கடைசி காதல்----------நிஷா

மேற்கே மறையும் சூரியனுக்கு
மேகம் வந்து கையசைக்க;
காக்கா குருவி கூட்டமெல்லாம்
கூட்டை நோக்கி பறந்திருக்க....
அந்திசாயும் அழகில் மயங்கி
அமர்ந்திருந்தேன் ஆலமரத்தின் கீழே
கால்வலித்த காகம் ஒன்று
கண்முன் வந்து நின்றது..
காதல் கதையை சொல்லு என்று
கரைந்து கரைந்து கேட்டது;
மெல்ல மெல்ல நினைவுகள் எல்லாம்
மேடு பள்ளம் தாண்டுது...
தாவணி போட்ட வயது வந்து
தாளம் போட்டு ஆடுது;
இரட்டைசடை பின்னலிட்டு
மொட்டைமாடி ஏறிநின்று..
காதல் வயதை தேடி
காலம் ஓடி செல்லுது....
முகம் எல்லாம் வெட்கத்திலே
மூன்றாம்பிறையாய் மலருது....
தொட்டில் மட்டும் அறிந்தபோது
துளிர்த்த காதல் அம்மா மீது...
தோள்மீது சுமந்த போது
சுரந்த காதல் அப்பா மீது.....
படிப்பு சொல்லி தந்த போது
பத்து வயதில் டீச்சர் மீது;
பருவம் வந்து நின்றபோது
பாசம் வைத்த தோழி மீது....
திருமணம் ஒன்று ஆனபோது
கண்கள் முழுதும் கணவன் மீது;
தாய்மை நிலையைத் தொடும்போது
சுமந்து பெற்ற குழந்தை மீது...
தள்ளாத வயதைத் தொடுகையிலே
தாங்கும் ஊன்றுகோல் மீது
மரணம் வந்து சேரும்போதோ
மயங்கிச்சரியும் மண்ணின் மீது.....