தொலைப்பு கவிதை -சந்தோஷ்

நீலக்கடல் அலைமெத்தையில்
அத்தை மகளோடு
கட்டியணைத்துக்கொண்டு
முத்த கவிதைகளை
மெளன பேனாவில்
எழுதிக்கொண்டிருக்கும்
என்னால் எப்படி சிந்திக்க
முடியும் தோழர்களே...?

சிட்டுக்குருவிகளின் கழுத்தில்
கதிர்வீச்சு தோட்டாக்களின்
அநியாய தாக்குதலையும்..,
லஞ்சவெறியில் சுற்றித்திரியும்
அரசியல்வாதி பேய்களினால்
சின்னபின்னமாகும் தேசத்தையும்..
எப்படியயா நான் சிந்திக்க முடியும்?

பாழ்வெளி வட்டத்தில் என்
கற்பனை எழிலரசி இடுப்பில்
மூளை முட்டுக்கொடுத்து அவள்
கொங்கைத்தாளில் என் கரங்களால்
புது காமசூத்ரா காவியம்
எழுதுவதை விட்டுவிட்டு

ஒசோன் தெய்வத்தின்
பாதுகாப்பு திரைச்சீலையை
கிழித்து எரித்துக்கொண்டிருக்கும்
பூகோள எதிரிகளின்
கொடூர தாக்குதலையும்
மத, ஜாதி வெறி கழுதைகளின்
எகத்தாள வெறியாட்டத்தையும்
கண்டித்து எழுதிக்கொண்டிருக்க
நானென்ன கிறுக்கனா?


வானத்து வெண்ணிலாவில்
எனது இளைய காதலியுடன்
குடிப்புகுந்து....
இலக்கிய பரிவர்த்தனையில்
பாக்களை புதுப்பித்துகொண்டும்
அவள் முந்தானை ஹைக்கூவில்
சல்லாபமாடுவதையும் மறந்துவிட்டா..
நான்....

பூக்கத்துடிக்கும் சிறுமிகளையும்
சாதிக்கதுடிக்கும் பெண்டிரையும்
சருகாகி சாககிடக்கும் கிழவிகளையும்
எந்த தாசிகளின் மகன்களோ
வெறிக்கொண்டு சீரழிப்பதைக்கண்டு
பதறித்துடித்து இருதயம் வெடித்து,
பேனா ஆயுதமேந்தி
நயவஞ்சக காமச்சொறி நாய்களை
வேட்டையாடும் வேகத்தில்
அக்னி குடுவையில்
நனைத்து எடுக்கப்பட்ட சொற்களினால்
ஆக்ரோஷ கண்டன கவிதையா
எழுதி கிழிக்க முடியும்........?


என் சுயநல இன்பத்தில்
தமிழ்மொழியில் களியாட்டம் நடத்தி
சில கவிதைகளையும்
சில கதைகளையும்
கற்பனை மோகத்தில்
மென்மையாய்
மயிலறகு வருடலாய்
வாசகனின் முகத்திலும்
அவளின் இதயத்திலும்
உணர்த்திய
ஒர் இலக்கியவாதியாய்
நான் சாதிப்பதை விட்டுவிட்டு,


இந்த சமூகத்தை திருத்துகிறேன் என்றும்
இந்த நாட்டை வல்லராசாக்கிறேன் என்றும்
சிந்தனை வெப்படுத்தி
இரத்தச்சூட்டில் கொதிகொதித்து
நித்தம் நித்தம்
கோப கனல்களை கக்கி
என் நரம்பு, நாடி ,சதை, புத்தியில்
தீ எரிந்து
கருகி உருகி எழுத

நான் என்ன
நானிலம்
காக்க வந்த போராளியா ?
இல்லை
நான் என்ன
புரட்சி
அவதாரமெடுத்த வீரதீர எழுத்தாளனா..?



-இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (9-Feb-15, 8:54 pm)
பார்வை : 277

மேலே