தும்பைத் தேடல் -ரகு

தும்பை பறித்துத்
தேன் உறிஞ்சிடவே
ஆடுகள் பத்தியக் காலமது !

சிறகுகள் விரித்து
எனக்கும் முன்பாகவே
வந்துரிஞ்சிவிடும்
வண்ணத்துப் பூச்சிகளை
கோபிக்கவிடாது அதன்
கொள்ளையழகு !

ஒரு சொட்டிலும்
மிகக் குறைவான தேனை
பகிர்ந்துகொள்வோம் நானும்
பாட்டாம் பூச்சியும்!

எனது தும்பைத் தேடலைத்
தெரிந்துகொண்டனவோ
என்னவோ
தும்பையருகில் மேயும் ஆடுகள்
தீர்க்கப்பார்த்துக் கத்தும்!

மொட்டை வெயில்
துரத்துகிற தருணத்தில்
ஒற்றை மரத்தில்
ஒழுகும் நிழலில்
தஞ்சம் புகுவேன்!

எந்த நம்பிக்கையில்
என் மடியில் கிடத்திப்போகுமோ
குட்டிகளைத் தாயாடுகள் !

குட்டிகளோடு
குதூகலிக்கும் தருணங்களில்
தும்பைப்பூக்கள்
தூர்ந்து போயின !

அதன்பிறகு
தும்பைக்காக அல்லாமல்
ஆடுகளுக்காகவே
மேய்ச்சலுக்குப் போனதாக
சொல்லிற்று
என் ஞாபகக்கிளறல்!

எழுதியவர் : அ.ரகு (21-Feb-15, 8:20 pm)
பார்வை : 118

மேலே