கவிதை

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்து கிடக்கின்றான். உள்ளத்து உணர்வுகள் தூரிகை வழியாக காகிதம் உரசுகையில் வண்ண ஓவியம் பிறக்கிறது. சொற்களை விஞ்சி ஒரு கற்பனை மூலமாய் கல் மறைந்து ஒரு கற்சிலையாகிறது. கறைகள் படிந்த காதைகள் கூட கவிஞரால் காவியமாகிறது.
தமிழ் இலக்கியத்தின் அடிப்படை வடிவம் கவிதையாகும். இது காலத்திற்குக் காலம் அரசியல், கலாசாரம், அறிவியல் என்பனவற்றின் தாக்கத்தால் மாற்றமுற்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தின் ஆரம்பமாகக் கொள்ளப்படுகின்ற சங்க காலம், சங்கமருவிய காலத்தை எடுத்துக்கொண்டால், அங்கே அகவல்,வஞ்சி, பரிபாடல் கலிப்பா என்றும், பல்லவர் காலம், சோழர் காலத்தை எடுத்துக் கொண்டால், அங்கே சிறிது மாற்றமுற்று குறட்பா, வெண்பா, விருத்தப்பா என்றும். இதனைத் தொடர்ந்து வந்த நாயக்கர் காலத்தில் பிறமொழிச் செல்வாக்கால் அரிதில் பொருளுணரக் கூடிய யமகம், திரிபு, மடக்கு என்றும் கவிதைகள் புனையப்பட்டன. இவை யாவும் இன்னபொருளை இப்படித்தான் பாடவேண்டும் என்ற யாப்பிலக்கண வரையறைக்குள் நின்று பாடப்பட்டன.
இதன் பின் ஐரோப்பியர் வருகையின் விளைவாக கவிதை வடிவமும் பொருளும் புதிய போக்கில் பரிணமித்தது. இந்த வகையில் ஓசை நயம்மிக்க கண்ணி, வண்ணம், சிந்து முதலான கவிதை வடிவங்கள் தோற்றம் பெற்றன. இதன் மூல கர்த்தாவாக விளங்கியவர் மகாகவி பாரதியார் ஆவார்.
தற்காலத்தில் இன்னும் மேலைத்தேய செல்வாக்கால் இலக்கண வரம்புகளை உடைத்தெறிந்து தேவையற்ற சொற்களைக் குறைத்து, கலையம்சமுடன் புதுக்கவிதை, நவீன கவிதை, வசனக் கவிதை குறியீட்டுக் கவிதை, ஹைக்கூ என்று பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது கவிதை இலக்கிம்.
இக்கவிதை உலகம் இனி என்ன நிலையை அடையும், வசனத்திற்கும் மேலான வண்மை என்ன?
உள்ளத்து உணர்வுகளை இரசனை மிக்கதாக உரைநடையினின்று சற்று ஏதோ ஒரு சுவையூடன் கூறின் நீங்களும் ஒரு கவிதைக்குச் சொந்தக்காரராகலாம்.
மரபை மீறக்கூடாது என்பதற்கப்பால், ஐந்நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கூறக்கூடிய ஒரு சிறந்த மரபை அமைப்பதற்கு அத்திவாரமிடுவதில் குறையேதுமிருப்பதாய் எனக்கு எண்ணத்தோன்றவில்லை. ஏனென்றால் இலக்கியம் இயம்பியதுதானே இலக்கணம். அவ்வாறாயின் உங்கள் கவிதைகளும் புதிதாய் ஒரு இலக்கணம் இயம்புவதில் என்ன தவறு?
இருந்தும் நான் மரபைக் குறைவாய் எண்ணுவதாய் அர்த்தமல்ல. அவையும் கவிதைக்கு அணிசேர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை.
ஒரு கவிதையின் அல்லது ஒரு கவிஞனின் சிறப்பைக் கூறுவது இன்னுமொரு கவிஞனோ அல்லது இலக்கிய விமர்சகனோ இல்லை. அன்றி வாசகனாலேயே அப்பணி முழுமையாக முற்றுப்பெறுகிறது. ஒரு கவிஞன் கூறுவது அவனது சொந்தக் கருத்து மட்டுமே.
