மீளாத மீன்கள்-Mano Red

நான்கு பக்கமுள்ள
கண்ணாடிச் சுவர்..!!
பளிங்கு கற்கள் சூழ
பகட்டு வாழ்வு தான்,
சுதந்திரமற்று சுவாசிக்க
சுகாதாரக் காற்று தான்..!!

தொட்டிக்குள் நீந்துவதே
பிழைப்பாக இருப்பின்
எதிர்நீச்சலுக்கு வாய்ப்பில்லை,
முட்டி முட்டியே
மூக்குடைந்து திரும்புகிறது
ஒவ்வொரு முயற்சியிலும்..!

அப்படி யாராவது
அரவணைக்கட்டுமே,
வலைக்குள் சிக்கவே
வாயைப் பிளக்கிறது,..!!

வாசலை அலங்கரிக்கின்றன
நட்சத்திரம்,தேவதை,
தங்கம் என வசதி வாய்ந்த
வாசல் வழி மீளாத மீன்கள்..!!

வண்ணங்கள் பூசி
வட்டம் அடித்தாலும்,
மின்சார வெளிச்சத்தில்
மிரட்டி பார்த்தாலும்,
இருட்டடிப்பு செய்தவனை
தேடி கொண்டு தானிருக்கிறது..!

எழுதியவர் : மனோ ரெட் (16-Feb-15, 12:47 pm)
பார்வை : 90

மேலே