பெண் போனால்
"பொன் அந்தி மாலை பொழுது!"
கோவையிலிருந்து சுமார் 40 கி. தொலைவில் உள்ள பாலக்காடு என்னும் ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.
இரயில் நிலையத்தில் பயணச் சீட்டு எடுக்க -- "பொன் அந்தி மாலை பொழுது! ஏன் இந்த இன்பக் கனவு!", என்ற பாடலை ரீங்காரமிட்டபடி, சுமார் 30 அடி நீண்டிருந்த வரிசையில், ஏறத்தாழ கடைசி ஆளாக நின்றிருந்தேன்.
பலதரப்பட்ட மக்கள். நிறம் - மொழி, உடை - உயரம், கல்வி - கலாச்சாரத்தால் சிதறிக்கிடந்த மக்களின் நடுவே, கண்டேன் அவளை!
"பெண்! இல்லை, தேவதை!"
"வெள்ளை சுடிதார்!"
"மையிட்ட விழிகள்!"
கீழ் நெற்றியில் சிறிதாய், மிகச் சிறிதாய் ஒரு பொட்டு -- like a dot!
"ஆஹா! இவ்வளவு அழகான பெண்ணா?!". அந்த அனக்கோண்டா வரிசையின் கிட்டத்தட்ட மத்தியில், பயணச் சீட்டு எடுக்க அவளும் நின்று கொண்டிருந்தாள்.
எது எப்படியோ, "பாலக்காடு வரை பயணம் இவளோடு தான்" - இது கிரேக்க காதல் கடவுள் ஈரோஸ்' இன் மீது சத்தியம்.
பயணச் சீட்டு எடுத்துவிட்டு அவளை தொடர்ந்து சென்றேன். பிளட்பாராம் செல்லும் வழியில், படியில், பிளட்பாராத்திலும் அவள் பின்னால் நடந்தேன்.
"வெள்ளை உடை! அன்ன நடை!"
பிளட்பாராத்தில் வெகு தூரம் நடந்தாள், நானும் நடந்தேன்! ரசித்தேன்!
கிட்டத்தட்ட கடைசி இரயில் பெட்டியில் ஏறினாள். அவளைத் தொடர்ந்து நானும் ஏறினேன்.
அப்பொழுது! ஆஹா! அப்பொழுது என்னை ஒருக் கணம் பார்த்தாள். ஓரகண்ணால் அல்ல, அழகாக, ஆழமாக, கண்ணிமைக்காமல் ஆச்சரியமாக பார்த்தாள். பார்த்துவிட்டு ஒரு ஜன்னைலோர இருக்கையில் போய் அமர்ந்தாள்.
அப்பொழுது! அப்பொழுது உணர்தேன் நான் ஒரு பேரழகன். ஒரு பெண்ணைக் கண்ட மாத்திரத்தில் சுண்டி இழுக்க வல்ல பேரழகன்.
அந்த இரயில் பேட்டியின் கதவோரம், பயணம்தொரும் அவள் அழகை ரசிக்க ஏற்ற கோணத்தில் நின்றேன்.
மீண்டும் என்னை ஒரு முறை ஆச்சரிமாக பார்த்துவிட்டு, காதோரக் கூந்தலை சரிசெய்துவிட்டு, ஜன்னல் வழியாக எதையோ பார்த்தாள் அந்த தேவதை.
"அடர்ந்த கூந்தல்!"
"மையிட்ட கண்கள்!"
ரோஜா மலரை ஒத்த.........
......... என் ரசனையை குறுக்கிட்ட ஒரு மூதாட்டி,
"தம்பி! இது லேடிஸ் கம்பார்ட்மென்ட். தெரியுமா?!" என்று கேட்டார்.
நான் -- ?! ?! ?! ?! ?! - ஆழமாக, அழகாக, ஆச்சரியத்தோடு அந்த பெண் பார்த்த பார்வையின் அர்த்தம் அப்பொழுது தான் எனக்கு விளங்கியது. உங்களுக்கு?!

