மூன்றாம் பால்
"மூன்றாம் பால்"
கசக்கி எறியப்படும் இறைவனின்
கவிதை நான்
எனது எழுத்துக்களில்
தனித்துவம் இல்லை
இருபால் இணைவில்
ஒருபால் பிறக்க
இருபால் குணமும்
இணைந்தே கிடக்க
அழகிய வளர் தருணங்களில்
அழிக்கபடும் எனதெழுத்துக்கள்
வள்ளுவனின் மூன்றாம் பால்
தனை உலகம் ஏற்க்க
வாழ்வினில் மூன்றாம் பால்
எனது உலகை மறுக்கிறது
முகம் சுழிக்க வைக்கும்
அழகானோம்
உடல் பசிக்கு என
அழைப்பானோம்
உடல் கண்டு கோணும் உலகும்
குணம் தன்னை காணா உலகு
பிரிவினை வகுப்பில் கூட
ஓர் பிரிவென இணைக்கா உலகு
குற்ற செய்கைக்கு தண்டனை இல்லை
பெற்ற மெய்தனக்கு தண்டனை பெற்றோம்
பெற்றோர் கூட விற்றதை கண்டோம்
நான் மணம் அற்ற மல்லிகை
எனை சூட யாரும் இலர்
தாசிக்கும் மதிப்புண்டு நான்
யாசிக்க மதிப்புண்டா.....?
நான் இருபால் இணைந்த
மூன்றாம் பால்
கொங்கைகள் ரசிப்போருக்கும்
மங்கையென தெரியவில்லை
மங்கை போல்கிடந்தாலும் என்
ஆண்மை உணர்த்த வழியில்லை
பாவப்பட்ட பிறப்பாய் எண்ணாதீர்
பால்மாற்ற பிறப்பாய் எண்ணாதீர்
வயிற்றில் பசியோடும்
வாழும் ருசியோடும்
இருப்பை மட்டும் அல்ல
இறப்பும் பிறர்போலே
இருக்கும் கனவோடு
பிறப்பை கொண்டிருக்கும்
உயிர் ஆவேன்