நல்லாசிரியர் நினைவலைகள் - ஆனந்த விகடன் குழும தலைவர் எஸ் பாலசுப்ரமணியன் மறைவு

ஆனந்த விகடன் குழும தலைவர் - எஸ் பாலசுப்ரமணியன்
தோற்றம் - 28 டிசம்பர் 1935
மறைவு - 19 டிசம்பர் 2014

சமீபத்தில் மறைந்த விகடன் குழும தலைவர் பற்றி மதன் எழுதிய கட்டுரையில் இருந்து சில துளிகள் .

தலையங்கம் எழுதும்போது நிறைய யோசிப்பார். ஒரே ஒரு வார்த்தைப் பிரயோகத்துக்கு நெடுநேரம் விவாதிப்பார். 'இந்த ஒரு தவறை, இன்று வரை செய்துகொண்டு இருக்கிறார்களா? இன்றளவும் செய்துகொண்டு இருக்கிறார்களா? இன்னமும் செய்துகொண்டு இருக்கிறார்களா? இப்போதும் செய்துகொண்டு இருக்கிறார்களா? மதன் சார் இவையெல்லாமே ஒண்ணா? ஒண்ணுன்னா... எதுக்கு இத்தனை வார்த்தைகள் இருக்கு? இந்த வாக்கியத்துக்கு இதுல எது கரெக்ட்?’ என்பார். இப்படி வார்த்தைக்கு வார்த்தை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்வார்.

ஜூனியர் விகடன் செய்திகளில் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை உண்மைத்தன்மை எதிர்பார்ப்பார். 'சென்னையில இருந்து செங்கல்பட்டுக்குப் போக, ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனா, அங்க 12 மணிக்கு நடந்த ஒரு சம்பவத்தை விசாரிக்க 12:30-க்கே போலீஸ் போயிடுச்சு’னு எழுதியிருக்காரே உங்க நிருபர். அது எப்படி சரி?’னு கேட்பார். 'அது லோக்கல் போலீஸ் சார்’னு சொன்னால், 'அதை எழுதுங்கோ’ என்பார்.

'செவ்வாய்க்கிழமை முடிவெட்ட சென்றபோது சம்பவம் நடந்ததா எழுதியிருக்கா. எனக்குத் தெரிஞ்சு செவ்வாய்க்கிழமை எல்லா பார்பர் ஷாப்பும் லீவு இல்லையா...’ என நோட் போட்டு அனுப்புவார். எம்.டி-யிடம் இருந்து தப்பிக்கவே முடியாது. 'ப்ளீஸ் செக்’ என அவர் போடும் ஒவ்வொரு நோட்டும் அவ்வளவு வேலை வைக்கும். ஆனால், அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். சமயத்தில், 'பொயட்டிக் லிபர்ட்டினு ஒண்ணு உண்டுல்ல சார். சிலதைக் கொஞ்சம் கூடுதலாத்தான் சொல்லியாகணும்’ என்பேன்.

'இந்தக் கதை எல்லாம் வேணாம். கற்பனை, கார்ட்டூன், ஜோக்கை எல்லாம் ஆனந்த விகடன்ல வெச்சுக்கலாம். இது ஜூனியர் விகடன். இதுதான் நடந்துச்சுனு திட்டவட்டமா சொல்லணும். இங்க நாமாக எதையும் சேர்க்கக் கூடாது. நீங்க முழுச் செய்தியும் உண்மையா எழுதிட்டு, சம்பவ இடத்துல நின்ன ஒரு கார் நம்பரைத் தப்பா போட்டீங்கன்னா, 'கார் நம்பரைக்கூடச் சரியா எழுதாத உங்க நிருபர் எழுதுற மொத்தச் செய்திகளையும் நான் எப்படி நம்புறது?’னு வாசகனோ சம்பந்தப்பட்டவரோ கேட்டால், நான் எங்கே போய் முகத்தை வெச்சுப்பேன்?’ எனக் கேட்பார். நாங்க அப்படியே சரண்டர் ஆகிவிடுவோம்.

ஒருமுறை அலுவலக போனுக்கு அழைத்த எம்.டி-யின் மனைவி, 'அவரை ரூம்ல பாத்தீங்களா? சாப்பிடலை. ஒரு சொட்டுத் தண்ணிக்கூடக் குடிக்காம, ஆபீஸுக்கு வந்துட்டார். ஏதாவது சாப்பிடச் சொல்லுங்க’ என்றார். 'என்னாச்சு?’ எனக் கேட்டேன். 'அவரே சொல்வார். போய்க் கேளுங்க’ என்றார். சென்றுபார்த்தால், மேஜையில் தலையைக் கவிழ்ந்தபடி சோகமாக அமர்ந்திருந்தார். 'மதன் சார்... (என்று ஒரு பெயரைச் சொல்லி) பாஸ்டு அவே’ என்றார் ரொம்ப சோகமாக. 'என்னாச்சு சார்?’ எனப் பதறினேன்.

