30 ஓர் அரசு ஊழியனும் ஓர் அப்பாவியும்
வேண்டா வெறுப்பாய் வேலையைப் பார்ப்பான்!
இருக்கையில் என்றும் இருக்கவும் மாட்டான்!
சிறுநீர் கழிக்கச் சிலமுறை செல்வான்!
சிகரெட் புகைக்கப் பலமுறை செல்வான்!
அரட்டை யடிக்க அடிக்கடிச் செல்வான்!
தேநீர் குடிக்கத் திரும்பவும் செல்வான்!
குமுதம் விகடன் குங்குமம் படிப்பான்!
கண்முன் நிற்பதைக் காணவே மாட்டான்!
பலமுறை அழைத்தும் பார்க்கவே மாட்டான்!
நேரம் போக நேரம் போக
எதோ நினைவில் இருந்தவன் போல,
'என்ன சொன்னீர்?' என்றே கேட்பான்!
புன்னகை என்பது மருந்திற்கும் இல்லை!
எதைக்கேட் டாலும் எரிந்து விழுவான்!
எனக்குத் தெரியா தென்றே உரைப்பான்!
கெஞ்சிக் கேட்டால் பொறுங்கள் என்பான்!
பொறுத்துக் கேட்டால், 'இன்னும் பொறுங்கள்!'
பொறுத்துப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தால்
'பூட்டப் போகிறேன் போ போ' என்று
காவலாள் வந்து கடுப்புடன் சொல்வான்!
மறுநாள் உணாமல் வரிசையில் நின்றால்,
'ஐயா அரைநாள் விடுப்'பென் பார்கள்!
அன்றைக்கு முழுதும் காத்துக் கிடந்தால்
'பக்கத் தூர்க்கு மாற்ற'லென் பார்கள்!
'யாரிடம் கேட்க இனிமேல்?' என்றால்,
அவரிடம் போவென்பார்; அவரிடம் சென்றால்,
இவரிடம் போவென்பார்; இவரிடம் சென்றால்,
சுவரிடம் பார்த்துச் சும்மா இருப்பார்!
காது ரிப்பேர் ஆன அவரோ,
'சாஅ.ர்' என்றால் 'யாஅ.ர்' என்பார்!
'நாஅ.ன்' என்றால் 'ஏஎ.ன்' என்பார்!
விவரம் சொன்னால் விழித்துப் பார்ப்பார்!
'உங்கள் கோப்பேதும் என்னிடம் இல்லை!
அதனால் என்னால் ஆவதொன் றில்லை!
முன்னாள் இருந்த அவரையே பாரும்!'
என்று
முகத்தை மீண்டும் தொங்கப் போடுவார்!
என்ன செய்வதென் றேங்கி நிற்கையில்,
'புரியா ஆளாய் இருக்கின் றீரே!
கவரினைக் கொடுத்துக் காரியம் முடிப்பீர்!
கவனிப்பீர் எனையும்!' என்பான் ஒருவன்.
'கருமத்தை அன்றே காதில் ஓதினால்
அழுதிருப் பேனே! அலையமாட் டேனே!'
என்று கொடுத்துத் தொலைத்தே மீண்டேன்!
புரணிகள் பேசுவார்; போட்டுக் கொடுப்பார்;
தலைக்கனம் மிகுவார்; சந்தர்ப்ப வாதி;
தனது பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்;
தன்மேல் பழியைப் பிறர்மேல் போடுவார்;
பொறாமைக் காரர்; புழுங்க வைப்பார்;
கடைசியில் வருவார்; முதலில் ஓடுவார்;
முதல்நாள் வேலையை மூன்றாம்நாள் செய்வார்;
மூன்றாம்நாள் வேலையை முப்பதில் செய்வார்!
நல்ல வேலையைச் செய்வதே இல்லை!