உன் கணக்கு தொடங்குகிறது

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய்....

பின் இரவின் வெளிச்சத்தில்
பிசாசுகளின் தாலாட்டில்
தூக்கம் தொலைத்த
தொடை நடுங்கியாய்....

இழந்த மானத்தை
இறக்காத வெறுப்புகளால்
இரும்பு கரம் கொண்டு
அடக்க முயலும்
இறந்த வாழ்கையின் இயலாமையாய்....

செல்லரித்த உறுப்புகளில்
சிலந்தி வலைப்பின்னும்
கடவுளை நம்பாத
காப்பீட்டுத் திட்டமாய்....

அழிந்த ஆயுள் ரேகையின்
அடையாளம் தெரியாமலிருக்க
மூடி மறைக்கின்ற
மருதாணிக் கோலமாய்....

செல்லா காசுகளாய்
சேர்ந்துக்கொண்டே இருக்கின்ற
உடைக்கப் படாத
வாழ்க்கை உண்டியலின்
சேமித்த பாவங்களாய்....

பாவிகளைக் கண்டு
பயந்து நடுங்கும்
பரிசுத்த ஆவியாய்....

காலியாகும் சவக்குழிக்கு
கணக்கு பார்க்கும்
கபளீகரமாய் ....

கல்லறைத் தோட்டத்தில்
கடைசியாக கேட்கப்பட்ட கேள்விக்கு
பதிலைத் தேடி
பரிதவிக்கும் பிணமாய்....

உன் கணக்கு தொடங்குகிறது
என் கவிதை முடிகிறது....

எழுதியவர் : ஜின்னா (3-Nov-14, 8:49 pm)
பார்வை : 5273

மேலே