அழிவின் நிழல் - கே-எஸ்-கலை
படுக்கப் பாயுமில்ல – கட்டி
உடுக்கத் துணியுமில்ல !
நடக்க வீதியில்ல – நீட்டிக்
கெடக்க வீடுமில்ல !
தடுக்க நீதியில்ல – தட்டிக்
கேக்க நாதியில்ல !
ஒடுக்கப் பட்டவங்க – ஒம்ம
காக்க யாருமில்ல !
சாமி கோயில்கட்டி – சடங்கு
நூறு செஞ்சி...
பூமி காத்தஇனம் – பொதஞ்சி
போன பின்னே...
ஆமி காரன்வந்து – ஆழ
கெடங்கு வெட்டி...
சாமி செலையெடுத்தான் – பாவி
சனமே நீங்கஎங்க ?
கத்தி கதறியழ – பாவம்
இழுத்துப் போச்சிசனி !
செத்த பொணத்தக்கூட – ஐயோ
திருப்பி கொடுக்காதினி !
அத்து அறுந்துப்போன – ஊரே
சுடுகாடு தானேயினி ?
சுத்தி சுத்திவந்தீக – எங்கடா
அந்த மகாமுனி ?
பால குடிச்ச – சின்ன
பச்ச கொழந்தகள...
வாழ துடிச்ச – நல்ல
வயசுப் புள்ளகள...
ஓலப் பாயிக்குள்ள – கெடந்த
ஊருப் பெருசுகள...
ஓலம் போடவச்சி – மண்ணு
அள்ளிப் போயிடுச்சே !
கூட வாழ்ந்துவந்த – நல்ல
ஆட்டு மாட்டுகூட்டம்
காட சுத்திவந்த – சின்ன
நாட்டுக் கோழிக்கூட்டம்
வீடக் காத்துவந்த – நன்றி
உள்ள நாயிக்கூட்டம்
தேட எலும்பில்லாம – மண்ணு
தின்னு முழுங்கிடுச்சே !
கதச்சி கதச்சியே – ஒம்ம
கழுத்த அறுத்தாக !
ஒதச்சி ஒதச்சியே – நெதம்
உசுர எடுத்தாக !
விதச்சி வாழ்ந்த – நெலம்
புதச்சி போன பின்னே !
பதச்சி போனமுன்னு – பச்ச
பொய்ய பீச்சுறாங்க !
கொட்டு மழயில - மண்ண
கொத்திக் கெடந்தீங்க !
வெக்க வெயிலுளு - வேர்வ
சிந்திச் செத்தீங்க !
கூட கூடையா - கொழுந்
தெடுத்துப் பொழைச்சீங்க !
பாட கூடயா – வேணான்னு
அப்பாவிளே போனீங்க ?
----------------------------------------
(மகாமுனி – கொஸ்லந்தையில் புதையுண்ட ஆலயத்தின் கடவுள் பெயர்)