நீர்துளி நம் உயிர்துளி

நிலத்தடியில் நிறைந்திருக்கும் நீரின் வழியால்
நிலம்மேலே வளங்கொழிக்கும் விளைச்சல் கண்டோம்
கலங்கொண்டு அளந்தெடுத்த தானியத்தாலே
பலகோடி மாந்தர்தம் பசியைத் தீர்த்தோம்

ஏரிகுளம் குட்டையெனப் பெயரைவைத்து
சிறியபெரிய கண்மாய்கள் மன்ணைத் தூர்த்து
விண்ணிலிருந்து விழும்நீரைச் சேர்த்தே வைத்தோம்
மண்ணில்மனித குலம்வாழ மரங்கள் நட்டோம்

நீர்நிலைகள் ஊரெல்லாம் அமைக்கச் செய்தே
பேர்சோல்லும் தலைமுறைகள் பெருகச் செய்தோம்
மாரிதன்னை தெய்வமாக மதித்துத் தொழுது
ஆறுக்கெல்லாம் அம்பிகையின் பெயரை வைத்தோம்

வயல்தேடி ஓடிவரும் கால்வாய் வெட்டி
பயிரோங்கி வளர்ந்திடும்நல் விளைவைக் கண்டோம்
காற்றடிக்கும் கடல்மணலில் ஆழத்தோண்டி
சேர்த்துவைத்தோம் சுவைநீரை ஆழ்கிணறு தன்னில்

மண்சிரித்து புன்சிரிக்க விண்சொரிய வேண்டும்
அந்தமழை அடர்ந்துவந்து மண்நிறைய வேண்டும்
பூவுலகில் ஓடுகின்ற நீரை எல்லாம்
வெள்ளைரத்தம் என்றுநாமும் உணர்தல்வேண்டும்

நீர்வளத்தை சேமிக்கின்ற வழிமுறைகள் தேர்ந்து
வருங்கால சந்ததிகள் வளமடைய வேண்டும்
போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்து
உருவாக்க வேண்டும் இவுலகினை மீண்டும்

மண்விட்டு விண்தொட்டு மீண்டுவரும் மழையை
அணைகட்டிக் காத்திடுவோம் அழியாமல் நாளும்
பாய்ந்துவரும் தண்ணீரைத் தக்கவழி கொண்டு
தேய்ந்துவரும் நிலத்தடியை நிறைத்திடவே வேண்டும்

நதிஇணைப்பு நதிஇணைப்பு என்கின்றார் தினமும்
நதிகள்மட்டும் இணைந்துவிட்டால் பெருகிடுமே வாழ்வும்
கங்கைவந்து காவிரியைத் தொட்டுவிட்டால் போதும்
கண்டிடுமேநம் தாய்நாடு வற்றாத தீர்வும்

மரம்வளர்த்தால் மழைகிடைக்கும் மழைகிடைத்தால் மரம்வளரும்
இவுண்மை புரியாமல் காட்டை அழித்தால்
கடைசிச்சொட்டு தண்ணீரும் காணாமல் போகும்
நம்முலகு காப்பாற்ற இயலாமல் சாகும்

சிலபேரின் சிந்தையிலே உதிக்கும் வழியால்
உலகினிலே நாம்வாழ நீரைச் சேர்ப்போம்
நீர்துளிதான் மாந்தர்தம் உயிர்துளி என்று
காத்ததனை அளித்திடு வோம்வருங் காலத்துக்கு

நன்றி!!!

எழுதியவர் : முரளிதரன் (14-Jan-15, 1:07 pm)
பார்வை : 483

சிறந்த கவிதைகள்

மேலே