வண்டி வண்டி ரயிலு வண்டி

எழுத்து தோழமைகளுக்கு வணக்கம், மிக நீ...............ண்ட இடைவெளி (சுமார் பதினைந்து ஆண்டுகள்) பின்னான முதல் ரயில் பயணம் பற்றிய அனுபவ பகிர்வு இது.


பல ஆண்டுகளுக்கு முன்... எனது ஐந்தாம் வகுப்பில் சென்னை சென்றது. அதன் பின் அந்த பக்கம் தலை வைத்து படுக்க மட்டுமே வாய்ப்பும் சூழலும் அமைந்தது.

என்னதான் ஏழு கழுதை வயசானாலும் ரயில்ல போகப்போறோம்ன்னு திட்டமிட ஆரம்பிச்சதும். ஆனந்தம், ஆச்சரியம், பூரிப்பு போன்ற அரியவகை உணர்ச்சிகள் அடிமேல் அடியெடுத்து வைத்து அங்கமெங்கும் ஆக்கிரமித்துகொண்டன. இத்தன வருஷம் இல்லாம என்ன இப்போ திடீர்ன்னு ரயில் பயணம், எதுக்கு சென்னை. ? புகைவண்டி பேட்டிகள் போல அடுக்கடுக்காய் கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளில் ஒரு ரவுண்ட் வருவோம்.

அது அக்டோபர் மாதத்தில் ஏதோ ஒரு நாள், சதீஸ் அண்ணனின் திருமண வரவேற்ப்பு நிகழ்வில் இருந்தோம், போன் ரிங்கவும் ரஞ்சித் ஹலோ என்றபடியே வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து 'ஏதோ வெப்சைட்ல இருந்து கூப்பிடுறாங்க, நாளைக்கு கூப்பிடுங்க'ன்னு சொல்லிட்டேன்' என்றபடி எங்களோடு மிங்கிள் ஆகிவிட்டார். அழைத்த நபர் நமது எண்னை முதலாளி பாலன் ஐயாவிடம் வாங்கியதாக குறிப்பிட்டதாக ரஞ்சித் சொன்னார் 'யாரா இருக்கும்?' என ஆவல் தொற்றிக்கொண்டது. அடுத்தநாள் மாலை அந்த எண்ணை அழைத்தேன், 'வணக்கம் தம்பி ஆபீஸ்ல இருக்கேன், அப்பறமா கூப்பிடுறேன்' என சொல்லி சென்றார் தன்னை சுந்தர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அண்ணன்.

சரியாக சொன்னபடியே சுந்தர் அண்ணா அழைத்தார், பேசினோம், அறிமுகம் ஆகிகொண்டோம், 'நான் பொதிகைல உங்கள பார்த்தேன், பாலன் சார் கிட்ட வேலை செய்யுறதா சொல்லிருந்தீங்க, அவர்கிட்டதான் உங்க நம்பர் வாங்கி உங்களுக்கு கூப்பிட்டேன் என்றார். எண்ணற்ற சாதனையாளர்களை சந்தித்து அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.

நம்மை பற்றிய தகவல்களை மெயிலில் பெற்றுக்கொண்டு நேரில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார், அப்பொழுது சகா சூர்யா பற்றியும் பேச்சு எழ அவரை நம் வீட்டிற்கு வரவழைப்பது என்றும், எங்கள் இருவரையும் சுந்தர் அண்ணன் ஒன்றாக சந்திப்பது என்றும் முடிவானது. செப்டம்பர் துவக்கத்திலேயே அந்த சந்திப்பும் நிகழ்ந்தது. ரைட்மந்த்ரா வெப்சைட்டிற்க்காக என்னையும் சூரியாவையும் பேட்டி எடுத்துகொண்டார் சுந்தர் அண்ணா, பின்னர் வலைதளத்தின் ஆண்டுவிழா மற்றும் ரைட்மந்த்ரா விருதுகள் விழாவிற்கு அழைத்தார், 90% தயக்கத்தோடு வருகிறோம் என சொன்னோம். அதை உணர்ந்த அண்ணன் இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை புரியவைத்தார்.

