அவளுக்காக ஒரு அத்தியாயம்
பெண்ணே ...,
விண்வெளி யெங்கும் வியன்வெள்ளித் தாரகைகள்
மண்வன மெங்குமே தேவதைகள் - பெண்மகள்
கண்வழி யியங்கும் காலங்கள், இயற்கையின்
பொன்மகள் நீயென புரி .. (1)
அல்லி வட்டமும் ஆசையின் ஈக்கள்
புல்லி வட்டமும் மேயுமே - சொல்உன்
அகவட் டத்துள் ஆயிரம் ஏக்கங்கள்
புகைவதை அறிவது யார் ? (2)
சுமையெனவே கொண்டனர்; சிறகுகள் வந்ததும்
சுமைதாங் கியென சமைத்தனர் - இமைகளே
கனவு மீன்களின் தூண்டில்க ளானதால்
மனமோ கண்ணீர்க் குளம் (3)
..............(4, 5 )
இலைகளால் அசையும் இயற்கை இசைக்குமே
அலைகளால் பிரபஞ்ச கீதம் - நிலையெனும்
வாய்மையால் சுழலும் வையம் உயிர்க்குமே
தாய்மையால் என்றும் தணிந்து (6)
வானெனில் சிவக்கும் பூவெனில் சிலிர்க்கும்
தேனினும் செவ்வித ழினிக்கும் - மீனிலும்
மானிலும் உன்குணம் யாவிலும் இருக்கும்
ஏனெனில் நீயொரு பெண் (7)
ஏறிட முடியுமோ காற்றின் முதுகினில்
எரிதணல் தொடுவது இயலுமோ?-நீர்நிலம்
வீரிய காற்றுநீ விண்நீ நெருப்பென
கூறிக்கொண் டேநடை பயில் (8)
......தொடரும்