முதுகெலும்பி 10
முப்பதுநாளு தண்ணிபாச்சலு ஒரம் வீசுறது....வாமடகட்டு..... மயிலான் கூட்டு.. கில்லிதாண்டுன்னு அறுப்புநாளும் வந்திருச்சி..வெள்ளென நாலு மணிக்கெல்லா வயக்காட்டுக்கு வந்துட்டெம். அன்னெக்கி.
"என்ன எப்படா அள்ளிக்கட்டப்போறே"ன்னு கேட்டுக்கிட்டே புதுப்பொண்ணு கணக்கா தலையத் தொங்கப் போட்டுக்கிருந்திச்சி நா வளத்து வச்சிருந்த பழுத்த நெல்லுக்காடு....
புதுப்பொண்ணுன்னு சொன்னப்பறந்தெம் நியாவகத்துல வருதுப்போய்...இன்னைக்கி எப்படியாவது ஊருக்குள்ள பேசி குழலி அப்பெங்கிட்ட சம்மதத்த வாங்கிப்புடனும். எம் உசுரக் காக்குற மண்ணே... நீதாந் தாயி கூட நிக்கணும்... கொஞ்சம் பெசகுனாலும்.. அம்புட்டுத்தேம்.. எல்லாம் பொக... !! சரி... இப்பம் போனேத்தேம் மயிலனக் கூட்டிகிட்டு சாமித்தாத்தா கடைக்கி போக சரியா இருக்கும்...ன்னு கெளம்பிட்டேம்.....!
ஆளுக எல்லாம் கடையிலதே உக்காந்திக்கிருக்கும்.. நாம வெரசா போயி சொல்லிப்புட்டு வந்தாத்தேம் டீய கீய குடிச்சிப்புட்டு அசையிவாய்ங்கே.. என்னதா நேரமே சொல்லிருந்தாலும்.. கடையிலேயே உக்காந்திக்கிருப்பாய்ங்க...!
“ இன்னைக்கி வெளுப்புல வந்து நீ கூப்புடலையேப்பா..............” எகத்தாளாமா வரும் பதிலு...மான ரோசம் காக்குற கூட்டமுல்ல... பயபுள்ளைகளுக்கு அம்புட்டு வீராப்பு..... என்னத்துக்கு...வம்பு...!! போயி ஒருவார்த்த சொல்லிப்புட்டு வந்துருவம்....!!
எல்லாருக்குந் டீத்தண்ணி எஞ்செலவுதேம் அன்னைக்கி. கொளத்துக்கரையில இருக்க சிமிண்டுமதகடில கருக்கருவாள தீட்டிக்கிட்டு வரப்புல எறங்கவும்.. நாஞ்சொன்ன மாதிரியே குழலி வந்து உக்காந்திருக்கவும் பொலபொலன்னு விடியவும் சரியா இருந்திச்சி...!!
புதுசா பொறந்த வெளிச்சத்துக்கும் குழலி பொடவ நெறத்துக்கும் அப்பிடி ஒரு பொருத்தம். நல்லா பின்னங்கொசுவம் வச்சி உச்சிக்கொண்டை ஏத்தி.... நெல்லு அறுக்க வந்த காளியாத்தா மாதிரி உக்காந்திருந்தா...!
அவ இருந்த அழகக் கண்டு கூட்டத்துல ஒரு சின்னாத்தா மொணங்குனிச்சி..” என்னடா இவா..கருதறுக்க வந்தாளா... கட்டிக்கிப்போக வந்தாளா...? காலங் காத்தால இப்பிடி மினுக்கிக்கிட்டு குந்திக்கிருக்கா....”
மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டேம்..
“பச்சச் சீல கட்டி பறிச்சிக்கன்னு
வந்துநிக்கே....
பளபளன்னு விடிஞ்சிருச்சே...
பாதகத்தி என்ன செய்ய.....
இப்படியே இருந்துக்கடி இருட்டு
போத்தும் மட்டும்...
ஈறஞ்சி மாசத்துல ரெட்டப்புள்ள
ஒம்மார முட்டும்......ன்னு நா மனசுக்குள்ள பாடுனது அவெளுக்கு புரிஞ்சிருச்சான்னு தெரியல... குபுக்குன்னு வெக்கச் செவப்பேறி எந்திருச்சி நின்னுக்கிட்டா....
