சுமைதாங்கியின் சோகங்கள்

வாரந்தோறும்
இன்னிசை கச்சேரி....!
மாதந்தோறும்
மருத்துவ சோதனை....!
மூன்று வேளை
முறையான உணவு....!
பளிச்சிடும்
பளிங்கு நடைபாதைகள்....!
பசுஞ்சோலைகள்
என்னைச் சுற்றி....!
பாடும் குயில்கள்
என் மனதைச் சுற்றி....!
இவையெல்லாம் இருந்தும்....!
ஏங்குதே என் மனம்
என்னுறவை சுற்றி....!

பெற்ற உறவோ
உலகின் மறுமுனையில்....!
உற்ற உறவோ
ஊர் கோடியில்....!
தொட்ட உறவோ
தொடும் தூரத்தில்....!
கரம் பற்றிட யாருமிலர்
என்னருகில்....!

உறவுகளின்றி தவித்துத்
தனி மரமாய்....!
உணர்ச்சிகளின்றி திரிந்து
வெறும் ஜடமாய்....!
பாசக்கயிற்றை திரித்து
வீசயியலா கைகள்....!
பிரிவின்றி பரிவாரங்களுடன்
வாழ ஆசை....!
பெற்ற உறவுக்கோ
பிரித்தாளும் ஆசை....!

அன்று மேஜை மேல்
கோப்புகள் கட்டுகளாக.....!
இன்று மேஜை மேல்
கேப்பை கஞ்சிகளாக....!
அன்று பணிசுமை
பசியின்றி....!
இன்று பிணி சுமை
நான்குசுவற்றுக்குள்....!
அன்று மரம் ஊன்றினோம்
பசுமைக்காக....!
இன்று நன்றி கடனாக
உருமாறி ஊன்று கோல்
முதுமைக்காக....!

ஆசையுடன் எனை பார்க்க
மகள் வருவாளா....!
மகிழ்ச்சியாய் பேசிட
மகன் வருவானா....!
மீசையை பிடித்து இழுக்க
பேரன் வருவானா....!
கழுத்தினில் பிடிபோடப்
பேத்தி வருவாளா....!
இல்லை இவையாவுமின்றி
ஓசையின்றி எனை
கொண்டு செல்ல
எமன் வருவானோ?

நினைவுகள் எங்களை
கொல்லுகின்றன....!
காலன் எங்களுக்குக்
காலத்தை குறிக்கும் முன்.....!
எமன் எங்கள் உயிரை
ஏந்தும் முன்....!
இறைவா எங்கள் நினைவுகளை
முதலில் கொன்றுவிடு....!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (18-Nov-14, 8:45 pm)
பார்வை : 105

மேலே