாமே... நிலா அந்த உச்சிப் பொழுதில் என் கோரிக்கையை ஏற்றுப் பேருந்தை விட்டு கீழிறங்கியது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் எப்போதும் இந்த வழியே ஒற்றர்களும், அதிகாரிகளும், குடிமக்களும் போகவும் வரவும் செய்திருப்பார்கள்தானே...?அந்ததப்பழரசம் அவளின் உதடுகளைக் குடித்துக் கொண்டிருந்த போது என்னிடம் கேட்டாள்...

திருவொற்றியூர் தொடங்கி கிழக்கு கடற்கரை முழுதும் ராசேந்திரன் எப்போதும் பெரிய பெரிய நாவாய்களின் கட்டுமானங்களை மேற்பார்வை இடுவதோடு கடல் மார்க்கமாக எங்கே செல்வது எப்படி மரக்கலன்களை செலுத்துவது, எப்போது எந்தத் திசையில் காற்றின் வீச்சு அதிகமாயிருக்கிறது என்று நிபுணர்களை வைத்துக் கணித்துக் கொண்டே இருப்பானாம். கடுமையான பயிற்சியினை கடலில் அவனது வீரர்களுக்கு கொடுத்துக் கொண்டே, பல நாட்கள் கடலில் பயணித்தால் அப்போது உடலின் தட்ப வெட்பம் எப்படி எல்லாம் மாறுகிறது, என்ன மாதிரியான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என்றெல்லாம் கணித்து முழுவேகத்தோடு தனது கடற்படையை தயார் படுத்துக் கொண்டே இருப்பானம். தஞ்சைக் கோயிலுக்கு வேலை செய்ய பத்தாயிரம் அடிமை வீரர்களை நடை பயணமாக அழைத்துக் கொண்டு தஞ்சைக்கு சென்றானாம். இந்த வழியேதான் சென்றிருப்பான்... ஏன் இந்த குடந்தைக்கு செல்லும் சாலை ஓரத்தில் இளைப்பாறிக் கூட இருக்கலாம்....

சாலை ஓரத்தில் இருந்த தடிமனான வெள்ளையும் கருப்புமாய் மை அடிக்கப்பட்டிருந்த அரசாங்க புளியமரத்தைக் தடவியபடியே நிலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அதாவது திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விட்டு சாதாரண சாலைக்குள் பேருந்து இறங்கும் போதே தெரிந்து விடும் சோழ தேசத்தின் செழுமை. சாலையின் இரு புறத்திலும் அடர்த்தியாய் மரங்கள் சாலையை மூடிக் கொண்டிருக்க, இரண்டு பக்கமும் பச்சை பசேலன வயல்வெளிகள் பரந்து விரிந்து கிடக்கும். இடையிடையே தென்னந்தோப்புகளும், அடுத்தடுத்த குறுகிய இடைவெளிகளில் நிறைய சிறு கிராமங்களும், இடை, இடயே குறுக்கிடும் காவிரியும் என்று காலங்கள் கடந்து பல்வேறு சமூக அரசியல் மாற்றங்களை எல்லாம் சகித்துக் கொண்டு சோழ தேசம் தன் வனப்பினைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும்....

நிலா சடாரென்று குறுக்கிட்டு....பாண்டிய தேசமும் இப்படித்தான் இருக்குமா....? என்னை திசை திருப்பினாள்.

எனக்கு சட்டென்று ஒரு சங்கிலி அறுபட்டுப் போனது போலத் தோன்றியது. பாண்டிய தேசம் இப்படியானது அல்ல நிலா....அது வானம் பார்த்த பூமி, செம்மண் காடு, சரளைக் கற்களால் ஆன மண், கருவேலம் மரங்களும், கள்ளிச் செடிகளும் மண்டிக்கிடக்கும், நெருஞ்சி முள் நான்கு அடிக்கு ஒரு அடியில் நம் காலில் குத்தாமல் இருந்தால் நாம் அதிர்ஷ்டசாலிகள், பெருங்கிணறுகள் ஆங்காங்கே ஆ வென்று வாய் பிளந்து கிடக்கும். பெருங்கண்மாய்கள் எல்லாம் ஊரின் ஒதுக்குப் புறமாய் எல்லைச் சாமிகளை போல பரந்து விரிந்து எப்போதாவது பெய்யும் மழையை வாங்கி ஊற்றிக் கொள்ளச் சித்தர்களாய்த் தவங்கிடக்க, ஊருக்குள் இருக்கும் ஊருணிகள் கிராமத்து மக்களின் தேவைகளுக்காய் சவலைப் பிள்ளைகளாய்ப் படுத்துக் கிடக்கும். ஒரு கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் இடையே பொட்டல் வெளிகளும், பனங்காடுகளுமென்று தூரம் அதிகமாயிருக்கும். பாண்டிய தேசம் வேற விதம் நிலா, வேறு பூமி அது, சூடான பூமி, சூடான மனிதர்கள், இயற்கை மீது அவர்களுக்கு இருக்கும் ஒரு கோபம் உடம்புக்குள் எப்போதும் கொதித்து மிகப்பெரிய மீசையாய் முறுக்கேறி நிற்கும், பெண்களும் அப்படித்தான் தாண்டிக்கமாக இருப்பார்கள், கண்டாங்கி சேலை கட்டி ஒரு பேரிளம் பெண் நடந்து சென்றால், கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை நடந்து வருவதை கம்பர் விவரிப்பது போல " அண்ட சராசரங்களும் குலுங்க தடங் தடங்....." என்றுதானிருக்கும்....

