தேடல்

பரந்த வெளியெங்கும்
பச்சைத் தாவணியாய் வயல்வெளி...

ஆலம்பழம் பொறுக்கி
ஈக்குமார் குச்சி உடைத்து
தேர் பூட்டி இழுத்த சுகம்....

ஆற்றங்கரையோரம்
ஆடு மேய்த்த ஆயாவிடம்
குளித்த ஈரம் காயாமல்
கதை கேட்டது...

இது மட்டுமா!
பட்டணத்துக்குப் போய்விட்டுத்
திரும்பும் ஒரே மாமன்
ஒற்றையடிப் பாதையிலே
பெட்டி சுமந்து
வருவதைத் தாங்க முடியாமல்
உடைந்த மடை நீராய்
ஓடோடி வருவாள்....


தேடுகிறேன்!
தேடுகிறேன்!

அந்த இதமான பொழுதுகளையும்...
ஆழமான அடையாளங்களையும்...


அதோ!
அந்த வயல்கள்
வீட்டு மனைகளாய்...


இதோ!
இந்த ஆறு -சாக்கடையாய்...

இதோ!
தெருக்களெல்லாம்
சேலையை விரும்பாமல்-சுடிதார்
அணிந்திருக்கும்
அம்மாக்கள்...


தளதளவென ஜொலிக்கும்
தாவணியை விரும்பாமல் --ஜீன்சு
போட்டிருக்கும் சிறுக்கிகள்...



எங்கே
என் கிராமம்?

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (24-Jan-15, 1:18 am)
Tanglish : thedal
பார்வை : 98

மேலே