பயந்தே தோற்பதுதான் உலகமடா
எந்தக் கஷ்டத்திலும் முன்னேறலாம்! - நீ
*** இந்த உலகையொரு கை பார்க்கலாம்!
சொந்த முயற்சிகளைக் கைவிடாதே! - எந்தச்
*** சோதனைக்கும் அஞ்சி ஓய்ந்திடாதே!
வாழ்க்கை ஆரம்பம் சரியில்லையா? - உனக்கு
*** வாய்த்த தாய்தந்தை சரியில்லையா?
வாய்ப்பும் வசதிகளும் கிடைக்கலையா? - உன்
*** வாழ்வில் ஒருபிடிப்பும் இருக்கலையா?
எதையும் நினைத்துமனம் உளையாதே! - நீ
*** எடுத்த உறுதிகளில் குலையாதே!
எதையும் மாற்றவொரு காலம்வரும்! - உன்
*** இதயம் புரிந்துதவ தெய்வம்வரும்!
கோடீஸ் வரர்களுக்கே வாழ்வில்எதோ - ஒன்றில்
*** கொஞ்ச மேனும்குறை கவலையுண்டு!
தாடீஸ் வரனான உன்றனுக்கோ - அது
*** தலைவிரித் தாடினால் விந்தையென்ன?
உன்னைப் படைத்தபொழு தேஇறைவன் - நீ
*** உயரத் திறமைகளும் படைத்துவிட்டான்!
சின்ன விசயங்களில் புழுங்காதே! - உன்
*** திறமை தேய்ந்துபுத்தி மழுங்காதே!
பந்தை நீர்க்கடியில் மூழ்க்கிவிட்டால் - அது
*** பாய்ந்து படபடத்து வருமல்லவா, - நீ
அந்தத் துடிதுடிப்பைப் பெறவேண்டும்! - உன்
*** ஆற்றல் முழுதும்வெளி வரவேண்டும்!
பத்து முயற்சிசெய்து பிறருயர்ந்தால் - நீ
*** நூறு முயற்சிசெய்ய முன்வரணும்!
மொத்த நம்பிக்கையும் பெற்றிடணும்! - புவி
*** முழுதும் வேர்வைத்துளி விழுந்திடணும்!
உயர்தே ஆவதென நீநினைத்தால் - இங்கே
*** உன்னைத் தடுப்பதொன்றும் இல்லையடா!
பயந்தே தோற்பதுதான் உலகமடா! - அப்
*** பயத்தை விட்டவர்க்கே வெற்றியடா!