இருளென்ற வரம்

இருளின் நிசப்தம்
அலாதியானது
அதன் நிறம் மாறாதது ...

சிறியதாய்
பெரியதாய்
வெளிப்படும்
வெளிச்சப்புள்ளிகள்
வெவ்வேறானவை !

நிறக்கலவையில்
நிதமும் மாறும்
இருளின் உயிர்ப்பு

இருளில்
வெளிச்சப்புள்ளி
வெகு அழகுதான் ..

வெள்ளைச்சுவரில்
கரும்புள்ளி தரும்
கலையைப்போல் ..

இமைகளின் மூடலில்
இருளின் தேடலில்
இதயத்தின் ஒலியும்
இனிய இசையாகும் ..

இருளை விரும்பாத
மனங்கள் ஏனோ
வெளிச்சம் நாடும் ..

இயந்திர உலகில்
இரவுகள்தான்
இயக்கங்களை
இளைப்பாற்றும் ..

இயற்கையும்
இரவின் மடியிலே
இடையிடையே
துயில் கொள்ளும்..

சருகுகளின் ஒலியையும்
சங்கீதமாக்கும்
சாமத்தின் பொழுதுகள்
சாகாதவை ...

காதலில் களித்திடும்
காமத்தில் திளைத்திடும்
கன்னியர்கள் மனமும்
காளையர்கள் மனமும்
மோதிக் களைத்து
விடை தெரியாது
வினாத்தொடுத்து நிற்கும்
இரவுகள் இனிப்பானவை ..

இரவின் நிசப்தம்
மனதின் ரம்யம்
இரவுகளின் அமைதியில்
உறையும் மனம்
உயிரோட்டமாய்
உணரும் பொழுதுகள்
உயிர்ப்பினை உணர்த்துமா ?

இரவின் மொழியை
இரவின் அழகை
இரவின் நிறத்தை
காணாத கண்கள்
நிறக்குருடுகள்தான்

இரவுகள் வெறும்
உறங்கும் பொழுதுகள்
மட்டுமல்ல ..

வெளிச்சங்களின்
இயக்கத்திற்கு
இருளே அடிநாதம் !

இருள் இல்லாத
வெளிச்சம்
வெளிப்படாத விதையைபோல்

விதைக்குள் துயிலும்
விருட்சங்களுக்கு
வெளிச்சம் தேவைதான் ..

வெளிச்சம் தேடும்
மனங்களுக்கு
இருள்தான் வரமே !

இருளின் இயக்கத்தில்
இறவாமல் கிட்டிடும்
நிசப்தத்தின் அமைதி
அமைதியின் ஆற்றல்
ஆற்றலின் வேகம்
வேகத்தின் வெளிப்பாடு

இருளை நேசிக்கும்
இதயங்களுக்கு புரிபடும்
இருளில் வெளிப்படும் உணர்வுகள்
வெளிச்சங்கள் கொண்டவையென ?
---------------------------------------------------------------------
##மறுபதிவு-----குமரேசன் கிருஷ்ணன் ##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (20-Jan-15, 11:26 am)
பார்வை : 215

மேலே