நூல்படி

ஒன்றல்ல இரண்டல்ல எண்ணிப்பார்த்தால்
உருமாறித்தான் போவாய்நீயும் எண்ணிப்பார்த்தால்
நன்றல்ல நன்றல்ல எட்டிப்பார்த்தால்
நன்றாய்த்தான் ஆவாய்நீயும் எட்டிப்படித்தால்
சென்ற இடமெல்லாம்சிறப்பு செய்யுமுன்னை
செல்வனாக அறிவுச்செல்வனாக மாற்றுமுன்னை
மன்றம் அமைத்து தொகுத்துவைத்த
மணிமணியான நூலறிய நூல்படி!
ஏடல்ல வெறும்ஏடல்ல நீபடித்தால்
எண்ணம் உயர்வுபெறும் நீபடித்தால்
கடலல்ல வெறும்கடலல்ல தள்ளிப்பார்த்தால்
காவியங்கள் சொல்லிதரும் தட்டிப்படித்தால்
கடல்தாண்டி சென்றாலும் மறந்திடாதே
கற்றறிவை வென்றிடலாம் மறந்திடாதே
மடல் கொடுத்து வாங்கிவைத்த
மங்காகற்பனை வளமறிய நூல்படி!
எழுத்தல்ல வெறும்எழுத்தல்ல அள்ளிப்படித்தால்
அறிவு தெளிவுப்பெறும் அள்ளிப்படித்தால்
பழுதல்ல பழுதல்ல நாம்படித்தால்
பண்டிதனாய் ஆக்கும்நம்மை நாம்படித்தால்
கழுத்தில்தினம் மாலை விழும்உனக்கு
கவிஞனெல்லாம் கொடுத்த நூல்நமக்கு
செழுமைதரும் பல்துறை நூல்களை
சிறந்திட வாழ்வில்தினம் நூல்படி!