தண்ணியில்லாத காடு - Mano Red

மழை எப்படி இருக்கும்..??
பழைய காதலி போல
முகச்சாயல் கொஞ்சம்
மாறி இருக்குமோ..?
பொறுத்துப் பார்க்கலாம்
மழை பெய்யும் வரை.....

ஓடு போட்ட வீட்டின்
ஓட்டை வழியே
சொட்டு மழை ரசித்தவனுக்கு,
சொட்டு மழையை
ருசிக்க முடியவில்லை..!!
யாருக்காக இப்போது அழுவது
கண்ணீர் அளவு கூட
தண்ணீர் இல்லையே...!!

ஏய் மழைக் கஞ்சனே
அடைமழை கூட
பெய்ய வேண்டாம்,
அட கொஞ்சம் மழையாவது
பெய்யலாமே,
பாவம் பச்சைப் புல்
வறட்சியில் சிவப்பாகி விட்டது..!!

குடிசை இல்லாதவனால்
கூனிக் குறுகி வாழ முடியும்,
குளத்து மீனுக்கு
நீந்துவது தவிர
என்ன தெரியும்...??
தண்ணீர் வற்றும்
நாள் வருமென்பதால்
நடக்கப் பழகி
வழுக்கி தான் விழும்..!!

வேலை வெட்டிக்காக
மரங்களையெல்லாம்
வெட்டி சாய்த்து விட்டோம்,
இயற்கையிடம்
மானம் போன பின்பு
வானம் பார்த்து என்ன செய்வோம்..?

குடிக்க தண்ணீர் வேண்டி
கடவுள் கும்பிட்டால் போதாது,
இனிமேல்
மனிதன் வாழும் ஊரில்
எதுவும் இருக்காது,
தண்ணியில்லா காட்டுக்கு
தவளை கூட தவறி வராது..!

எழுதியவர் : மனோ ரெட் (13-Nov-14, 8:06 am)
பார்வை : 180

மேலே