மெர்சலாயிட்டேன் - ஈரா

-------------------------------மெர்சலாயிட்டேன்-------------------------------

ஏறிச்சென்றோர் விட்டுச்சென்ற
அடையாளக்குறியின்
நுனிவிரல் உறுத்தல்கள்
ஏற்றி விட்டோர் முகமெங்கும்
புது வரிகளை விதைக்கின்றன.

வேட்டிக்கதவு தொங்கும்
வெளிச்சமில்லா ஏழை வீட்டின்
காரை பெயர்ந்த
குட்டிச் சுவர்களில் மட்டும்
சூர்யோதயங்கள்
வெகுபிரகாசமாய்.

இட்லி பொங்கல் குடிநீர்
மருந்து மாத்திரை யாவிற்கும்
அநாவசியப்பச்சை பூசிய நாட்டில்
விளைநிலங்கள் மட்டும்
புழு நெளியும்
வெடிப்பாளங்களாய்.

அமெரிக்காவென மாறப்போகும்
தொகுதியின் மக்கள்
அடுத்தவேளை சோற்றுக்கு பசியோடிருக்க
ஆகாயவிமானத்துக்கு
அங்கப்பிரதட்சனம் செய்தும்
கஞ்சிக்கு குறைவில்லை
கறை வேட்டிகளில்.

கரும்பனி பூசிய
ஆல்ப்ஸ்மலைச் சிகரங்கள்
உயர்ந்துகொண்டேயிருக்க,
கக்கன் இறங்கிய
பேருந்து நிறுத்தம் இன்றும்
காலியாகத்தான் உள்ளது.

பெரு நிறுவன பெருச்சாளிகளின்
கணக்கில் வராத காந்திக்கு
குழைந்து போவதும்,
பெரும்பான்மை ஓட்டளித்தால்
கோபுரமாய் மாற்றுவோமென
குடிசை வாசலில் நின்று
கூப்பப்படுவதும்,
ஒரே கைகளே.

அன்றியும்,

ஊழல் தின்று வளர்ந்தோரை
உழைப்பவன் தூக்கி விடும்வரை,
ஐந்தாண்டு கழிந்த
அடுத்த அயோக்கியரை எண்ணி,
மிரள்தலையன்றி
வேறொன்றுமறியேனே.

எழுதியவர் : ஈ.ரா. (16-Nov-14, 3:15 pm)
பார்வை : 92

மேலே