நெருப்புமை ஊற்றியே
கட்டண கடவுச்சீட் டேதுமின்றி
கடிவாளமில்லா கற்பனைப் புரவியேறி
கண்டங்கள் ஏழையும் கட்டுப்பாடோடு
கடந்து வந்தே னோர்நாள் ...
கருங்கம்பளி போர்வைக்குள் கதகதப்பாய்
படுத்துறங்கிய பகல்பெண் தங்கப்
பட்டுத்தி தாயாராகும் தருணம்
பனிகள் ஓய்வெடுக்க புறப்படும் வேளை
அந்தோ பாவம் நடுநடுங்கும் குளிரில்
மூதாட்டி ஒருத்தி படுத்து கிடந்ததை
கண்டேன் ,பரந்து விரிந்த பாரிலே
அவள் விசாலமற்று கிடந்தாள் ...
எண்ணையில் ஊறியத் திரியாய்
எரிந்த மனங்கொண்டு புறப்பட்டேன் ....
என்னேக் கொடுமை !
கொடியேந்திய குமரன் வீழ்ந்த மண்ணில்
குடிபாட்டில் கொண்டு வீழ்ந்து கிடக்கும்
இளைஞன் ஒருவனைக் கண்ட மனம்
கொழுந்து விட்டு எரிந்தது ...
சற்று நகர்ந்தேன் !
சலசலப்பான ஆற்றங்கரை சலனமற்று
கிடந்தது ,நீர் நிறைந்த அருவியெல்லாம்
நெகிழிப்பையால் நிரப்பட்டு இருந்தது .
நெகிழப்பை ஆதிக்கத்தில் மரத்தின்
சருகெல்லாம் மண்டியிட்டு கிடக்கிறது ..
மனமேலும் தணியாமல் எரிந்தது ..
சாதியும் மதமு மினைந்து அகராதியில்
சமத்துவம் என்ற பிள்ளையை பெற்றெடுக்க
முன்னதும் பின்னதும் சண்டையிட்டு
மண்டை உடைந்து தான்பெற்றப்
பிள்ளையை நடுத்தெருவில் வீசும்நிலை
கண்ட மனமோ எரியும் நெருப்பில்
எண்ணையை வார்த்தது போலாகியது..
எண்ணமது எட்டியது ஒரெல்லையை
எல்லைப்போராம் அங்கு ஆறடி
போதுமான அவனுது எல்லையாமது
அந்நியன் ஒருவன் தடமாறியதால்
பீரங்கி ஒன்றவனை தாறுமாறாய்
துளைத்திருந்ததை கண்ட எண்ணச்
சிறகொன்று எரிந்து அவன் ஆத்மாவை
அடக்கம் செய்தது ..அணையாத் திரியோடு
அடுத்த நிகழ்வொன்றைக் கண்டேன்
படபடக்கும் பட்டாம்பூச்சியாய் பாடித்
திரிந்த பள்ளிப் பறவை ஓன்று
அரக்கனின் ஆண்மையில் அழிந்த
அபலைநிலைக் கண்டு ஆக்ரோசத்
தீப்பற்றியது ...
எத்தணித்து எரியும் நெருப்பைமை
ஊற்றிய எழுதுகோல் ஒன்றை
எடுத்துவிட்டேன் .இனிப் புரட்சி
பாவை வடித்தேநானும்
புல்லர்களின் நிலையை நிச்சயம்
பொசுக்குவேன் ..