வித்தியாசம்

வயிற்றிலே இருக்கும்போது
உதைத்திட்ட வலியதனை
மறக்கமுடியுமா?

பூவுலகை கண்டிடவே
வெளியேற நீ துடித்து
கொடுத்திட்ட வலியதனை
மறக்க முடியுமா?

நண்பகலோ நடுநிசியோ
அழும்போது பசியாற்றி
ஆளாக்கிய செயலதனை
மறக்க முடியுமா?

நேர்கோணா வகிடெடுத்து
நிறைவாக அலங்கரித்து
ஊர் கண்ணின் திருஷ்டி படா
மையிட்ட செயலதனை
மறக்கமுடியுமா?

பட்டயங்கள் பல பெற்று
பாரினிலே சிறந்திடவே
பத்திரமாய் பள்ளிக்கூடம்
நீ சென்று படித்திடவே
மைல்தூரம் நடந்ததனை
மறக்கமுடியுமா?

இன்னும் இன்னும் இதுபோல
எண்ணற்ற எண்ணங்களை
என் தாயார் கேட்டார்கள்
அண்ணனிடம் அழுதுக்கொண்டே!

தாய் சொன்ன சொல்லையே
அண்ணனும் சொன்னானே
ஒன்று மட்டும் வித்தியாசம்

தாய் சொன்னாள் மறக்கமுடியுமா?
அண்ணன் சொன்னான் நினைக்கமுடியுமா?

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Nov-14, 10:08 pm)
Tanglish : viththiyaasam
பார்வை : 184

மேலே