பேருந்துக்குள் வந்து வெகு நேரமாகியும் நிலா பேசிக் கொண்டிருந்தது. நிலா பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன். தஞ்சையை அடைய இரண்டு மணி நேரம் இருந்த போது நிலா மீது நான் காதல் வயப்பட்டது போல நிலாவும் என் மீது காதல் வயப்பட்டிருக்க கூடும் என்று நான் அனுமானித்ததை அவளின் கண்கள் உறுதி செய்தன. இது ஒரு அற்புத அனுபவம் கதிர் என்று நிலா சொன்னதை நான் ஆமோதித்தேன். நிலா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு......சொல்லி விட்டு ஜன்னல் பக்கம் தலை திருப்பிக் கொண்டேன்...

எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்குது கதிர் என்றவுடன் நிலாவைத் திரும்பிப் பார்த்தேன். விழிகள் தான் எல்லாமே....விழிகள்தான் கோபத்தையும், வெட்கத்தையும், வெறுப்பையும், விருப்பத்தையும், ஆசையையும், காதலையும் என்று எல்லா உணர்வுகளையும் முந்தி அடித்துக் கொண்டு சொல்கின்றன. பளபளக்கும் நிலாவின் விழிகளிலிருந்த காதலை வாஞ்சையாய் வாங்கிக் கொண்டேன். வாழ்க்கை என்றால் இலக்கியமும், அறிவும் மட்டும் கிடையாது கதிர்...அது அறியாமையும், கோபமும், பொருள் தேவைகளும் நிறைந்தது என்றாள்....நிலா...

இது வேறு உலகம். இங்கே ஆதாய நோக்கமும், உலக நியதிகளும், கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் வந்து விடவே கூடாது. இரண்டும் வெவ்வேறு இரண்டும் ஒரு நாளும் ஒன்றாகாது இல்லையா கதிர்? இது இப்படியே இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமும் ரகசியமும் இருக்கிறது....

எனக்கு இறக்கை முளைத்து பறப்பது போல இருந்தது. இதுவேதான்..இதுவேதான் இப்படித்தான் இருக்க வேண்டும். இதற்கு மேல் ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் நகர்ந்தாலும் அது சராசரி வர்ணம் பூசிக் கொண்டு திருமணம், காமம், பிள்ளைகள் என்று எங்கோ பயணித்து விடும். உண்மைதான் நிலா....நிலா நிலாவாகவும் கதிர் கதிராகவும் இருப்பதே நல்லது. இந்த பிடித்தல் எனக்குப் பிடித்திருக்கிறது. உனது அறிவு எனக்குப் பிடித்திருக்கிறது. என்னை உள்வாங்கிக் கொள்ளும் பொறுமை எனக்குப் பிடித்திருக்கிறது. மொத்தத்தில் நிலாவை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இந்தப் பிடித்தலோடு பிரிதல்தான் சுகம்.

நிலா என் கையைப் பிடித்துக் கொண்டாள். இது நன்றியுணர்ச்சி கதிர். வேறு எதுவுமே இல்லாத நன்றி உணர்ச்சி. ப்ரியம், காதல், நேசம். 5 மணி நேரத்திற்குள் எதையும் தீர்மானித்து விட முடியாது என்ற நம்பிக்கையற்ற இந்த சமூகம்தான் 40 வருடங்கள் ஒன்றாய் கணவன் மனவியாய்வாழ்ந்தாலும் சண்டையிட்டுக் கொள்கிறது, அனுமதிக்கிறேன் என்று ஆளுமை செய்கிறது, கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்கிறது, தியாகம் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறது.....

இதற்கெல்லாம் நாம் விதிவிலக்காய் இருப்போம்.

நிலா பேசி முடித்த போது இராசராசனின் தஞ்சாவூர் எல்லைக்குள் பேருந்து ஸூம்ம்ம்ம்ம்ம்ம்ம்மென்று காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. கம்பீரமான கோயில் கோபுரத்தைப் பார்த்தவுடன் கோயில் கோபுரத்தினுள் இருக்கும் புடைப்புச் சிற்பங்களைத் தான் நேரில் அனுமதி பெற்று காணும் வாய்ப்பு கிடைத்த கதையை கூறத் தொடங்கி இருந்தாள் நிலா.

நிலா விடை பெற்றுக் கொண்டாள்.

எந்த தொடர்புப் பரிமாற்றமுமின்றி விடை பெற்ற நிலா கீழிருந்து கையசைத்தாள், நானும் கையசைக்க பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் நிலாவை எங்கேனும் நான் இந்த சந்தடிகள் நிறைந்த வாழ்க்கையினூடே சந்தித்தாலும் சந்திக்கலாம், சந்திக்காமலும் போகலாம், ஆனால் வாழ்க்கை முழுதும் என் நெஞ்சில் எப்போதும் நிற்கும் இந்தப் பிரயாணமும், நிலாவும்....

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்....!


தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா (1-Nov-14, 1:10 pm)
Tanglish : nila
பார்வை : 421

மேலே