காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 25

திறந்த வானில்
தன்னை பிரசவித்துக்கொண்ட
வெண்ணிற இறகு
காற்று நடைவண்டியில்
கை தொடும் நேரம்..

துளையிடா பச்சை
குருத்து மூங்கில்களின்
உடல் கருகும் கதகதப்பில்
கூதல் காற்றை வரவேற்கும்
காடுகளின் நாயகன் ..

மெய் தீண்டிய அரவமென
நச்சு நீலம் விளைந்த
நாடோடி மனிதக் கூட்டங்கள்

பொழுதுகள் தொலைத்த
நாட்களின் பயணத்தில்
இரவும் பகலும்
வேறில்லைதான்
பித்தர்களின் ராஜ்யத்தில் ..

தொலை தூர அசைவில்
பொன் மஞ்சளில் மின்னிய
அவள் வியர்த்தாள்
உடைந்த காதல்
விலை கூறிய
அமிலத்துளிகளில் !

இறகு அதிரும்
புழுதிப் பரவலில்
ஒட்டிய துகள்களில்
மேலும் கீழுமாய்
சாதியத் திட்டுக்கள்

கறை தின்னும் கரையான்கள்
ஆமைகளின் முதுகில்
அவசர ஊர்வலம் போகின்றன
சுழலும் பூமியை
சுட்டு விரலசைவில் மீட்டுவதற்கு !

பளிச்சென்று இறகு நனைத்த
குருதியில் இனம் தேடியவன்
காதலைக் கொன்ற அவன்
கல்லறை பதியன்களில்
தலைமுறைகளைப்
புதைத்த பாவங்களின் சான்றாய் !

அழுக்கு வண்ணங்கள்
இழைத்த இறகு
உந்தி எழும்போது
உதைத்த மழலையை
அணைத்ததொரு வான் முகிலின்
வேகம் நிறைந்து
காற்றில் மிதக்கும் இறகு
தேடல்களுடன் !

எழுதியவர் : கார்த்திகா AK (21-Jan-15, 2:12 am)
பார்வை : 553

மேலே