ஆக ஒரு புதிய படைப்பாளனுக்கு தனது படைப்புக்குக் கிடைக்கும் வெற்றி ஒரு புதிய வாசகனிடமிருந்து வரும் பாராட்டே அன்றி ஒரு இலக்கிய வாதியிடமிருந்து வரும் விமர்சனங்களன்று. ஆனால் அந்த ஒரு புதிய வாசகன் ஒரு இலக்கிய வாதியாகவும் இருக்க முடியும்.
"வாசிப்பதால் மனிதன் பூரணமாகிறான்" என்றால் ஒரு வாசகனைப் பூரமாக்கும் பொறுப்பு ஒரு எழுத்தாளனுக்குகே கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே ஒரு எழுத்தாளனின் படைப்புக்கள் அனைத்தும் வாசகரைப் பூரணப்படுத்தும் நோக்கிலேயே அமையவேண்டும் என்பது கட்டாயமாகிறது. கவிதைகளும் கூட அவ்வாறே.
சில கவிஞர்கள் தங்களைக் காலத்தின் கண்ணாடி என்கிறார்களே தவிர, தங்களை அந்தக் கண்ணாடியில் ஒருபோதும் முகம் பார்ப்பதில்லை. இதனால் தன்னுள் செய்யவேண்டிய பல திருத்தங்களை செய்யாமலே செயலிழந்து விடுகிறார்கள்.
கவிதை மீண்டும் ஆரம்பத்தையே நோக்கிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றதா? என எண்ணத்தோன்றுமளவு புரியாத அல்லது மாற்றுக் கருத்துக்களாக புரிந்து கொள்ளும் வண்ணமான கவிதைகள் வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் அக்கவிதைகளுக்கு உரை எழுத வேண்டிய தேவை ஏற்படுகின்ற போது.... அதற்கு படிமம் என்றும் குறியீடு என்றும் பல பெர்களால் கவிதை பெயர்மாற்றம் செய்யப்படுவது கவிதை இலக்கியத்தின் முன்னேற்றமா? எனும் கேள்வி எழுகிறது!
கவிதை ஒன்றே தமிழ் இலக்கியத்தின் வடிவமாக இருக்கையில் ஒன்றை இன்னொன்றாக வர்ணிக்கும் மரபு தமிழில் இல்லாமலில்லை. அதற்கு புதிதாய் ஒரு வடிவம் அல்லது பெயரீடு அவசியமுமில்லை என்பது எனது கருத்து.
சங்ககாலத்திலிருந்து விளங்கிக் கொள்ள முடியாத கவிவடிவங்களை பாமரனும் விளங்கும்வகை வழிசெய்தன் பாரதி. அது ஒரு வளர்ச்சி எனலாம். இன்று......
பாமரன் கூட விளங்கும் எளிய வடிவினின்று மூன்றாம் தரப்பு வாசகன் என குறித்த சிலருக்கு மட்டுமே எட்டும்வகையில் கவிதையை இட்டுச்செல்வது வளர்ச்சியாகுமா? தொடர்ச்சியாகுமா? இது ஏலவே சங்கத் தமிழில் வழங்கியது தானே?...
படைப்புக்களின் காத்திரத் தன்மையை தீர்மானிப்பது வாசகனே என்பதை கருத்திற் கொண்டு கவிஞனும் நிச்சயமாக படைப்பாளிகளுக்கன்றி படைப்புக்களுக்கே முதலிடமளிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறேன். இருந்தும் ஒரு படைப்பின் பெறுமதி அல்லது கனதி என்பது வாசகனால் நோக்கப்படும் கோணத்தைப் பொறுத்தும் தீர்மானிக்கப்படலாம். ஆயிரம் வாசகர்களுக்குப் பிடிக்காத படைப்பொன்று எவனோ ஒருவனில் பாதிப்பை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தலாம் அவ்விடத்தில் அப்படைப்பு அவனுக்கு கனதியாகத் தோன்றலாம். அதுவே உண்மையாகவும் இருக்கக்கூடும்.

எழுதியவர் : மதன் (1-Feb-15, 6:16 pm)
சேர்த்தது : சதாசிவம் மதன்
Tanglish : kavithai
பார்வை : 6236

சிறந்த கட்டுரைகள்

மேலே