விழித்தெழும் பெருநகரம்

பிரம்ம முகூர்த்தம் முடிந்து
அடுத்த ஷிப்டுக்காய் முகம்
சிவக்கும் கதிரவன்..
கிழக்கு நுழைவாயில் நோக்கி
கறுப்புச் சீருடை கழற்றும்
இரவுக் காவல்காரன் !

நகரத்தார்களின் பகலுணவாய்
மாறப் போவதையறியாமல்
கீச்சிக் கொண்டிருக்கும் பஞ்சுப்
பொதிக் கோழிகள் ஏற்றிய
வாகனங்கள் தூக்கக்கலக்கத்தோடு
நகர எல்லைக்குள் நுழைந்தன !

கொசுவிரட்டிப் புகை வியாபித்த
நுரையீரலுக்கு புத்துயிர் கொடுக்க
கொஞ்சமாவது நல்ல காற்றுக்காய்
"இப்போ இல்லேன்னா எப்போ"
பாடலை செவிக்குள் நுழைத்தபடியே
வீறுநடை பழகினர் நகர மாந்தர் !

நன்றி விசுவாசத்தோடு
சங்கிலியை இழுத்து கொண்டு
எஜமானர்களோடு காலைநடை
பயின்று போயின உயரின நாய்கள் !
பக்கத்து அசைவ உணவு விடுதி
குப்பைத்தொட்டியில் வீசிஎறிந்த
எஞ்சிய எலும்புத்துண்டுகளுக்காய்
சண்டையிட்டன தெருநாய்கள் !

கூட்டல் இரண்டு மாணவர்கள்
சிறப்பு கணித வகுப்புக்களுக்காய்
புத்தகமூட்டை ஏற்றிக் கொண்டு
மிதிவண்டி மிதித்துச் சென்றனர் !
தொலைக்காட்சி முந்தித் தந்த
அவலங்களையெல்லாம் அள்ளி
வரிவடிவமாக்கிய செய்தித்தாட்கள்
விநியோகத்துக்காய் தயாராயின !

குடிபோதைக் கணவர்களின்
அடிவாங்கிய தேகத்தோடு
குடிசைவாழ் தாய்குலம்
காலைக் கடன் கழித்திடவே
டப்பாக்களில் தண்ணீர் ஏந்தி
இருள்விலகும் முன்னரே
ரயில் பாதையோரத்து
மறைவு நோக்கிச் செல்லும்
அவலங்கள் அரங்கேறின !

முந்தயநாள் குப்பைகளை
மாநகராட்சி ஊழியர்கள்
பெருக்கிக் கொண்டே சுத்தம் செய்ய
அன்றையநாள் குப்பைகொட்ட
விழித்தெழுந்தது பெருநகரம் !

எழுதியவர் : ஜி ராஜன் (10-Feb-15, 1:46 pm)
பார்வை : 395

மேலே