விடியல் தொடங்கும் நேரம்
துறவி ஒருவர் தன் மாணவர்களை அழைத்து அவர்களிடம் பின்வரும்
கேள்வியைக் கேட்டார். ” இரவு முடிந்து விடியல் தொடங்கும் நேரம்
எப்போது எனக் கூற முடியுமா?? “.
அதற்கு ஒரு மாணவன்,
” எதிரில் வருவது நாயா? ஆட்டுக்குட்டியா என அறிந்து கொள்ளும்
அளவிற்கு வெளிச்சம் வரும் நேரம்” என்றான்.
“இல்லை” என்றார் துறவி.
மற்றொரு மாணவன், ” எதிரில் உள்ளது யோக் மரமா? அத்தி மரமா?
என்று அறியும் அளவிற்குத் தேவையான வெளிச்சம் வரும் நேரம் ”
என்றான். ”
அதுவும் இல்லை ” என்றார் துறவி.
“ஐயா, சரியான விடையைத் தாங்களே கூறுங்கள் ” என்றான் ஒரு மாணவன்.
அதற்குத் துறவியோ ” புதியவர் ஒருவர் நம்மிடையே வரும் பொழுது
அவரும் நம் சகோதரர் என்று நாம் எப்பொழுது நினைக்கிறோமோ,
அந் நேரமே விடியல் தொடங்கும் நேரமாகும் ” என்று அமைதியுடன் கூறினார்.