“ சரியப்பா.... இந்த வருஷம் மொத அறுவ நம்ப முதுகெலும்பி பயலோடதுதெம்.... இவெம் வெளச்சல வச்சித்தே அடுத்தவகளோடதும்.... நெறைவா வெளஞ்சி வரணும்.. யாரு தலக்கருது அறுக்கப் போறீக..?” பொண்டுக நிக்கிற பக்கமாப் பாத்து சலம்புனாரு பெரும்புள்ளி தாத்தா... எப்பவும் அறுக்கச் சொல்லும் கெளவி “அவுகளா நம்மளக் கூப்புடட்டும்”ன்னு பகட்டுத் திமிரோட வெறச்சிக்கிட்டு நிக்க.....
“யேய்.. கொழலி...இங்கிட்டு வா.. என்னத்தா பாத்துகிட்டு அங்கிட்டே நிக்கிற..? இந்தா.. அருவாளப் புடிச்சி நல்லா வேண்டிக்கிட்டு ஒரு கொத்த அறு...”ன்னு ஒரு சத்தம் அதட்டுன மாதிரி வெச்சம்...
எல்லா சனமும் அதிந்து என்னப் பாக்க ...வெறச்சிக்கிட்டு நின்ன ஆத்தா இப்ப வெடுக்குன்னு மூஞ்ச திருப்பிக்கிருச்சி...!!
பெரும்புள்ளித் தாத்தா சத்தமா குதிக்க ஆரம்பிச்சிருந்தாரு.. “ என்னடா..? வழக்கத்த மாத்துறீய..காலங் காத்தால மனுசன கூட்டிக்கிட்டு வந்து காறித் துப்புறீயளா..?மொத்த ஊருங் கூடி ஒம் வயல்ல அறுப்புக்கு நிக்கி.. அடுத்தடுத்த வயலுகளும் அறுப்புக்கு காத்துக் கெடக்கு இது முடிஞ்சி...நீங்க என்னடானா அத்துக்கிட்டு வந்த ஒரு வாழாவெட்டிச்சிறுக்கிய கூட்டிக்கி வந்து. சின்னப்புள்ள வெளையாட்டா வெளையாடுறீய....?!!! " வேட்டிய மடிச்சிக்கட்டி பட்டாபட்டி கால்சட்ட தெரிய தவ்விக் குதிச்சாரு...!
குழலிக்கும் ரொம்ப அதிர்ச்சியா ஆயிருச்சி..... இப்பிடி பொதுவுல போட்டு ஓடைச்சதும்.. அவுக அப்பாவோ ... அறுத்த ஆட்டுக்குட்டி கணக்கா கோவத்துல... அவமானங் கலந்துபோய்த் துடிக்கிறாக.. எனக்கும் என்ன பண்றதுண்ணே கொஞ்சநேரம் புரியலை...
“நிறுத்துங்கடேய்ய்ய்யய்...........................” மயிலன் கத்துன சத்தத்துக்கு தூரத்துல பனம்பழம் ஒண்ணு விழுந்துச்சி.....!
"எவனாச்சும் இங்கின நின்னுகிட்டு கத்துனாம்... கருது அறுக்குற அருவா கால அறுக்கும் இப்ப.. வக்காலி.. காவு வாங்கிப்புடுவேன் புது நெல்லுக்கு... என்னத்துக்குடா தவ்வுறீய இப்ப..? ஏண்டா கொழலி அறுக்கப்புடாது? வயல்ல ஒழவு வாறப்ப..” ஆத்தா.. கொஞ்சம் நீரார்த் தண்ணி குடுன்னு பெத்த மககிட்ட மாதிரி வாங்கிக் குடிப்பியள்ன்ன...அப்ப தெரியலையோ.. இவ கத.. ?
"களஎடுக்கயில.. ஊரு பொண்டுக எல்லாம் வரப்புல உக்காந்து வெத்தலைய மெல்லுற மாரி மத்தவகள மெல்லுவாகன்ன.. அப்ப இவ மட்டும் மாங்கு மாங்குன்னு அவபாட்டுக்கு கள புடுங்குவால்ல..அட.. அப்பவுந் தெரியலையோ..?"
ஆமாண்டா.. எந் தங்கச்சி கொழலிய எஞ் சிநேகிதேம் முதுகெலும்பிக்கி நாங் கொடுக்கெம்.. எவனுக்காச்சும் தைரியம் இருந்தா கேட்டுப்பாரு.....” ன்னு பொரிஞ்சாம்.. மயிலான்...இப்ப அவம் பட்டாப்பட்டி காத்துக்கு விசிறி விட்டிச்சி...
