கல்வி மண் பயனுற வேண்டும்
பள்ளியின் பெருமை
அதை உருவாக்கியவர்களால் அல்ல.
அது உருவாக்கியவர்களால் தான்.
இன்றோ
சுய தொழில் பட்டியலில் ,கல்வி .
கல்வி எனும் அமுத சுரபி
காய சண்டிகை களிடம்.
கல்வித் தந்தைகளின் வீட்டில்
காசாளர் பதவியில் கல்வி.
மதிப்பெண் பிரசவம் நடக்கும்
லேபர் வார்டு களாய்
பள்ளிகள் மாறிய போது
குறைப்பிரசவ குழந்தைகள்
மருத்துவராகி விட்டனர்.
மதிப்'பெண் ' கிடைக்க
மாப்பிள்ளை சீராக
கொடுக்க வேண்டியவை
ஒழுக்கம்,உழைப்பு.
இங்கோ
மாணவர்கள் பிரம்மச்சாரிகளாகவே
அலைகிறார்கள்.
ஊற்றை உருவாக்கச் சொன்னால்
ஊருணி நீரை மொண்டு வரை
உபதேசம் செய்கிறார்கள் .
நிறைய மொண்டு வர
கமலை இறைக்கும்
காளை போதாதா?
மண் பயனுற
ஊற்றுகளை உருவாக்க
உறுதி எடுப்போம்.!!