மீனவ நண்பனின் மிதக்கும் துயரங்கள்

கரம் பிடித்தவள்
கலங்கிக் கிடக்க….!
உறவுல வந்தவன்
தரையிலே உறங்க….!
உணர்ச்சியில வந்தவன்
கருவறையிலே மிதங்க….!

மணலில் கால் பதித்து
சோகத்தை மனதில பதித்து….!
நெய்த வலையினை
நெஞ்சிலே சுமந்து….!
சுண்டக்கஞ்சியினை
தலையிலே சுமந்து….!
தசை தளர்ந்து
விசை படகில்
ஏறினான் மீனவநண்பன்….!

வெண்ணிற அலைகள்
வெறிகொண்டு மோத….!
கட்டையினால் கோர்த்த
கட்டுமரப்படகுகள்
பெரும் சத்தத்துடன்
பேரணியாக செல்ல….!

கடல் அன்னையை கண்டு
களிப்புடன் வலையினை வீச….!
நொடிபொழுதில் சிக்கின
நூறாயிரம் மீன்கள்….!

துள்ளிய மீன்கள்
துவண்டன கணப்பொழுதில்….!
மடிந்த மீன்களை
மகிழ்ச்சியுடன் கைகளில் அள்ள….!
சீறிப்பாயிந்தன சிறு குண்டுகள்.

சிறைபிடித்தான் ….!
சீறிப்பாய்ந்தான்
சினங்கொண்டான்
சித்ரவதைசெய்தான்
சிறையில் தள்ளினான்….!

கடல் எல்லையை
கடந்தான் என
கட்டை தட்டினார் நீதியரசர்….!

இயற்கைக்கு ஏது எல்லை?
காற்றுக்கு ஏது அளவு?
வானுக்கு ஏது உயரம்?
மலைக்கு ஏது எடை?
விண்மீன்களுக்கு ஏது கணக்கு?

கடலுக்குள் கோடு போடு….!
காற்றுக்கு தடை போடு….!
ஆற்றுலே நாற்று நட….!
வெண்ணிலவுக்கு வெளிச்சம் காட்டு….!
விண்ணுக்கு வர்ணம் பூசு….!
மனதிற்கு மடை போடு….!
இவையெல்லாம் முடியுன்னா….!
அவன் கைக்கு விலங்கு போடு….!

போதை வஸ்து கடத்தினான் என
பொய் வழக்கு திரித்து
தூக்கு கயிற்றை திரிக்கின்றாயே….!
எங்கள் இனத்தை அழித்த உனக்கு
காலமும் கயிறு திரித்து
கசையடி கொடுத்திடுவோம்
உலக அரங்கில் உனை நிறுத்தி….!

கடல் நண்பன் இரத்தம் சிந்தி
கட்டிலில் கட்டுடன் கிடக்க….!
மீனவன் சிந்திய ரத்தத்தில்
மீன் பிடிக்கும் அரசியல்வாதிகள்…!

பிணத்தை செய்திகளாக்கி
பக்கத்தை நிரப்பி
பணத்தை அள்ளும்
பத்திரிக்கையாளன்….!

செத்தவனை நாயகனாக்கி
பெத்தவளை பேட்டி எடுத்து....!
துக்கத்தை தொடர் எடுத்து
துட்டுகளை கொள்ளை அடிக்கும்
தொலைக்காட்சிகள்....!

துதி பாடும் அரசியலும்
துறவி வேடமிடும் அரசியலும்
தூதாய் விட்டு துவண்டனர்….!

எல்லையின் தொல்லைக்கு
எழுதுகோல் தீர்வாகுமா?
வடியும் கண்ணீருக்கு
கடிதம் தீர்வாகுமா?

எழுத்தில் கசிந்த மை
கண்களில் கசியும்
கண்ணீரை துடைத்திடுமா?
ஏந்திய துப்பாக்கிகளுக்கு
காந்திய வழி
பதில் சொல்லுமா?

மடியும் மீனவனுக்கு
விடியும் நாள் வருமா?
பொறுத்திருப்போம்
பொறுமையுள்ள வரையில்….!
விடைகிட்டாவிடில்….!
போராடுவோம் அறவழியில்….!
உடலில் உரமுள்ளவரையில்….!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (10-Nov-14, 7:45 am)
பார்வை : 266

மேலே