இதயத்தின் பிளிறல்

கொடியும் , கிரீடமும்
தேரும் காத்திருக்கையில்
சாமான்யனின்
பாவ தேசத்தில்
திடீரென
திக் விஜயம் செய்தாய் !
ஆச்சரியத்தோடு
நான் அண்ணாந்து
பார்க்கையில்
என்னை உயர அழைத்து
உன ததிமானுடனுக்கான
சிம்மாசன மளித்தாய் !
நமதிருவருக்குமான
உடன்படிக்கைப் பாதகத்தின்
ஷணப் பொழுதுப்
பிறழலில்-
உனது ராஜகுல ரௌத்திரத்தில்
சத்ருவா யெண்ணி
உனக்கென துடித்த
என் இதயத்தினை
கொடூரமாய் பிய்த்து
வீதியிலெறிந்து
கதவடைத்து விளக்கணைத்தாய்!
கதவுகள் அடைக்கப்படும்வரை
புரிதலின்மையினொரு
பறவை -
நம் நட்பின் மீது
அடைகாத்தது உண்மை தான் !
அடையாள
துஷ் பகிரங்கத்திற்கான
துஷ்யந்தனின்
மோதிரமெதுவும்
என்னிடம் கிடையாது
ஆயினும் -
ரணங்களின் படிக்கட்டில்
வலியின் பிளிரலில்
ரத்தம் கசிந்துகொண்டிருக்கும்
எனதிதயத்தின்
வழியோரத்தில்
என்றேனும் வரக்கூடுமாயின்
எனது நோவுகளைப்
பூட்டிச் சாவியை
உத்திரத்தின் மீது
வைத்திருக்கிறேன் !
எடுத்தெனது
இதயம் திறந்து பார்
உனது பெயரைச்
சொல்லித் துடிக்குமதன்
சத்தம் -
உனது பாதக்கொலுசு
உணரக் கூடும் .