சூரியா வும் நானும் ஏகப்பட்டமுறை ஆலோசித்து யார் யார் செல்வது என பட்டியலிட்டோம் சுந்தர் அண்ணனை சந்திக்கையில் எங்களுக்கு அறிமுகமான விஜய், மற்றும் சக்திவேல் அண்ணன்கள் பட்டியலில் இணைந்துகொள்ள, எங்கள் இருவரது பெற்றோர் உள்பட நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து 15 பேர் கொண்ட பட்டியல் தயார் ஆனது. அப்படியே எல்லோருக்கும் ஸ்லீப்பரில் டிக்கெட்டும் சூர்யாவால் போட்டாகி விட்டது, ரிட்டர்ன் டிக்கெட் போடுகையில் அக்கவுன்ட் கையை கடிக்க அங்கும்மிங்கும் சமாளித்து அதையும் உடனே போட்டுவிட்டேன். (எங்க லேட் பண்ணா டிக்கெட் கிடைக்காதோங்கற பீதிதான்). ஆச்சா இப்போதான் ட்விஸ்ட்டு... டிக்கெட் போடும்போதே எல்லார் சம்மதமும் கேட்டுதான் போடப்பட்டது ஆனாலும் பயணத்தேதி நெருங்க நெருங்க ஒவ்வொருவராய் லிஸ்டில் இருந்து வெளியேறிக்கொண்டிருன்தனர். இறுதியாக பதினொரு பேர் கொண்ட குழு தயார் ஆனது இத்தோடு எல்லாம் ஓகே என்றெண்ணிய பொழுது ஓடோடி வந்தது இன்னொரு ட்விஸ்ட் 'மர்ம காய்ச்சலால் சூரியா தாக்கப்பட்டு படுக்கையில் கிடத்தப்பட்டார்'

'டேய் இவன் அடிவாங்கி மயங்கிட்டான், அங்க வாங்கடா ஒருத்தன் இருக்கான்' என்பதுபோல அவரது க்ளைண்ட்டுகள் எனக்கு போன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் 'புலி வால புடிசிட்டிருந்த மொமென்ட்' அவ்வ்.. க்ளைண்ட்டுகள் சொல்றத சூர்யாகிட்ட அப்டேட் பண்ணிகிட்டே கொஞ்சம் கொஞ்சமா கரும்பு ஜூஸ் மிசின்ல இருந்து சக்கைய எடுக்குறாப்ப்டி சூரியாவ காய்ச்சல் உள்ள இருந்து இழுக்கவேண்டியிருந்துச்சு. இதுக்கிடைல ஜிகர்தண்டா குடிக்கபோய் அடியேனுக்கும் காய்ச்சல் உஸ்ஸ். இப்போ சூரியாக்கு நான் கம்பெனி, ரெண்டுபேரும் ஒன்னா நீச்சலடிச்சு கரையேறினோம் அந்தநாள் வந்தே வந்துருச்சு. ஆம் டிசம்பர் 12 இரவு கோவையில் ரயில் ஏறி..... செ.........ன்....னை.... பயணம்.

அப்படி இப்படி ஒருவழியாக செட் ஆகி வண்டியில் ஏறினோம்,... இல்லை இல்லை ஏற்றிவிடப்பட்டோம் நாங்கள் பயந்த அளவு பெரிய சிரமங்கள் எங்களுக்கு ஏதுமில்லை நாங்கள் தான் உடன் வந்தோருக்கு சிறு சிறு சிரமங்கள் தந்தோம். ஆனால் எங்கள் இருவரையும் ரஞ்சித், ராகுல், சரவணன், விஜய், ராஜா மாம்ஸ் எல்லோரும் குழந்தயை பார்த்துக்கொள்வது போல பார்த்துக்கொண்டனர்.

13ம் தேதி விடியல் சென்னையில்...
சென்ட்ரலில் இருந்து வீடு வரையிலான பயணம் புதுமையாக இருந்தது சூரியா காரில் முதலில் ஏறிக்கொள்ள நான் அவரது மடியில் தலைவைத்து படுக்கவைக்கப்பட்டேன் இருவரும் ஆனந்தமாக பயணித்தோம். அன்புள்ளம்கொண்ட சுந்தர் அண்ணனின் நண்பர் ஒருவர் நாங்கள் தங்க வீடு ஒன்றை ஏற்பாடு செய்துகொடுத்தார், அனைவரும் குளித்து முடித்து தயாராக மணி பன்னிரெண்டாகி விட்டது. சூரியா ஓய்வெடுக்கவேண்டும் என்று கேட்டுகொண்டதால் நான் ரஞ்சித் ராகுல் மற்றும் பாட்டிகள் இருவருமாக ஐந்து பேரும் கிளம்பி EA & மெரீனா போய்விட்டு மாலைபொழுதில் வீடு வந்து சேர்ந்தோம். நேரம் ஏழு கூட ஆகாதிருந்த காரணத்தால் காஃபிக்கு அடிபோடுவோம் என அம்மா என்றழைத்தேன் பாட்டி 'டேய் காஃபிலாம் இல்ல புளிசாதம் சாப்ட்டு தூங்கு' என்று எங்கிருந்தோ சவுன்ட் விட சட்டென்று சைலன்ட் ஆகி சாப்பிட்டு முடித்து ஒரு பொந்து போன்ற இடத்தில பாய் போட்டு படுத்து தூங்கிப்போனேன் ரஞ்சித்தும், சூரியாவும், புது ப்ராஜெக்ட் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் நான் தூங்கியது தெரியாமல் எனக்காக அம்மா காஃபி சூடு பண்ணியிருக்கிறார் ஆனால் அடுப்பை ஆஃப் செய்ய மறந்துவிட்டு ஆழ்ந்து தூங்கிவிட்டார், அடுப்பில் அரைமணிநேரம் கொதித்த காஃபி அடிபிடித்து அந்த வீடு முழுதும் புகைமூட்டம். ஆனால் இது எதுவுமே தெரியாமல் நான் நித்திரையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன்.

