உபதேசப் பாம்புகள்- Mano Red
ஆம் இது தான்
தடுமாறும் நிமிடங்கள்,
சுயநலத்தின்
சுயரூப மறைவிலிருந்து
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…!!
ஒத்திகை ஏதும் பார்க்காமல்,
ஓரமாய் நின்று யோசிக்காமல்,
முழுதும் பிறர்க்காக மட்டுமென
மழுங்கிய அறிவுக் கத்தியிலிருந்து
மழிக்கப்பட்ட முடி(வு)கள்…!!
கோட்டை கட்ட நினைத்தே
வாய்ப்புகளின் வாசல்களை
கோட்டை விட்டு விட்டு,
அந்தரத்தில் தொங்கும்
அறுந்த நூல் தேடும் காலங்கள்..!!
உபதேச பாம்புகளின்
ஒற்றை நாக்கிலிருந்து சொட்டும்
அறிவுரை விசத்தை
உடலெங்கும் தடவி
ஊமையாய் திரிந்த நிழல் நேரங்கள்..!!
பாசச் சாயம் பூசப்பட்ட
பாசாங்குப் பேச்சில்,
தன்மேல் தனக்கிருக்கும்
நம்பிக்கை சிந்தனையை
திருடிய திருட்டுத் தருணங்கள்..!!
போதும், இனியாவது விழிக்கலாம்..!!