சுதந்திரப் பறவையாகவா
சுதந்திரப் பறவையாகவா..?
19 / 06 / 2025
வெற்று காகிதமும் வானில் பறக்கிறது.
ஒரு கட்டுப்பாடும் இல்லாமல்
காற்றடிக்கும் பக்கமெல்லாம்
மேலே எழுகிறது.. கீழே விழுகிறது..
அடிபடுகிறது..இடிபடுகிறது..
இழுப்படுகிறது..கிழிபடுகிறது
காத்தாடியும் வானில் பறக்கிறது
அழகாய் வாலை ஆட்டியபடி
இங்கேயும் அங்கேயும்
அலைபாய்கிறது...அலைகளிக்கப்படுகிறது
'சர்'ரென்று மேலேயும் கீழேயும் போகிறது
குட்டிக்கரணம் போட்டு குழந்தைகளை
கும்மாள மிடச்செய்கிறது.
காற்றிருக்கும்வரைதான் அத்தனை
கும்மாளமும். ஆனால்
அதன் அத்தனை கட்டுப்பாடும்
ஒருவன் கையில்
விமானமும் மேலே பறக்கிறது.
உயிரில்லா இயந்திரப் பறவை
சுதந்திரமாய் புறக்கமுடியாது
சிறகடிக்க முடியாது
ஆனால் அது
மேலெழும்ப..கீழிறங்க
ஒரு ஓடுபாதை வேண்டும்
எரிபொருள் வேண்டும்
உந்து சக்தி வேண்டும்.
சாதக காலநிலை வேண்டும்
கட்டுப்பாட்டு அறை வேண்டும்.
பறவைகளும் வானில் பறக்கின்றன.
சிறகடித்து பறக்கின்றன.
எரிபொருள் தேவையில்லை
ஓடுபாதை தேவையில்லை
கட்டுப்பாடு ஏதுமில்லை
எல்லைகளும் ஏதுமில்லை
கவலைகள் ஏதுமில்லாமல்
எந்நாடும் தன்னாடே
இவ்வுலகம் தனதெனவே என்று
சுதந்திரமாய் வானில் பறக்கின்றன.
நண்பா..
எதுவாக நீ இருக்க விரும்புகிறாய்?
காகிதமாகவா..?
காத்தாடியாகவா..?
இயந்திரப் பறவையாகவா..?
இல்லை
சுதந்திரப் பறவையாகவா..?