அவர் வளர்த்த மக்காவ் வகை பெரிய கிளி ஒன்று இறந்துவிட்டது. அதற்குத்தான் அந்த வருத்தம். 'நான் மடியிலயே வெச்சிருந்தேன். சாப்பிட்ட பிறகு ஒண்ணு தொண்டையில மாட்டிக்கிடுச்சு. நானும் என்னென்னவோ முயற்சி பண்ணி அதை எடுக்கப் பார்த்தேன்... முடியலை. அது என்னைப் பார்த்து, 'காப்பாத்து... காப்பாத்து’னு கத்துது. 'யூ வோன்ட் டை. ஐ வில் சேவ் யூ’னு அதுக்குத் தைரியம் சொல்லிட்டே நானும் எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனா, அது செத்துடுச்சு. 'நீ காப்பாத்துவேனுதானே உன் மடியில சாஞ்சுண்டு இருந்தேன்’னு அது சொல்ற மாதிரியே இருந்துச்சு. என் கண்ணு முன்னாலயே செத்துடுச்சு’ என கண்கலங்கக் குமுறினார். அன்று அவர் சாப்பிடவே இல்லை.

இன்னொரு முறை அவர் வளர்த்த நாய் இறந்தபோதும் மூன்று நாட்கள் அழுதுகொண்டே இருந்தார். 'தப்பா எடுத்துக்காதீங்க சார். மனுஷங்க செத்தாக்கூட இப்படி அழுவீங்களானு தெரியலை’ என ஒருநாள் அவரிடமே சொல்லிவிட்டேன். 'நிச்சயமா அழ மாட்டேன். மனுஷங்கள்ல ஒவ்வொருத்தரும் ஒரு சுயநலத்தோட பழகுவாங்க. ஆனா, மிருகங்கள் நாம அன்பா இருக்கோமா... இல்லையானு பார்க்காம அன்பைப் பொழியும். நான் என் வீட்டுத் தெருக்கோடி வரை விகடனைப் பற்றித்தான் சிந்திச்சிட்டு வர்றேன். ஆனா, அந்த நாய், பறவை எல்லாம் எப்பவுமே என்னைப் பத்தி மட்டும்தான் யோசிக்குதுங்க. அதுங்களோட உலகமே நான்தான்’ என்றார். அது உண்மை!

.........................................................................................................................................................................................................................................


இந்து ராம் பதிவிலிருந்து ...

பாலுபோல எளிமையும் யதார்த்தமுமான ஒரு மனிதரைப் பார்ப்பது அரிது. எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும், அதை இலகுவாக எடுத்துக்கொண்டு செயல்படக்கூடிய மனப்பக்குவம் அவருக்கு உண்டு.
விகடன் அட்டையில் ஒரு ஜோக் வெளியிட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவரிடம், 'கைதிகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும். நீங்கள் என்ன வேலை செய்ய விரும்புகிறீர்கள்?’ என சிறைச்சாலை காவலர்கள் கேட்டபோது, 'சமையல் செய்யட்டுமா?’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு எப்பேர்ப்பட்ட முதிர்ச்சி தேவைப்பட்டிருக்கும்!

பாலுவுக்கு 65 வயது கடந்த சமயத்தில்தான், கணினிப் பயன்பாடு நம் நாட்டில் அதிகரித்தது. வயது மற்றும் முதுமை கோரும் ஓய்வைக் கணக்கில்கொள்ளாமல், ஆர்வத்தோடு அவர் கணினியை இயக்கக் கற்றுக்கொண்டு தேர்ச்சியுடன் உபயோகித்தார். அந்தத் தேர்ச்சியும் நுணுக்கமும் அவரிடம் அதிகரிப்பதை, ஒவ்வொரு சந்திப்பிலும் நான் கண்டு பிரமித்திருக்கிறேன்.

அவர், ஒரு சிறந்த ஆசிரியர் மட்டும் அல்ல; அருமையான வாசகரும்கூட. எங்கள் 'தி இந்து’ பத்திரிகையில் ஏதாவது தகவல் பிழை அவர் கண்ணில்பட்டுவிட்டால், உடனே எனக்கு போன் வந்துவிடும். குறிப்பாக, விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்த கட்டுரைகளில் தவறு இருந்தால், அதற்கு மறுப்புச் செய்தியை வெளியிடும் வரை அவர் என்னை விட மாட்டார். பறவைகள் பற்றிய புகழ்பெற்ற சர்வதேச ஆங்கில இதழ்களில் பாலு கட்டுரைகள் எழுதினால், ஆங்கிலத்துக்காக என் உதவியை அவர் உரிமையோடு கேட்டு வாங்கிக் கொள்வார்.

எனக்குத் தெரிந்து அவர் தீர ஆலோசிக்காமல் திட்டமிடாமல் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டார். தான் இறந்த பிறகு, தன் உடலுக்கு எந்தச் சடங்குகளும் செய்யக் கூடாது, யாரும் அழக் கூடாது, தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகக் கொடுத்துவிட வேண்டும் என்பது முதற்கொண்டு, துல்லியமாகத் திட்டமிட்டு நிறைவேற்றும் மனிதரைப் பார்ப்பது அபூர்வம்.

நான் பார்த்திருக்கிறேன்!

- நன்றி ஆனந்த விகடன்

எழுதியவர் : ஆனந்த விகடன் (26-Dec-14, 6:44 pm)
பார்வை : 139

மேலே