குற்றம் பார்க்கின்
குற்றம் பார்க்கின்..
அதிக அளவு கிராமங்களே சூழ்ந்திருக்கும் காவல் துறை அலுவலகம் ஒன்று. காலை பத்து மணி இருக்கும், உள்ளே நுழைந்த உதவி காவல் ஆய்வாளர் அவரது மேசைக்கு அருகே பதினாறு பதினேழு வயது மதிக்கத்தகுந்த ஒருவனை குத்துகாலிட்டபடி உட்கார வைத்திருப்பதை பார்த்தார். கேள்விக்குறியுடன் எதிரே அமர்ந்திருந்த ஏட்டையாவை பார்க்க……
ராசையா தோப்புல தேங்கா திருடிகிட்டிருந்தானாம், அவங்க ஆளுங்க புடிச்சுட்டு வந்து உக்கார வச்சுட்டு போனாங்க.
அடிச்சாங்காளா?
அடிச்சிருப்பாங்க போலிருக்கு, இங்கயும் வந்து இந்த பையனை அடிக்க போனாங்க, நான் மிரட்டி அனுப்பிச்சுட்டேன்.
அவனை பார்க்க பாவமாய் இருந்தது, நாற்காலியில் உட்கார்ந்தவர் அவனை கூப்பிட்டார், பயந்து நடுங்கியபடியே அருகில் வந்தான்.
என்னடா பண்ணிகிட்டிருக்கே?
அம்மன் கோயிலாண்டை பூ வித்துகிட்டிருப்பேனுங்க
அப்புறம் எதுக்குட தேங்காய் திருட போனே?
ஒரு மாசமா அங்கன கடை போட கூடாதுன்னுட்டாங்க, வீட்டுல நான் மட்டும்தான் சம்பாத்தியம், வயசான ஆத்தாவும், தங்கச்சியும் இருக்காங்க, எனக்கு என்ன பண்ணரதுன்னு தெரியலை, சம்மு அண்ணன் கடையில தவணை நிக்குது, சாமான் வேணுமுன்னா கடனை அடைக்க சொல்லுச்சு, அதான் நாலு தேங்காய் கொண்டு போய் கொடுத்தா மளிகை சாமான் கிடைக்கும்னு தோப்புக்குள்ள புகுந்துட்டேன்.
அதுக்காக இன்னொருத்தர் தோப்புக்குள்ள திருட போவியா?
சாப்பாட்டுக்கே வழியில்லைங்க, பையனின் கண்ணில் தென்பட்ட தீவிரம் இதை விட அவரை திகைக்க வைத்தது.
இதே காட்சியை ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன் சந்தித்த ஞாபகம் வந்தது, ஆனால் அன்று தான் இவனைப்போலே..!
ஏறுடா வண்டியில, விருட்டென்று அவனை கூட்டிக்கொண்டு வெளியே வந்தவர் தன்னுடைய இரு சக்கரவாகனத்தின் பின்புறம் ஏற சொன்னார்.
எத்தனையடே படிச்சிருக்கே?
பிளஸ் டூ முடிச்சுட்டேன், அதுக்கப்புறம் படிக்க முடியலை, உசிரோட இருந்த அப்பனும் குடிச்சு, குடிச்சு இறந்துடுச்சு, அம்மா முதல்லயே செத்து போச்சு,வூட்டுல இருக்கறவங்களுக்கு கொஞ்சமாவது சோறு போடணும்னு நினைச்சேன், அப்பன் பாத்துட்டிருந்த ‘பூ கட்டி வித்துகிட்டு’ இருந்த வேலைக்கு போயிட்டேன். ஆனா திடீருன்னு அங்க என்னைய விக்க வேணாமுன்னுட்டாங்க, அப்பன் ஏதோ அங்க ரகளை பண்ணிட்டானாம்.
பையனை கோயில் இருக்கும் இடத்திற்கு கூட்டி போனவர், அங்கிருந்த அலுவலகத்தில் விசாரித்தார். சமாதானம் பேசி அவனை அங்கு பூ கட்டி வியாபாரம் செய்ய அனுமதிக்கும்படி கேட்டு கொண்டார்.
அவனது வீட்டுக்கு, கூட்டி சென்றவர் வீடு இருந்த சூழ்நிலையை பார்த்ததும் மனம் சற்று கலங்கத்தான் செய்தது.
சம்மு அண்ணன் கடை எங்கடா இருக்கு?
