வீரப் பயம்

வீரப் பயம்

மடித்துக் கட்டிய வேட்டிக்குள்ளும்
துடித்து முறுக்கும் மீசைக்குள்ளும்
பத்திரமாகப் பதுங்கி இருக்கிறது
ஆண்களின் வீரம் எல்லாம்

நேர்மையாக உழைப்பது தானே
ஆண்களின் சுத்த வீரம்
யாரையும் ஏமாற்றி உழைக்காத
வீரதீரன் இங்கே யார்

உண்மையாக நடப்பது தானே
ஆண்களின் சுத்த வீரம்
மனைவிக்குப் பயந்து பொய்சொல்லாத
வீரதீரன் இங்கே யார்

எதற்கும் பயப்படாதவன் வீரனென்று
சொல்லித் தந்தது யார்
பயப்படும் ஆண்மகன்தான் உண்மையில்
பயன்படும் வீரனாக மாறுகிறான்

எமாற்றுக்குப் பயப்படும் மனிதன்
வியாபாரத்தில் வீரன் ஆகிறான்
பொய்சொல்லப் பயப்படும் மனிதன்
குடும்பத்தில் வீரன் ஆகிறான்

சில பயங்கள் மனிதனை
கோழை ஆக்குவது உண்மைதான்
எந்தப்பயம் கோழையாக்கும் என்பதை
அறிந்த மனிதன் வீரனாவான்

ஏழ்மைக்குப் பயந்த மனிதன்
காசிடம் கோழை ஆகிறான்
இலவுக்குப் பயந்த மனிதன்
வாழ்க்கையிடம் கோழை ஆகிறான்

வீரத்துக்கு எதிர்க்கருத்து பயமல்ல
வீரத்துக்கு ஒத்தகருத்தும் பயமல்ல
வீரமும் பயமும் சமாந்தரக் கோடுகள்
இணையவும் கூடாது விலகவும் கூடாது

எழுதியவர் : மது மதி (21-Jan-15, 1:08 am)
சேர்த்தது : mathumathi
Tanglish : veerp bayam
பார்வை : 170

மேலே