அதே... கோவத்துல...” இந்தாரு கொழலி...அவெம் ஒன்ன கட்டிக்கிறேங்காம்.. நீ என்ன சொல்ற...? எவனுக்கும் பயப்புடாத.. இங்கின.. அண்ணேம் நா இருக்கே.. ஒரக்கச் சொல்லு....
அம்புட்டு நேரங் கட்டிக்கிட்டு நின்ன கடைமடை ஒடைஞ்ச கணக்கா.. கதறி அழுது கும்பிட்டா குழலி என்னையும்.. மயிலானையும்....!!
மயிலன் கொஞ்சம் அடங்குனாம்.. அவ கண்ணீரப் பாத்து..
"இந்தா.. சித்தப்பு.... நீ என்ன சொல்ற..? ஊருக்காரப் பயலுகள விடு... நீ ஒம் மனசுப்படி பேசு....!"
அவம் பேசறதுக்கு முன்னாடி கோவமா குழலிய அடிக்கப் போனவரு... அப்பிடியே கையெடுத்துபுட்டு மயிலானப் பாத்தாரு..! என்னப் பாத்தாரு...!! கண்ணு ஈரமா வளர ஆரம்பிச்சிருச்சி அவருக்கும்....
“எம்மக இந்த ஊருக்கு அத்துக்கிட்டு வந்து நின்னப்ப.. யாரு என்னன்னு கேக்க ஒரு நாதி இல்ல. அவ அம்புட்டு கொடுமைய அனுபவிச்சி இந்த ஊரு எல்லைக்கி வாரப்ப... வாதாயீ.. பாத்துக்கிருவம்ன்னு சொல்ல ஒரு பயலும் வரல... அதுக்காக எல்லாரையும்அப்பிடி சொல்லிற முடியாது.. எங்களுக்குன்னும் செல பேரு ஒதவி பண்ணத்தா செஞ்சீக... அதெல்லாம் மறந்துற முடியாது... அந்த நேரத்துல இந்தப்புள்ள (முதுகெலும்பியக் காட்டி ) துடிச்ச துடி எனக்குத் தெரியும்.. இவுகளே இப்ப கேக்குறாக.. நாஞ் சாமியா நெனைக்கிற இந்த பச்சநெல்லுமேல சத்தியமா சொல்றேம்.. எம் மகளுக்கும் புடிச்சிருந்தா...... இந்தத் தையில நா இவுகளுக்கு பட்டுவேட்டி.. எடுக்கக்.......” முடிக்கிறதுக்கு முன்னாடியே அப்பங்கால கட்டிகிட்டா குழலி....
ஒட்டுமொத்த சனமும் பல்லுபுடுங்குன பாம்பா...தலையத் தொங்கப்போட...
திரும்பவும் பெரும்புள்ளி “ அதுக்கில்ல.. இவுகளே... மாசம் மார்கழில்ல.. அதுதெங் யோசிச்சம்... தங்கம் போல புள்ளைய இவெனுக்கு குடுக்குறதுல எங்களுக்கென்ன... நீங்களே சொன்னப்புறம் எங்களுக்கும் சந்தோசந்தேன்....! அப்பறம் என்னப்பா....”ன்னு ஊரப் பாத்து கேக்க.....
தப்பு ஒணந்து தலையத் தொங்கப்போட்ட அம்புட்டு சனமும் சலசலத்து சம்மதமுன்னு சொல்லிருச்சி...
அப்பறம் என்னங்க...
“குத்து வெளக்கேத்தி
குழலி அறுத்தெடுக்க
ஆனந்தக் கண்ணீருல
அப்பனாத்தா மொகந் நனைய
சொல்லுக்கு மாறாம
நெல்லுத் தட்ட எளகி வர.....
ஏலேலோ பாட்டுமா.. எகத்தாளப் பேச்சுமா...அறுத்த கருதெல்லாம்.. களமோட்டுக்கு காயவர...வெளச்சலும்.. வெதச்சதுமா.. எங்க சனம் எல்லாருக்கும் வழிய வழிய சந்தோசமுங்க...
இனித்தாங்க முக்கியமான வேலை எல்லாங் கெடக்கு. நெல்லு அடிச்சி விக்கணும்.. அடிச்சி முடிச்சிறனும் மொதல்ல... மானம் வேற ஈசானி மூலையில கம்மப் போடுது....
(அப்பறம்... வாறம்....!)