தேவதையின் கதை
தேவதையின் கதை
கள்ளிப் பாலுக்கு
இவள் தப்பியதால்
தொட்டிலில் இடம் கிடைத்தது
பள்ளி படிக்க சென்ற
இவளுக்கு
உடல் சீண்டும்
ஆசிரியர் தொல்லையில்லை
காதலிக்கவில்லை என்று
இவள்மீது
கயவன் எவனும்
திராவகம் வீசவில்லை
இணைய தளங்களும்
இவளை
இம்சிக்க வில்லை
மாடுபிடி பேரமாய்
இவள்
மணவாழ்வு மாறவில்லை
மலடி பட்டதை
இவளும்
இதுவரை கேட்டதுதில்லை
மதிக்காத குழந்தைகள்
இவள்
வயிற்றில் பிறக்கவில்லை
முதுமையிலும்
இவள்
முதியோர் இல்லம் பார்க்கவில்லை
இவள் போல்
தேவதையாய்
வாழ்ந்திட யார்க்கு தான்
ஆசையில்லை ....
பாண்டிய இளவல் (மது. க )