ஈருயிரின் ஏக்கம்
"ஈருயிரின் ஏக்கம்"
கொஞ்சுமிரு பூக்களுக்கும்
கெஞ்சுகிற மனசிருக்கு
தாவணியின் தாலாட்டில்
தளிர்மேனி சிவந்திருக்கு..
முத்தங்கள் பரிமாற்றம்
முகம்பார்க்க தடுமாற்றம்
அச்சத்தில் தலைசாய
ஆராய்ச்சி செய்கின்றாள்
விளையாடும் தோட்டத்தில்
விருந்தாகும் அம்சத்தில்
சம்சாரத் துணைபார்த்து
சாய்ந்தாடிப் பார்கின்றாள்..
உனைதாங்கும் உயிருக்கு
உறவாகும் பூங்காற்று
விரித்தாளோ இதயத்தை
விதிமீறும் வியர்வைக்கு..
கண்ஜாடை செய்யாமல்
கண்ணாடி அணியாமல்
கைகோர்த்து நிற்கின்றாள்
களவாணி என்முன்னே.
தோட்டத்தில் தோன்றியது
தூங்காத காதலொன்று
அடங்காத காளைஎனை
அலைபாய விட்டதுபோல்
கொடுப்பதிலே யொருமுகம்
கொள்வதிலே மறுமுகம்
ஈருடல் இணையாக
இளைப்பாற தனிசுகம்..
விரதங்கள் முடிந்ததுபோல்
விரசங்கள் படிதாண்ட
பல்லாக்கு பஞ்சணையில்
பரிவட்டம் சூடுகின்றாள்..!
பூத்திருக்கும் காதலதை
பூட்டிவைக்க நானினைத்து
சங்கிலியால் கட்டிவைக்க
சத்தமின்றி திட்டமிட்டேன்..
யுக்திகொண்ட காதலது
சக்திகொண்டு போனதடி
சித்தனென்னை ஆக்கிவிட்டு
சிவனுமதில் பாவியென்று...

