பரந்த உலகம்
அண்டம் விடிந்ததும்
அண்டங் காக்கைகளின்
ஆரவாரம் கேட்டு
புழுதிப் படலத்தின்
போர்வை விலக்கி
வெளியில் வந்தான்..
ஒட்டியே உறவாடி
ரத்தம் உறிஞ்சுகிற
அட்டைப் பூச்சிகள்
அடையாளம் கண்டான்..
சப்தமின்றி இயங்கிடும்
சிற்றெறும்புகள் சீரினை
வியந்து அவன்
பார்த்து நின்றான்..
இச்சகம் முழுதுமே
அச்சகம் வைத்து
அளக்கின்ற அளப்புகள்
அத்தனையும் கண்டான்..
பண்டமாற்று வாழ்க்கையே
பாதையாகிப் போனதால்
தன்முனைப்பு பூங்காவில்
அம்மணமாய் தானிருக்க
முடியாமல் போனதால்
புழுதிப் படலத்தையே
போர்வையாக்கி மறுபடியும்
இருளுக்குள் நுழைந்தான்..
பரந்த உலகினை
மறந்து உறங்கிடவே!