14ம் தேதி விடிந்தது
எனது அம்மாவின் குரல் கேட்டு 'ஓ...இன்னிக்குதான் ப்ரோக்ராமா?' என எண்ணியபடியே விழித்தேன், பல் துளக்கி குளித்து சாப்பிட, சித்தப்பா வந்தார், பேசிக்கொண்டிருந்தோம் தோழி வந்தார், எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம், எல்லோரும் இனிப்பும் கேக்கும் சாப்பிட்டப்படி இருக்க அடியேன் அவற்றை தவிர்த்தேன் 'ப்ரோக்ராம்ல பேசணும், சுவீட் சாப்பிட்டா இருமல் வரும்' என்றே வேண்டாமென்றேன். அதன் பின் அம்மாக்கள் கிளம்ப எல்லோரும் விழா நிகழ்விடத்திற்கு சென்றோம்.
நிகழ்வு துவங்க நேரம் இருந்த காரணத்தால் அருகிலிருந்த சிவன்பார்க் பூங்காவிற்கு சென்று சுற்றிவிட்டு வந்தோம்.

விழா முடிந்து வீட்டிற்கு வர இரவு 11.45 ஆகிவிட்டது 'நீ இங்க படு... நான் எங்க படுக்குறது' என்று 12.30 மணிவரை ஒரே கலாட்டாவான குழப்பம், அதன்பின் ராகுல் வரக்காப்பி வைக்கிறேன் என எழ சுமார் இரவு ஒன்னேகாளுக்கு எல்லோரும் வரக்காப்பி குடித்தோம். பின்பு சுமார் 2.30 மணியளவில் எல்லோரும் உறங்கிப்போனோம்.

15ம் தேதி விடிந்தது
அதிகாலை எட்டு மணியளவில் விஜய் வந்து எங்களை எழுப்பினார். எழுந்தவேகத்தில் குளித்து தயார் ஆனோம், எங்களது பொருட்களை பேக் செய்துவிட்டு, அந்த வீட்டை சுத்தம் செய்துவிட்டு பாண்டி பஜார் நோக்கி பயணித்தோம், சூரியா, விஜய், ரஞ்சித் ஆகியோரது மடியில் படுத்தபடி அடியேன் பயணித்தேன், பாண்டிபஜாரில் நான் சூரியா விஜய் மூவரும் காரிலேயே இருந்தோம். ஜாலியாக பாட்டுப்பாடி விளையாடிக்கொண்டிருக்க சாப்பிங் சென்றவர்கள் திரும்பினர். அங்கிருந்து கிண்டி சிறுவர் பூங்கா சென்றோம், பின்னர் அப்படியே சேகர் அண்ணா வீட்டிற்கு சென்று ஆயிரக்கணக்கான கிளிகளை கண்டு ரசித்து விட்டு மயிலாப்பூர் நோக்கி பயணித்தோம் அங்கே இரவு சிற்றுண்டியை முடித்துவிட்டு சென்ட்ரலுக்கு வந்தோம். நீலகிரி எக்ஸ்ப்ரெஸ் காத்திருந்தது நாங்கள் ஏறிக்கொள்ள நானும் சூரியாவும் நடு பெர்த்திற்கு ஏற்றிவிடப்பட்டோம் சூரியா அம்மா தூக்கி ஏத்தி இறக்கிறது சிரமமம்ன்னு யோசிக்கையில ரஞ்சித் 'இவங்களும் ஜாலியா ஒருநாள் மேல படுக்கட்டும் மா' என்றபடி சூரியாக்கு மேல் பெர்த்தில் ஏறிக்கொண்டார் இரவு 9.15 மணிக்கு ரயில் மெல்ல நகரத்துவங்கியது, நானும் ராகுலும் பாட துவங்கி அப்படியே உறங்கிபோனோம் 16ம் தேதி காலை கோவையில் விடிந்தது.

நன்றி
வெ.கி. ஜெகதீஷ்
16/12/2014

எழுதியவர் : ஜெகதீஷ் (17-Dec-14, 2:31 pm)
சேர்த்தது : ஜெகதீஷ்
பார்வை : 333

மேலே