பையன் கூட்டி செல்ல, கடைக்காரன் இவன் காக்கி உடுப்பு போட்டவருடன் வருவதை பார்த்து பயந்து போய் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து விட்டு முன்னால் ஓடி வந்தான்.
இவனது பாக்கி எவ்வளவு நிக்கி?
தலையை சொறிந்தபடி மனதிற்குள் கணக்கிட்டு சொன்னவனிடம் சட்டை பையில் இருந்து பணம் எடுத்து எண்ணி கொடுத்தவர், ‘அண்ணாச்சி’ அவனுக்கு வேணுங்கற மளிகை சாமான் கொடுங்க, இனிமே ஒழுங்கா கட்டிடுவான்.
அவனை அங்கேயே விட்டு விட்டு வண்டியை எடுத்து கொஞ்ச தூரம் வந்தவர் சட்டென ஞாபகம் வந்தவராக வண்டியை நிறுத்தி திரும்பி அவனை கூப்பிட்டார்.
அதுவரை அவர் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவன் திரும்பி அவர் அழைக்கவும் ஓடி வந்தான்.
உன்னோட ‘சர்ட்டிபிகேட்’ எல்லாத்தையும் ஒரு காப்பி எடுத்து என்கிட்ட கொடுத்து வையிட.. சொல்லி விட்டு வண்டியை கிளப்பினார்.
காவல் நிலையம் நுழைந்து தனது மேசையில் உட்கார்ந்ததும், சற்று தள்ளி நின்று கொண்டிருந்தவர் இவரிடம் பணிவாய் வந்தார். வெளேரென்று வெள்ளை வேட்டியுடன் இருந்தார்.
உட்காருங்க, அவர் உட்கார்ந்தவருடன் உங்க பேரு?
ராசய்யா, காலையில இங்க ஒரு பையனை எங்க ஆளுங்க கூட்டி வந்தாங்க, தோப்புல காய் திருடியிருக்கான், நான் பின்னாடி வந்து பார்த்தப்ப நீங்க அந்த பையனை எங்கியோ கூட்டிட்டு போனதா ஏட்டு சொன்னாரு, அதான் காத்துகிட்டிருந்தேன்.
நீங்கதானா அது? ஏங்க பையனை உங்க ஆளுங்க நல்லா அடிச்சிருக்காங்க போலே.
அப்படி எல்லாம் ஒண்ணும் பண்ணலீங்க
இப்படி சொல்றீங்க, பையனுக்கு நல்ல அடி, அவனை கொண்டு போய் ஆஸ்பத்திரியில சேர்க்கலாமுன்னுதான் போனேன், அப்புறம் யோசிச்சு அவனை வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன்.
என்னங்க இப்படி சொல்றீங்க, இது மாதிரி விட்டுட்டு இருந்தோமுன்னா நாங்க எப்படி விவசாயம் பார்க்கறது?
உண்மைதாங்க, அதுக்காக நாம கட்டி வச்சு அடிச்சுடறதா? நாளைக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா நாம எல்லாமுல்ல கையை கட்டி நிக்கணும்.
ராசய்யா கொஞ்சம் யோசனையாய் முகத்தை வைத்து கொண்டார்.
அதனாலதான் சொல்றேன், அவனுக்கு புழைப்புக்கு ஒரு வழிய பண்ணி கொடுத்துடுவோம், கோயில் ஆபிசுல போய் சொல்லி மறுபடி வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டேன், நீங்களும் உங்க செல்வாக்கை உபயோகிச்சு அந்த பையனுக்கு ஏதாவது பண்ணி கொடுங்க, அதுக்கப்புறம் அவன் நல்லபடியா இருப்பான்.
என்னமோ சார், திருடனுக்கு உதவ சொல்றீங்க, சலித்து கொண்டாலும், குரல் சமாதானமானது போல் தெரிந்தது.
இவர் சிரித்தபடியே, நம்புங்க, உங்க எதிர்ல உக்காந்துகிட்டிருக்கற நானும் கூட உங்களை மாதிரி ஒருத்தர் உதவி பண்ணப்போகத்தான் இப்படி வந்திருக்கேன். இதுக்கும் நான் அவர் தோட்டத்துல தெரியாம தேங்காயை பறிச்சு அவர் கடையிலேயே விக்க கொண்டு போய் மாட்டுனவன், அவரே மன்னிச்சு எனக்கு படிக்க உதவி பண்ணாரு.
ராசய்யாவுக்கு முகமெல்லாம் அப்படி ஒரு சந்தோசம், நிசம்மாவா?
தலையை ஆட்டினார்.

